இருள்


'இன்னும் நாலஞ்சு வருசத்துக்கு டியூ கட்டனும். அதுவரைக்கும் உயிரோட இருக்கேனா இல்லையான்னே தெரியல. இப்பலாம் அம்பது வயசுக்கு மேல உயிரோட இருக்குறதே பெரிய விசயமா இருக்கு தம்பி. கஷ்டப்பட்டு
படிக்கவச்சு பிள்ளைங்களுக்கு அறிவக் கொடுத்துட்டதா நெனைக்கிறேன். அதை
நெனச்சு முன்னாடில்லாம் ரொம்ப சந்தோசப்படுவேன், பெருமைப்படுவேன். இப்போலாம், ஏன்டா அந்த அறிவு  அவுங்களுக்கு வந்துச்சுன்னு கோபமா இருக்கு தம்பி.

அந்த அறிவுனாலதான் குடும்ப கஷ்டம் அவுங்களுக்கு புரியாம போச்சோன்னு தோனுது. ஒவ்வொன்னா கைமீறி போயிட்டாங்க. மனுசன் முதல் தடவை வாழ்க்கையில ஒடஞ்சு மீண்டு வர்றதுதான் கஷ்டம்.
அடுத்தடுத்து ஒடையும் போது
மனசு மரத்துடுது. என் கண்ணுல எப்பவும் கண்ணீர் வந்துட்டுதான் தம்பி இருக்கும். யாருக்கும் தெரியாது. ஆளே இல்லாத எடத்துல வண்டியை நிப்பாட்டி அழுதுட்டு கிளம்பிருவேன். இல்ல ஓட்டும் போதே அழுவேன் தம்பி' என்று வழியில் வந்த இரண்டு தேவாலயங்களைப் பார்த்து சிலுவைக்குறிகளை நெஞ்சில் போட்டுக்கொண்டே பேசினார் லிசோரியா.

'இங்க என்னோட பேருனாலேயே
வேலைக் கேட்டு போன எடத்துல எல்லாம் தயங்குனாங்க. வேலை கிடைக்கல. அதுனாலேயே குமாருன்னு பேரை மாத்திக்கிட்டேன். குமார்னு சொன்னாதான் இங்க எல்லாருக்கும் தெரியும் தம்பி'

கோவை கருமலை அடிவாரம் நோக்கி,
எந்த வாகனமும் இரவு 11 மணிக்கு மேல் என்னை ஏற்றிச்செல்லவில்லை. மறுப்பு சொல்லாமல் உடனே வந்த லிசோரியா, கேரளாவில் பிறந்து கோவையில் வளர்ந்தவர்.

ஆட்டோக்குள் சின்ன லைட் வெளிச்சம் கூட இல்லை. முழுக்க இருள். இவ்வளவு விஷயங்களையும் என் முகம் பார்த்து பகிரவில்லை. தார்சாலையோடு பேசியபடியேதான் வண்டியை ஓட்டினார்.  இறங்கிய இடம் வந்தபின்னர்தான் அவரது முகத்தை கொஞ்சம் வெளிச்சத்தில் பார்த்தேன், அவரும் பார்த்தார். கலங்கி உட்கார்ந்திருந்தார்.

என்னுடனான பயணநேரம் முழுவதும் அவர் லிசோரியாவாகத்தான் வந்தார். பேசினார். திரும்பி தனியே போகும்போது குமாராக போவாரா? லிசோரியாவாகா போவாரா? எனத் தெரியவில்லை.
இன்னும் கொஞ்ச தூரம் பயணித்திருந்தால் லிசோரியாவின்
மிச்ச வாழ்க்கையையும் என்னிடம் சொல்லிவிட்டு குமாராகவே வண்டியைத் திருப்பியிருப்பார்.


- முத்துராசா குமார்


Comments

  1. //மனுசன் முதல் தடவை வாழ்க்கையில ஒடஞ்சு மீண்டு வர்றதுதான் கஷ்டம்.
    அடுத்தடுத்து ஒடையும் போது
    மனசு மரத்துடுது. //

    குமார் சொன்னது வலிச்சாலும் அது உண்மை தானே .. உடைந்து உடைந்து பின்னாளில் உடைவதை பற்றிய அலட்டல் எதுவும் இன்றி சின்ன மன அதிர்வு கூட இன்றி எதிர்கொள்ள முடிகிற பக்குவம் தான் கடந்து வந்த வாழ்க்கை கொடுத்திருக்கும் பாடம் போல ...

    குமாருடனான பயண துயரம் சிறிதெனினும் , லிசோரியாவின் நீண்ட பெருமூச்சு கேட்கிறது முத்து ...

    ReplyDelete

Post a Comment