காலஞ்சென்ற எனது அம்மாச்சி மீனா, பரவை முனியம்மாவின் தீவிர ரசிகை.
முனியம்மா பாடத் தொடங்கிய காலத்திலிருந்தே அவரது பாடல்கள் என்றால் அம்மாச்சிக்கு மிகவும் பிடிக்கும். முனியம்மாவை அதைவிட பிடிக்கும்.சில வருடங்களுக்கு முன்புவரை எங்கள் பகுதிகளின் திருவிழாக்கள், கேதங்களில் முனியம்மாவின் நாட்டார் தெய்வ பாடல்களும், தெம்மாங்குகளும், ஒப்பாரிகளும் இல்லாமல் இருக்காது. குறிப்பாக, நையான்டிமேளம் போன்ற தோல் வாத்தியங்களோடு முனியம்மாவின் கருப்புசாமி பாடல்கள் திருவிழாவை வேறொரு உருவேற்றத்துக்கு கூட்டிச் செல்லும்.
தமிழகத்தின் எண்ணிலடங்கா ஊர்களுக்குப் போய் நேரடியாக பாடியுள்ளார். பிறகு, ரீல் கேசட் வாழ்வுமுறையில் முனியம்மாவின் பாடல் கேசட்டுகள் அமோக விற்பனையான காலமிருக்கிறது. கேசட்டுகளில் ஏற்கனவே இருக்கும் பாடல்களை அழித்து முனியம்மாவின் பாடல்களைப் பதிந்த சம்பவங்களும் இருக்கின்றன. சினிமா அடையாளம் என்பதெல்லாம் ரெண்டாம் பட்சம்தான். முனியம்மாவிற்கென்று மதுரை சுற்றுவட்டாரங்களில் பெரும் ரசிக கூட்டம் இருந்தது.
ரீல் கேசட்டுகள் மரிக்கத் தொடங்கிய காலத்தில், முனியம்மாவின் பாடல்வரிகளும், குரலுமிருந்த ரீல்களை கண்மாய்களில் கம்பூன்றி குறுக்கும் நெடுக்குமாக கட்டினோம். சூரியகாந்திகளுக்கும், வெள்ளரிப் பழங்களுக்கும் படையென வரும் பறவைகளை முனியம்மாவின் ரீல் மினுமினுப்புகள் அதட்டாமல் திருப்பியனுப்பும்.
கீழேயிருக்கும் ரீல் கேசட் T-series வகையைச் சேர்ந்தது. விலை 27 ரூபாய். 'கிராமத்து வாசனை' என்ற தலைப்பில் பரவை முனியம்மாவின் பாடல்கள் பதிந்த கேசட். அம்மாச்சி தனது இறுதிகாலத்தில் அடிக்கடி போடச்சொல்லி கேட்பாள். பதினான்கு வருடங்களுக்கு முன்னால் அம்மாச்சி இறந்தபோது, 'பிளிப்ஸ் டேப் ரெக்காடரில்' ஓடிக்கொண்டிருந்த இந்தக் கேசட் சக்கரங்களும் நின்றன.
உலகெங்கும் மனிதயினங்கள் நோய்கிருமியால் செத்திடும் இந்த ஊரடங்கு காலத்தில் ஒப்பாரிக்கு கூட ஆளில்லாது, காலமாகிவிட்டார் முனியம்மா. தனிமையிலிருக்கும் இந்த நேரத்தில் அம்மாச்சியும், முனியம்மாவும் நெஞ்சிலேறி கனத்துக் கிடக்கின்றனர். நின்றுபோன இந்த ரீல்கேசட்டின் சக்கரங்களை பெரும் கால இடைவெளிக்குப் பிறகு, விரல்களால் சுழற்றிக் கொண்டிருக்கிறேன்.
பரவை முனியம்மா பாடவில்லை.
- முத்துராசா குமார்
Comments
Post a Comment