தூண்டாமணி விளக்கு

நீலம் பண்பாட்டு மையம் ஒருங்கிணைத்த 'வானம் கலைத் திருவிழா 2024'ல் ஓவியர், சிற்பக்கலைஞர் சரண்ராஜ் அவர்கள் 'தூண்டாமணி விளக்கு' எனும் தலைப்பில் தனது Art Installationஐ பொதுமக்களின் பார்வைக்கு வைத்திருந்தார். காதலித்த ஒரே காரணத்திற்காக சாதியின் பெயரால் இதுவரை கொல்லப்பட்ட இதயங்களின், ஆன்மாக்களின் நினைவு கூறலே இந்த கலைப் படைப்பு.

கல்விளக்கு எரிந்தபடி நிற்க, சுடுமண் கைகள் குவிந்திருக்க, சதா ஒலித்துக் கொண்டேயிருக்கிறது ஒப்பாரி.

ஒப்பாரி கலைஞர் பாண்டியம்மாள் ஈரக்கொலையின் அழுகையிலிருந்து மாரடித்து பாட அதன் வரிகளை சாம்பலிலிருந்து எழுதியிருந்தேன்.


நம்ம சனுச்சு வருவோமே
சனுச்சு வருவோமே
அத்தாத்தென்டி ஆகாசமா
ஆழமான சமுத்திரமா
நம்ம காதலிச்சமே 
நம்ம காதலிச்சமே
கத்தாழ வளவளப்பா
கள்ளிப்பூவு சொலிசொலிப்பா
நம்ம ஒன்னுக்கொன்னு ஆச வச்சோமே
உருத்தாதான் காதல் செஞ்சோமே
அந்த கம்மா தாண்டும் பட்சிக
கருமேகக் கூட்டங்க
நம்ம காதலுக்கு சாட்சிக
கொண்டு கொடுத்த நேசத்துக்குத் தொணைக
மண்விளக்கும் மண்டியிடும் 
நம்ம காதலோட வெளிச்சத்துக்கு
கண்ட கனாவோட கனத்துக்கு
மாடாக்குழி இடிஞ்சுருச்சே
மரமொன்னு முறிஞ்சுருச்சே
கோவுரந்தான் சரிஞ்சுருச்சே
கரும்புந்தான் கசந்துருச்சே
வெலமெடுத்து வந்தாக
வெறியேறி வந்தாக
நெஞ்சம் பொடைக்க பார்த்தோமே
பிரியாம நின்னோமே
அந்த பொல்லாத சாதிவெசம்
பொட்டல்ல போற சாதிப்பாசம்
நம்ம காதலதாப் பொசுக்கிருச்சே
துள்ளத்துடிக்கக் கொன்னுருச்சே
மூச்சடச்சு கொன்னாக
நம்ப வச்சுக் கொன்னாக
கத்த கத்த கொன்னாக
நஞ்சூத்தி கொன்னாக
நாடி அடங்க கொன்னாக
குந்தாங்கூறா கொன்னாக
கூட்டஞ் சேர்ந்து கொன்னாக
கூடப்பெறந்தவுக கொன்னாக
பெத்தவுக கொன்னாக
வம்மம் வச்சு கொன்னாக
அந்த அழகருமல தீர்த்தமா 
அடமழச் சத்தமா
ஆறா ஓடுச்சே நம்ம ரத்தம்
அனாதையா நின்னுச்சே நம்ம முத்தம்
வாய்க்கரிசி போட்ட சனம் வங்கொலையா அழுகுதம்மா
மண்ணள்ளி போட்ட சனம் மாரடிச்சு தேம்புதம்மா
கொள்ளியள்ளி போட்ட சனம்
உக்கி உக்கி மருகுதம்மா
நம்ம சனுச்சு வருவோமே
நம்ம சனுச்சு வருவோமே
இந்த பாவி பரப்பா ஊருல
சாதியால செத்த நம்ம
மறுபடியும் பெறந்து வருவோமே
நம்ம தழஞ்சு வருவோமே
நல்லா தழஞ்சு வருவோமே
வெதநெல்லா வருவோமே
வெள்ளி மின்னலா வருவோமே
இந்த தீட்டு பார்க்கும் ஊருல
சலிக்க சலிக்க காதலிக்க
திண்ணக்கமா வருவோமே


- முத்துராசா குமார்

Comments