கவிதைகள் • கெடமாட்டு கழுத்து மணிகள்


{கெடமாட்டு கழுத்து மணிகள்}

கரட்டு நிலத்தைக் குணப்படுத்த
சிறுவயதில் கூலியாகச் செல்கையில்
மணியை அகழ்ந்தெடுத்தேன்.
குளிப்பாட்டி
கூரை எறவாரத்தில் கட்டிய மணிக்குள்
இருட்டு உலகும்
வெளியே பிரகாச உலகும் உள்ளது.
மணியைப் பேச வைக்கும் காற்றுப்பொழுதில்
பேத்தியாளிடம் சொல்வேன்,
'தாத்தா செத்த பெறகு
இந்த மணிக்குள்ளதான் கவுளியா வாழுவேன்.
மணியோட வெங்கல ருசியில பசியாறி
உம்பேச்சுக்கு அப்பப்ப
சத்தங்கொடுப்பேன்'

••

கிடையிலிருந்து தொலைந்த கன்று
பாலிருள் மலங்காட்டுக்குள் மருளுகிறது.
ரத்தமணியின் பதட்டத்தைத்
தலை தூக்கிக் கணிக்கிறது
நெருப்பு வால் அரணை.

••

மேய்ச்சல் நில வெயில் மழைக்குத் தப்பித்து
கூடு பின்னி முடிக்கிறது
மணிக்குள் வாழும் பூச்சி.

•••

முத்துராசா குமார்

மிக்க நன்றிகள் • அரும்பு (பிப்ரவரி 2025)

நிழற்படம் • Sridhar Balasubramaniyam

Comments

Popular Posts