உடம்பில் 9 தசைகளை அரிந்து நவகண்டச் சிற்ப சடங்கு! - சோழவந்தான் சிற்ப பின்னணி




உணவு, மொழி, கல்வி, நாட்டார்தெய்வ வழிபாடுகள், பன்முக கலாச்சாரம் என்று எல்லா அடுக்குகளிலும் சகிப்புத்தன்மைகளைச் சிதைத்து  அதிகாரங்கள் வாயிலாக ஒற்றைக் கலாச்சாரத்தைத் திணிக்கும் வன்செயல்கள், இன்றைய இந்திய தமிழக அரசியல் சூழலில் வெளிப்படையாகவே நடந்துவருகின்றன. திரிக்கப்பட்ட பொய்யான வரலாறுகளைப் பரப்பி தமிழ் நிலத்தினுடைய தொல் அடையாளங்களை முற்றிலும் மறைக்கத் துடிக்கும் செயல் அவற்றில் ஒன்று. 


இப்போதைய காலகட்டத்தில் நம்மைச் சுற்றியிருக்கும் சின்னச்சின்ன தொல் எச்சங்களைக் கூட கூடுதலாக அறிந்துகொள்ள வேண்டிய பொறுப்புணர்வில் இருக்கிறோம். ஊர் பெருமைகள் என்ற குறுகிய வட்டத்தில் மட்டும் அந்த அடையாளங்களை அடைத்துவிடாமல், அவற்றைப் பாதுகாத்து சமகால சமூக அரசியல், பண்பாட்டோடு தொடர்புபடுத்தி உரையாட  வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். தமிழகத்தின் ஒவ்வொரு சிற்றூர்களும் ஏராளமான தொல் அடையாள வரலாறுகளைத் தன்னகத்தே வைத்துள்ளன.


சமீபகாலத்தில் எனது ஊரில் உள்ள பெரும் தொல் அடையாளமொன்றைக் கண்டடைந்தத் தருணம் மிகவும் தேடலான சுவாரஸ்யமாக அமைந்துவிட்டது.


நாட்டார் வழக்காற்றியல், கல்வெட்டியல், சிற்பவியல், கோவில் கலை என்று பல தளங்களில் ஆய்வுகள் மேற்கொண்டுவரும் பேராசிரியர் அ.கா. பெருமாள் அவர்கள், 'தன்னை அழிப்பதும் அரசியல்தான்' என்ற ஆய்வுக் கட்டுரையொன்றை விகடன் தடம் இதழில் 2018ம் ஆண்டு அக்டோபரில் எழுதியிருந்தார். 


தற்கொலை (sucide) என்ற வார்த்தை எப்போது, யாரால், எதில் பயன்படுத்தப்பட்டது, தற்கொலைகளை எப்படி சமூகப் பண்பாட்டு ரீதியில் பார்ப்பது, இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் தற்கொலை என்ற செயலுக்குப் பின்னால் உள்ள வரலாறுகள், அரசியல் அல்லது பிற தலைவர்களுக்காக தன்னை மாய்த்துக் கொள்ளும் பழக்கம் எப்படி தமிழனின் தொன்றுதொட்ட எச்சப் பண்புகளாக இருந்து வருகிறது, உயிரை விட்டவர்களுக்கு மானியத் தொகை, அரசு வேலைகள் வழங்குவது எப்படி நமது ஆதி மரபின் தொடக்கமாக இருந்து வருகிறது போன்ற விஷயங்களை சங்கப் பாடல்கள், கல்வெட்டுகள், சோழர்கள் பாண்டியர்கள் காலம், சிற்பங்கள், வரலாற்று ஆய்வுகள், பயண அனுபவங்கள், ஆய்வுக் கட்டுரைகள், வாய்மொழி கதைகள் - பாடல்கள், புகைப்படங்கள், நடப்புகால சாட்சியங்கள் என பல ஆதாரங்களை முன்வைத்து மிக விரிவாக அந்த ஆய்வுக் கட்டுரையை எழுதியிருப்பார்.


