எனது ஏகாதிபத்திய 
ராசா ராணியின் - வகையறாக்களின்
கொடுஞ்சாட்டைகள் தரும் வரித்தழும்புகளைத் 
தாங்கிட முடியவில்லை மைக்காரியே.
இதோ அவர்களின் 
காலடிமண், தலைமயிர், தீட்டுத்துணிகள்
உனது துர்சக்திகளுக்கு 
இவற்றைப் படையலிட்டு 
இனியெவர் கைகளுக்கும் 
அச்சாட்டைகள் போகாது முடமாக்கி 
நல்செய்வினை பண்ணிடு தாயே.
எனது வெள்ளரி விதைகளையும்
கரம்பையினையும் 
காணிக்கையாகக் கொடுக்கிறேன்.
விளைவித்து உண்டு
உனது உடல் உஷ்ண சீக்கைப் போக்கிக்கொள்.

--

பந்தயத்தில் ஜெயித்தத் தாவரங்கள் 
விலங்குகளாக உருமாறி ஓடியாடின.
வீழ்ந்த விலங்குகள் 
தாவரங்களாக மாறி ஒரேயிடத்தில் நகராது ஊன்றின. 
மனிதர்களாக மாறிட இருவரும் 
எப்போதும் விரும்பவில்லை.

-  முத்துராசா குமார்

- நன்றி - பேபல் கலை இலக்கிய இதழ், ஜனவரி 2020 




















Comments

  1. //மனிதர்களாக மாறிட இருவரும்
    எப்போதும் விரும்பவில்லை.//

    மனிதன் மகா சல்லிப்பயல் என்பது அவைகளுக்கும் தெரிந்திருக்கும்போல முத்து ....

    முடிந்தால் நான் மாறிட முயல்வேன் புகைப்படத்தில் அசையாது உறைந்திருக்கும் மரக்கிளையெனவோ , அல்லது அதன் மீது அசங்காது அமர்ந்திருக்கும் ஒரு சிறு குயிலெனவோ...

    ReplyDelete

Post a Comment