அபராதிகளின் காலம்
1949ம் ஆண்டு, நவம்பர் 25ம் தேதி, அரசியலமைப்புச் சட்ட அவையில் அண்ணல் அம்பேத்கர் ஆற்றிய உரை.
"இந்தியர்கள் தமது சமய நம்பிக்கைகளை விட இந்த நாடு உயர்ந்தது எனக் கருதப்போகிறார்களா? அல்லது இந்த நாட்டை விடத் தமது நம்பிக்கைகளே உயர்ந்தவை எனக் கருதப் போகிறார்களா? எனக்குத் தெரியாது. ஆனால் இதை மட்டும் உறுதியாகக் கூற முடியும். இந்த அரசியல் கட்சிகள் இந்த நாட்டை விடத் தமது சமய நம்பிக்கைகளே உயர்ந்தவை எனக் கருதினால் நமது சுதந்திரம் மீண்டும் நெருக்கடிக்கு ஆளாகும். அதை நாம் நிரந்தரமாக இழந்துவிட நேரிடும். அந்த ஆபத்துக்கு எதிராக நாம் அனைவரும் விழிப்போடு காவல் காக்க வேண்டும். கடைசித் துளி ரத்தத்தையும் தந்து சுதந்திரத்தைக் காப்பதற்கு உறுதியோடு இருக்க வேண்டும்"
- எழுத்தாளர், நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் அவர்கள் எழுதிய 'அபராதிகளின் காலம் (குடியுரிமை திருத்தச் சட்டம் - ஒரு பார்வை)' நூலிலிருந்து.
எழுந்தது எதிர்ப்புக் குரல், குடியுரிமைத் திருத்தச் சட்டம், ஒன்பது திருத்தங்கள், அஸ்ஸாமும் குடியுரிமை சிக்கலும், உள்துறை அமைச்சகத்தின் குறிப்பாணைகள், பாரளுமன்ற கூட்டுக் குழுவில் நடந்தது என்ன, குடியுரிமை: அரசியலமைப்புச் சட்ட அவையில் நடந்த விவாதம், சட்டவிரோத சட்டம், இந்தியாவில் அகதிகள், அகதிகள் மீது அக்கறையில்லாத இந்திய அரசு, ஈழத் தமிழ் அகதிகள், ஈழத் தமிழ் அகதிகள் சில முன்னெடுப்புகள், மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்வி, சமத்துவம் என்பது அடிப்படை அம்சம், ஈழத் தமிழர்களின் கதி என்னவாகும்?, அடுத்து என்.ஆர்.சி அதற்கு முன் என்.பி.ஆர், பிரதமரின் பொய்யுரை, என்.பி.ஆர் என்ன சொல்கிறது, சந்தேகப் பட்டியல், சட்டப்படி மரணம், அரசாங்கத்தின் உள்நோக்கம் என்ன?, மத்திய அரசுக்கு மூன்று கோரிக்கைகள், தமிழக அரசுக்கு மூன்று கோரிக்கைகள், இரண்டாவது சுதந்திரப் போராட்டம்.
இப்படியாக மொத்தம் 24 தலைப்புகளில் குடியுரிமைத் திருத்தச் சட்டம்(CAA), தேசிய குடிமக்கள் பேரேடு(NRC), தேசிய மக்கள்தொகைப் பதிவேடு(NPR) பற்றிய ஒரு எளிமையான அறிமுகத்தை அதேவேளையில் அரசியல் வரலாற்றுத் தகவல்கள், புள்ளி விபர ஆதாரங்களோடு 'அபராதிகளின் காலம்' என்ற பெயரில் வெளிப்படையாக எழுதியுள்ளார் ரவிக்குமார்.
1955ம் ஆண்டு குடியுரிமைச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. அதிலிருந்து 2015ம் ஆண்டு வரை ஒன்பது முறை திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த காலகட்டங்களில் குடியுரிமைச் சட்டத்தில் செக்ஷன், சப் செக்ஷன், க்ளாஸ்களில் கொண்டுவரப்பட்ட மாற்றங்கள், அதற்கு நடந்த எதிர்வினைகள், கொடுக்கப்பட்ட விலைகள், அரச பயங்கரவாதங்கள், வழக்குகள், அவையில் நடந்த உரையாடல்கள், ஆண்டு வாரியாக குடியுரிமை வழங்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, பாஸ்போர்ட் சட்டம், அயல்நாட்டவர் சட்டம் என்று விரிவாகப் பதிவு செய்துள்ளார். மேலும் தமிழகத்தில் ஏற்கனவே வதைமுகாம்களாக இருக்கும் ஈழத் தமிழர் முகாம்களை எப்படி இந்த திருத்தச் சட்டத்தின் மூலம் முற்றிலுமாக அழிக்கப் பார்க்கிறார்கள் என்பதைப் பற்றியும் குறிப்பிட்டுள்ளார்.