'தன்னைப் பலிகொடுத்து நேர்ச்சையை நிறைவேற்றுவதை அன்றைய ஆட்சியாளர்கள் உயர்ந்த பண்பாகக் கருதியதால் சிற்பமாக வடித்திருக்கின்றனர்' என்று அக்கட்டுரையில் குறிப்பிடும் அ.கா. பெருமாள் 'தலைவனுக்காகத் தன்னை பலிகொடுப்பதும் பலியானவர்களின் குடும்பத்திற்கு உதிரப்பட்டியாக நிலங்கள் கொடுப்பதும் பற்றிய விபரங்கள் கல்வெட்டுகளில் உள்ளன. 'மேலும் 'துர்கா தேவிக்கோ அரசனுக்கோ தன்னை பலிகொடுக்கும் நிகழ்வுகளைக் காட்டும் நவகண்டச் சிற்பங்கள் கிடைத்துள்ளன, உடம்பின் 9 பகுதித் தசைகளை அரிந்து நேர்ச்சையைத் தீர்க்கும் சடங்கு கி.பி 7ம் நூற்றாண்டிலிருந்தே கிடைக்கின்றது' என்று ஆவணம் செய்திருக்கிறார். தமிழகத்தின் பல இடங்கள், கோவில்களில் இந்த 'நவகண்டச் சிற்பங்கள்' இன்றும் இருக்கின்றதென பதிவு செய்பவர், தென்கரை மூலநாதசுவாமி கோவிலிலும் ஒரு நவகண்டச் சிற்பம் உள்ளதென குறிப்பிட்டிருந்தார்.


மதுரை மாவட்டம் சோழவந்தானுக்கு அருகேயுள்ள தென்கரை எனும் கிராமம்தான் எனது சொந்த ஊர். வைகையாறு சோழவந்தானையும் தென்கரையையும் இரண்டாகப் பிரிக்கிறது. சோழவந்தானிலிருந்து வைகையாற்றின் எதிர்கரையில் தென்கரை இருக்கிறது. பலதரப்பட்ட சமூகப் பிரிவினைச் சார்ந்தவர்கள் வசிக்கும் ஊரான தென்கரை ஏராளமான தொன்மைகளையும், நீர் வளத்தையும், நில வளத்தையும் உடையது. பல காலகட்டங்களில் இந்த ஊருக்குப் பல பெயர்கள் இருந்துள்ளன. மூலநாதரும், அகிலாண்டேஸ்வரி அம்மனும் இருக்கும் மூலநாதசுவாமி  கோவில் பராக்கிராம பாண்டியனால் கி.பி 1087 லிருந்து  1104க்குள் கட்டப்பட்டுவிட்டதை அங்குள்ள கல்வெட்டுகள் உணர்த்துகின்றன. (சான்று -  'பராக்கிராமபாண்டியபுரம்' நூல் - பக்கம்: 56 - மா.சந்திரமூர்த்தி, வெ.வேதாசலம்). ஏராளமான சிற்பங்கள், கல்வெட்டுகள் நிறைந்த இந்தக் கோவிலை மையப்படுத்தித்தான் ஊர் வடிவமைப்பு இருக்கும். தற்சமயம் இந்தக் கோவில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.



அ.கா. பெருமாள் அவர்களின் 'தன்னை அழிப்பதும் அரசியல்தான்' ஆய்வுக் கட்டுரையைப் படித்தவுடன்  மூலநாதசுவாமி கோவில் முழுக்க அந்த நவகண்டச் சிற்பத்தைத் தேடினேன். கிடைக்கவேயில்லை.  கோவிலின் சன்னதி முன்பு சிமெண்ட்டால் போடப்பட்ட பொட்டல் களத்தில் நாடகமேடை இருக்கிறது. விவசாயத் தேவைக்கும், விழா காலங்களும் அந்தக் களம் பயன்படும். ஒரு காலைப் பொழுதில் எனது அம்மாவுடன் கோவில் சன்னதியைக் கடந்து செல்லும்போதுதான் 'ஒருவேள இந்த சாவாங்கல்லுதான் நீ தேடுற செலயா இருக்கோமோ. இதப் பாருடா' என்று சொன்னார். அம்மா காட்டிய அச்சிலைக்கு ஊரில் சொல்லும் பெயர் 'சாவாங்கல்லு'. நாடகமேடைக்குப் பக்கத்தில் பாதியுருவம்  சிமெண்ட் தரையில்  புதைந்தபடியிருக்கும் அந்தச் சிலையைப் பார்த்தவுடனேயே புல்லரித்துவிட்டது. நானும், ஊரும் கண்டுகொள்ளாமல் அத்துவானமாக  நிற்கும்   அந்த சாவாங்கல்லுதான் பல நூற்றாண்டுகள் கடந்த 'நவகண்டச் சிற்பம்'. 


எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து அந்த சிலையைப் பார்த்துவருகிறேன். சிறுவயதில் அந்த சிலையிலேறி விளையாடியிருக்கிறோம். எப்போதாவது அதன் காலடியில் குங்குமமும், பூக்களும் கிடக்கும். மற்றபடி மிகப்பெரிய வழிபாடுகள் எல்லாம் அதற்கு கிடையாது. ஆரம்பத்தில் கொஞ்சம் உருவமைப்பு தெரிந்தது. இப்போது அதன் உருவக்கூர்கள், கல்வெட்டுகள் மழுங்கியிருக்கின்றன. தலைமயிரை இடது கைப் பற்றியிருக்க, வலது கையிலிருக்கும் கத்தியால் கழுத்தை அறுக்கும் அந்த நவகண்டச்  சிற்பம் நின்றகோலத்தில் இருக்கும். அ.கா பெருமாளிடம் சிற்பத்தின் புகைப்படத்தைக் காட்டி கேட்டபோது 'பெரும்பாலும் பெண் நவகண்டச் சிற்பங்கள் இருக்காது. உருவ அமைப்பை வைத்துப்பார்க்கையில், இது ஆண் நவகண்டச் சிற்பம். சுத்தமான சிற்பம்' என்று சொன்னார். 



கோவில் நிர்வாகத்திடம் இந்த சிற்பத்தைப் பற்றியும், அதிலுள்ள கல்வெட்டுத் தகவல்கள், அதற்குத் தரப்பட்ட உதிரப்பட்டி நிலங்கள் பற்றியும் கேட்கும்போது அவர்களுக்கு இது சார்ந்து எந்தத் தகவலும் தெரியவில்லை. நடைபாதையில் மக்கள் புழங்குமிடத்தில் இருப்பதால் சிலை முழுமையாக சிதைந்துவிட வாய்ப்பிருக்கிறது என்று சொன்னபோது, 'கோவில் காம்பவுண்டுக்கு வெளிய இருக்குறது எங்கப் பொறுப்பு கெடையாது' என்று சொல்லிவிட்டனர். மதுரை தொல்லியல் துறை அதிகாரிகளை அணுகி இதுபற்றி கேட்கையில் சரியான பதில்கள் கிடைக்கவில்லை. ஊரின் பூர்வக்குடிகளிடமும், வயதானவர்களிடம் இந்த நவகண்டச் சிற்பம் பற்றி கேட்கையில் அனைவரும் சொன்ன ஒரே பதில் 'எங்களுக்கு நெனவு தெரிஞ்ச நாள்ல இருந்து அந்த சாவாங்கல்லு அங்கேயதா இருக்கு' என்பது மட்டுந்தான். சிலை சார்ந்த எந்த வாய்மொழி கதைகளும், பாடல்களும் கூட கிடைக்கவில்லை. அந்த சூழலில்தான் மா.சந்திரமூர்த்தி மற்றும் வெ. வேதாசலம் அவர்கள் சேர்ந்து எழுதிய 'பராக்கிரமபாண்டியபுரம்' என்னும் நூல் பற்றிய அறிமுகம் கிடைத்தது. (கலைத்தாய் பதிப்பகம், பக்கங்கள் 314, வெளிவந்த ஆண்டு 2002)


