தண்ணீரின்றி
வெறும் மூலிகைச் சாறிட்டுப் பிசைந்த
மண்ணிலிருந்து
எனது உருவத்தை
பொம்மையாச் செதுக்குவேன்.
சுடாத அந்தப் பச்சை உடம்பில்
செய்வினை ஊசிகளால் குத்தி குத்தி
என்னை நானே வதைத்து
சுகம் கொள்வேன்.
மற்றபடி
எந்தப் போதை வஸ்துக்கும்
அடிமையில்லை.
--
இளவட்டக்கல்லின் உள்மையத்தில்
சுருண்டபடியும்
நெட்லிங் மரத்துக்குள்
நின்றபடியும்
யார் முகத்திலும் விழிக்காது
வைராக்கியமாக வாழ்ந்தேன்
போன ஜென்மத்தில்.
பூச்சிகளின் கால்கள்
கல்லிலேறி கடக்கையில் உடல் கூசும்
வெளியே சொரிய முடியாது.
வேரிலிருந்து என் வழியே
நீர் கடத்தப்படுகையில்
நரம்புகள் அறுபட குளிர் வாட்டும்
கம்பளியைப் போர்த்த முடியாது.
அந்த ஜென்மத்தில்
வேறெந்தத் துயருமில்லை.
--
சொப்பனச் சித்திரம்
களவுக்கான அறிகுறியாகத் தெரிகிறது.
பேட்டரிக் கட்டைகளின் ஒளியில்
நம்பிக்கையில்லை.
தாத்தனின் வாக்கைச் சொல்லியபடியே
எனது காதுகளைத் திருகினேன்.
சிம்னி விளக்கென
உச்சந்தலைச் சுழியில் திரி உயர்ந்தது.
அல்சர் காந்தலால் சுடரேற்றிய
வெளிச்சத்தில்
நடுச்சாம வாத்துப் பட்டியை
கூனாகி காவல் காக்கிறேன்.
- முத்துராசா குமார்
- நன்றி - இந்து தமிழ் திசை பொங்கல் மலர் ஜனவரி 2020
Comments
Post a Comment