பா.ஜ.க, காங்கிரஸ் இரண்டு கட்சிகளுமே சொந்த மக்களை வைத்து இந்த சட்டத்தின் வாயிலாக சுய லாபமும், மத லாபமும் அடைந்துள்ளனர் என்பது மட்டும் இந்த நூலின் மூலமாக அப்பட்டமாகத் தெரியவருகிறது. தெப்பத்தின் ஆழத்தில் மூழ்கி தத்தளிக்கையில், கைகளுக்கு நீர் மட்டுமே பிடிமானமாக கிடைக்குமல்லவா, அம்மாதிரியான உணர்வுதான் இந்திய தமிழக அரசியல் சூழலில் எளியவனின் அன்றாடமாக இருக்கிறது.
இந்தியாவை ஆளும் மோடி தலைமையிலான இந்து மதவெறி கும்பல்களின் அரச பயங்கரவாதத்திடமிருந்து தங்களது உயிரையும், உரிமைகளையும், இறையாண்மையினையும், சகிப்பையும், ஒற்றுமையினையும், மதச்சார்பின்மையினையும் காப்பாற்றிக் கொள்ள இந்திய மக்கள் நித்தமும் சிந்தும் உதிரத்தால் நாடே ரத்தக் கவுல் அடிக்கிறது. இந்த வாடையை நுகர்ந்து ரசித்திட அவர்கள் இன்று நேற்றுத் திட்டமிடவில்லை. அவர்களின் மதவெறி சித்தாந்தத்தை உருவாக்கியத் தருணத்திலிருந்தே ஆயத்தமாகிவிட்டார்கள்.
தமிழகத்தின் சமவெளிகள், மலைப் பிரதேசங்கள், நெய்தல் நிலம் என்று குக்கிராமங்கள் வரை இந்து ராஜ்யக் கொடிகள் முளைக்க ஆரம்பித்து விட்டன. அதற்கு அந்தந்த வட்டார ஆளும் சாதிகளை துணைக்கு வைத்துக் கொள்கின்றனர். அவர்களும் மந்தையாடுகள் போன்று காவிக் கும்பல்களுக்குப் பின்னால் போய்க் கொண்டிருக்கின்றனர். பட்டப் படிப்புகள், பட்ட மேற்படிப்புகள் படித்த நண்பர்களே 'இந்துக்களை தவிர இங்கு யாரும் இருக்கக் கூடாது. மற்றவர்களை அடித்து விரட்ட வேண்டும்' என்று சொல்லுகின்றனர். அரசுகளே மக்களைக் கொல்லும் சம்பவங்களைப் பார்த்துப் பூரித்துப் போய் 'இந்தியன்' என்று மார் தட்டுகிறார்கள். அவர்களிடம் மணிக்கணக்காக மிகவும் அடிப்படையான இந்திய அரசியலமைப்பின் உரிமைகள், சகிப்புகள், மனிதம் பற்றி பேசினால் அவர்கள் ஆரம்பித்த இடத்திற்கே வந்துவிடுகின்றனர். அந்தளவிற்கு சக மனிதம் சார்ந்த வெறுப்புகளை இந்துத்துவாவினர் நுட்பமாக, வெளிப்படையாக அவர்களுக்கு ஊட்டி வருகின்றனர். கிராமங்களில் இந்தப் போக்கு அதிகமாகி வருகிறது. இந்துத்துவாக்காரர்கள் சொல்லிக் கொடுத்த அதிபுனைவுக் கதைகளை நண்பர்கள் சொல்லி வாதிடுகையில் 'அபராதிகளின் காலம்' போன்ற எளிய நூல்களிலுள்ள உண்மையான, செறிவான சாராம்சங்களை மறுபதில்களாகக் கொடுத்து அவர்களைத் தெளிய வைக்க வேண்டும்.
பிளவுகளைக் கடந்த மனித சமூகத்தின் ஒற்றுமையின் மூலமாகத்தான் விழிப்பும், விடுதலையும் கிடைக்கும் என்பது எக்காலத்தும் உடைக்க முடியாத சூத்திரம். அதைப் பயன்படுத்த வேண்டிய ரண அழுத்தத்தில் இருக்கிறோம்.
- முத்துராசா குமார்
நூல் : அபராதிகளின் காலம்
(குடியுரிமை திருத்தச் சட்டம் - ஒரு பார்வை)
எழுத்தாளர் : ரவிக்குமார்
வெளியீடு : மணற்கேணி
தொலைப்பேசி : 9443033305
Comments
Post a Comment