அந்த நூலும் எங்கு தேடியும் கிடைக்கவில்லை. வேதாசலம் அவர்களைத் தொடர்புகொள்ள முடியவில்லை. சந்திரமூர்த்தி அவர்களின் போன் நம்பர் கிடைத்தது. நடந்த விஷயங்களை அவரிடம் சொன்னபோது அவரால் திரும்ப பேச முடியாதளவுக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்தார். திடீரென ஒருநாள் சந்திரமூர்த்தியே அழைத்து 'பராக்கிரமபாண்டியபுரம் புத்தகம் என்கிட்டஒரு பிரதி இருக்கு' என்று சொன்னார். தற்சமயம் அச்சில் இல்லாத பராக்கிரமபாண்டியபுரம் நூல், தென்கரைக் கிராமத்தினை மையமாகக் கொண்டு பாண்டியநாட்டுச் சமுதாயப் பண்பாட்டு வரலாற்றை விரித்துக் கூறுகிறது. பராக்கிரமபாண்டியபுரம், வரலாற்றுப்போக்கில் தென்கரைப் பகுதிகள், தென்கரை ஊரும்-நாடும், தென்கரைப் புராணம், மூலநாதசுவாமி கோவில், அகிலாண்டேஸ்வரியம்மன் கோவில், மூலநாதசுவாமிகோவில் நிர்வாகமும் வழிபாடும், மறைந்த விண்ணகரங்கள், நாட்டுப்புறத் தெய்வங்கள், தென்கரைக் கல்வெட்டுகள், கல்வெட்டுகள் கூறும் அரசியல், பொருளியல், சமூக வரலாறு, கலைச்செல்வங்கள், தென்கரையின் சிற்றூர்கள் என்று அந்நூல் புகைப்படங்கள், கல்வெட்டு ஆதாரங்களோடு நுட்பமாக எழுதப்பட்டிருக்கிறது.


நூலில் வரும் 'கலைச்செல்வங்கள்' என்ற தலைப்பின் கீழ் சாவாங்கல் பற்றிய செய்திகள் வருகின்றன. 


'இது இக்கோவில் கோபுரத்தின் முன்புள்ள பொட்டலில் காணப்படுகிறது. இச்சிற்பத்தில் ஒரு வீரன் இடது கையால் தனது முடியைப் பிடித்துக்கொண்டு வலது கையில் ஏந்தியுள்ள நீண்ட கத்தியால் தன் கழுத்தைத்  தானே அரித்துக் கொள்கிறான். இவ்வீரனின் கழுத்தில் முத்துமாலையும், மலர்மாலையும் திகழ்கின்றன. வீரனின் முன்கையிலும், தோளிலும் வளைகளும், இடையில் விசிறி மடிப்புடன் கூடிய ஆடையும் அணிசெய்கின்றன. இச்சிற்பம் செதுக்கப்பட்டுள்ள கல்லின் விளிம்பில் கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது. சிற்பத்தின் உருவ அமைதியைக் கொண்டு இதனை கி.பி 13-14ஆம் நூற்றாண்டாகக் கொள்ளலாம்.' என்று நூலின் 242ம் பக்கத்தில் சாவாங்கல் என்ற பெயர் வைத்தே  ஆவணமாக்கப்பட்டுள்ளது. சான்று (மா.சந்திரமூர்த்தி, சாவாங்கல்லு,கல்வெட்டு,இதழ் 8, பக்கம் 21-22 இராட்சச ஆண்டு தை திங்கள்-சென்னை).


நவகண்டச் சிற்பங்கள் பற்றி கலை வரலாற்று ஆய்வாளர் காந்திராஜன் அவர்களிடம் பேசியபோது 'சமகாலத்தை வரலாற்றிலிருந்துப் பார்க்க வேண்டும். நவகண்டச் சிற்பங்களில் இருப்பவர்கள் நமது பாட்டன்கள் தான். தன்னைத் தானே ஒன்பது பகுதிகளாக அறுத்துக் கொள்வது ஒருவகையான ஆதீத நம்பிக்கை. இந்தச் சிற்பங்கள் வட மாவட்டங்களில் அதிகமாக இருக்கின்றன. சிலவைகளில் கல்வெட்டுகள் இருக்கும். சிலவைகளில் இருக்காது. பல இடங்களில் நவகண்டச் சிற்பங்களைப் பாதுகாத்து வழிபடுகின்றனர். சில ஊர்களில் அந்த ஊர் மக்களே ஆர்வமாக, நவகண்டச் சிற்பம் போன்ற அவர்களது தொன்மை அடையாளங்களைப் பாதுகாத்து வருகின்றனர். மியூசியத்திற்கு எதிரானவன் நான். தொன்மை அடையாளங்களுக்கு எந்தப் பாதுகாப்பு இல்லையென்றால் மியூசியத்திற்கு கொண்டு செல்லலாம். ஊர் மக்களே இந்த மாதிரியான தொன்ம அடையாளங்களை மீட்டெடுக்க வாய்ப்புகள் இருந்தால் அவர்களே முறையாகப் பாதுகாக்க வேண்டும்' என்று சொன்னார்.


