1)
ஆல்கஹாலால் தன்னைத்தானே உள்ளுக்குள் எரித்துக்கொண்டாள் காதலி.
வெயிலில் வதங்கிய
கனிகளைப் போலான
அவளது உள்ளுறுப்புகளைச்
சாக்குப் பையிலிட்டுச் சுருட்டினேன்.
அரளிமரங்கள் சூழ்ந்த இடுகாட்டில்
காதலியைப் புதைத்துவிட்டு
அவள் மேல் சம்பங்கியை நட்டேன்.
பச்சையம் ததும்பும் அரளிமரத்தின்
உச்சி வாப்பில் பையை
இறுக்கிக் கட்டினேன்.
மரத்தில் பால் பொங்கி வடிய வடிய
புதைகுழிக்குள்ளிருந்து
சம்பங்கி வேருக்கு பால் சுரக்கிறது.
2)
கலைப் பாம்பினை அடிக்கடி மிதிக்கிறேன்.
கொத்துதலில் சோர்வடைந்த பாம்பு
'ஆ' காட்டச் சொல்லி
மொத்த நஞ்சினையும் ஊட்டிவிட்டது.
தலைக்கேறிய நஞ்சு
திகட்ட திகட்ட தளும்புகிறது.
குளியல் சோப்பில்
ஒட்டியிருக்கும் மயிர்கள்
ஒவ்வொரு தளும்பலுக்கும்
புதுப்புது நவீனக் கோட்டோவியமாக
தினமும் காட்சியளிக்கிறது.
3)
மருத்துவரிடம் ஆலோசித்து
சத்தான கண்களை அணிந்து கொண்டது
எனது நோய்மைகால மூக்குக் கண்ணாடி.
மூக்கின் வழியே இறங்கும் கண்களை
ஒற்றை விரலால் அடிக்கடி மேலே ஏற்றிவிடுவது -
திசைக்கொன்றாக உருண்டோடிய கண்களைத் தேடிபிடிப்பதற்குள்
முழு குருடாவது -
கீழே விழுவதைத் தடுக்க
கண்களிரண்டில் கயிறுகட்டி கழுத்தில் தொங்கச்செய்வது -
சன்னலோர மேஜையில்
காபி - புத்தகம் - கண்களை வைத்து
புகைப்படம் எடுப்பது -
இந்தப் பழக்கங்கள் சீக்கிரமே தொற்றின.
- முத்துராசா குமார்
- நன்றி - நடுகல்
(இலையுதிர் கால இதழ் 7- 2020)
- Art by Jibin Babu
Comments
Post a Comment