சித்தாள்களாகிய நானும் அப்பாவும்
வேலை முடிந்தவுடன்
நிறை ஊருணியைப் போன்று
தளும்பல் போதையில்
இருப்பிடம் அடைவோம்.
சதுரமான தகரசீட்டுக்குள்
நாளின் வெக்கையை உட்கிரகித்தபடி
இரைத் தயாரிப்பாள் அம்மா.
சிமெண்ட் கலவையில் ஊறிடும்
பொடி ஜல்லிக்கற்கள்
நறுக்கப்பட்ட
நமது ஈரல்கள் மகனே என்று
தலைத் தொங்க வருணிப்பார் அப்பா.
மூவரது சட்டைகளில் பரவிடும்
வியர்வையின் கரிப்பு ரேகைகள்
நம் வாழ்வின் வரைபடமென
தள்ளாடுவேன் நான்.
நிலைக்கதவை ஊன்றும்
நன்னாளினைப் போல
எங்களிருவரையும் நிமிர்த்தி
சோறூட்டுவாள் அம்மா.
அடுப்பும் நானும் ஒன்றுதானென்ற
உவமையைவிட வேறென்ன
சொல்லிவிடப் போகிறாள் அம்மா.

- முத்துராசா குமார்

Comments