விழுப்புரத்தைச் சேர்ந்தப் பத்திரிகையாளரும், எழுத்தாளருமான கோ.செங்குட்டுவன் அவர்களிடம் பேசியபோது, 'மன்னனுக்காகவோ, ஊருக்காகவோ அல்லது தடைபட்ட கோவில் பணிகள் முழுமையாக நிறைவேறவோ தனது உடம்பில் தலை உள்ளிட்ட ஒன்பது பகுதிகளாக வெட்டிக்கொண்ட நவகண்ட செயல்கள் தமிழகத்தில் நடந்திருக்கின்றன. அதற்கு கல்வெட்டு சான்றுகளும் நம்மிடம் இருக்கின்றன. இறந்த வீரனுக்கு தரப்படும் உதிரப்பட்டி நிலங்களை நேத்தோர்பட்டி, ரத்தக் காணி எனவும் குறிப்பிடலாமென்று மயிலை சீனி.வேங்கடசாமி சொல்கிறார். வெவ்வேறு அதிகார வளர்ச்சிகளில் அந்த நிலங்களும் அது சார்ந்த தகவல்களும் கைமாறி போய்விட்டன. வட மாவட்டங்களில் அரகண்டநல்லூர் போன்ற சில இடங்களில் நவகன்டச் சிற்பங்களை மக்கள் வழிபட்டு வருகின்றனர். தொல்லியல் துறையினை விட உள்ளூர் மக்கள்தான் அவர்களது ஊர் சார்ந்த தொல்லியல் அடையாளங்கள் மீது முதல் உரிமையினையும், அக்கறையினையும் செலுத்தவேண்டும்' என்று சொன்னார்.


பராக்கிரமபாண்டியபுரம் நூலிலிருந்து...

'வரலாற்றிற்கு முற்பட்ட காலத்திலிருந்து ஆங்கிலேயர் காலம் வரையுள்ள வரலாற்றுத் தடயங்களை இவ்வூரில் காணலாம். 12.12.1911ல் ஆங்கில இளவரசர் ஐந்தாம் ஜார்ஜ் டெல்லியில் முடிசூடிக் கொண்டபோது அதன் நினைவாக எழுப்பப்பெற்ற விளக்குத்தூண் ஒன்று இவ்வூர் அக்கிரகார வாயிலில் காணப்படுகிறது. இதுவே இவ்வூரில் கிடைக்கும் கடைசிக் கல்வெட்டுச் சான்றாகும்'. 


அந்த விளக்குத்தூணில் விளக்கு ஏற்றப்படும் சித்திரத்தை என்னுடைய தாத்தாவும், அம்மாவும் கதையாகச் சொல்லியிருக்கின்றனர். அந்தக் கதை மட்டுந்தான் இப்போது உள்ளது. அந்த விளக்குதூண் இருந்தத் தடயம் கூட ஊரில் இல்லை.  


இந்த  அரிய வகை நவகண்டச் சிற்பம் போன்று தென்கரையில் இருக்கும் சேந்தனேரி நீர் மடை மற்றும் சேந்தனேரி நீர் வெளியேறும் தொட்டி, கன்னிமார்கள், எண்ணெய்க்காப்பு மண்டபம் போன்ற தொல்லியல் இடங்கள் முறையாகப் பராமரித்து பாதுகாக்கப்பட வேண்டிய சூழலில் இருக்கின்றன. கடந்த மாதம்தான் தென்கரை ஊராட்சி மன்றத் தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது. கிராம சபை கூட்டங்களில் சொந்த விருப்பு வெறுப்புகள், சாதிகள், அரசியல்களைக் கடந்து  இந்த விஷயங்கள் சார்ந்தும் கலந்துரையாடி, இருக்கின்ற தொன்மங்களையாவது காப்பாற்றி, அது சார்ந்த விழிப்புணர்வுகளைக் கொண்டுவர நடவடிக்கைகள் எடுக்கப்படுமா? என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.


-முத்துராசா குமார்   


- நன்றி - விகடன் - பிப்ரவரி 16/2020


  


     










  


 


     






      


Comments