நாரைகள், தாமரைக்கோழிகள்
கூடுகள் பின்னுமளவுக்கு மங்கம்மா கண்மாயோடும் அதன் பறவைகளோடும் கலந்திருந்தாள் அம்மா. நீர், மண், விதைகள், பறவைகள் போன்ற வார்த்தைகள் ஊசிடும் காலம் வந்தது. உலகில் பள்ளங்களே இல்லாமல் எல்லாமும் உயர ஆரம்பித்தன.
மங்கம்மா கண்மாயின் 'H' வடிவ நீர்மடைத் தூணை மட்டும் பிடுங்கிவந்து நடுவீட்டு பட்டாசலைக்குள் ஊன்றியிருக்கிறாள் அம்மா. வீடெங்கும் கொசுவர்த்தியின் சாம்பல்சுருள் தடங்கள் உடைபடாமல் கிடக்கும். அவளின் உறங்காத இரவுகள் அவை. உடம்பின் மயிர்களைப் பிடுங்கியும், துணிகளைக் கிழித்தும் வீட்டு இடுக்குகளிலெல்லாம் வெற்றுக் கூடுகளைக் கட்டியபடியே இருப்பாள். அவளிடம் யாரும் நெருங்க முடியாத பகல்கள் அவை.
வெள்ளரி, பாகற்காய், சூரியகாந்தி, மொச்சை, சுண்டல், பாசிப்பயிறு, தட்டாம்பயிறு, சுரை, கம்பு, சோள விதைகளை எருமைச் சாணத்துச் சாம்பலுக்குள் பதப்படுத்தியிருந்தார்கள்
அம்மாவின் அப்பாவும், தாயும்.
உடம்பின் துவாரங்களுக்குள் ஒவ்வொரு விதையாக நட்டு உமிழ் சொட்டுகளைத் தொட்டுவைப்பாள். துவாரங்கள் நிரம்பியபின் வானை நோக்கி மிச்ச விதைகளைப் பாவிடுவாள். மேலே போன எவ்விதையும் கீழே வராது. மயிர்கள், துணிகள், விதைகள் காலாவதியாகின. செயல்களற்று கதறினாள். ஆங்காரமெடுத்து நீர்மடைத்தூணை தனது மார்பகங்களில் புதைக்க முயலுகையில்தான், கண்மாய் கன்னிமார்கள் அம்மாவைப் பிடித்திழுத்தனர்.
அம்மா உடம்பிலுள்ள நீர் பிசுப்புகளில், கண்ணீரை மட்டும் தேர்வுசெய்து மரக்காவில் பிடித்து வீட்டை நிரப்பினர் கன்னிமார்கள். உச்சி மட்டுமே தெரியுமளவுக்கு மடைத்தூண் முங்கியது. தூணின் அடியில் செதுக்கியிருந்த ஆயிரங்கால தொல்லெழுத்துகள் கண்ணீருக்குள் ஊறின. கன்னிமார்கள் அம்மாவின் இடது காதுக்குள் புகுந்து, வலது காதின் வழியே ரகசியம் சொல்லியபடி ஒவ்வொரு ஆளாக வெளியேறி மறைந்தனர். துள்ளியெழுந்து கரிப்பு ஆழத்துக்குள் மூழ்கினாள் அம்மா.
தொல் எழுத்துருக்களின் வரிவடிவங்களை வருடி, சத்தமிட்டு வாசிக்கத் தொடங்கினாள். அவள் வாசிக்க வாசிக்க தாமரைக் கோழிகளும், நாரைகளும் வீட்டுக்குள் மொய்த்தன. மூச்சுவாங்க எழும்பியவள் தூணின் உச்சிக்கேறி உட்கார்ந்தாள்.
அம்மாவின் துவாரங்களுக்குள் பொதிந்திருந்த விதைகள் தளிர்விடவும், கொடிகள் படரவும் செய்தன. பறவைகள் ஆசை தீர அம்மாவைக் கொத்திக் கொஞ்சின. நூற்றாண்டுகள் கழித்து சிரித்தபடி எனது பெயரைச் சொல்லிக்கூப்பிட்ட அம்மா, 'இவன்தான் எனது குட்டி'யென பறவைகளிடம் அறிமுகம் செய்து, மடியில் பறவைகள் கக்கிய இரையை அவள் கையால் எனக்கு ஊட்டிவிட்டாள்.
{ தளுகை • நரன் அண்ணனுக்கு }
- முத்துராசா குமார்
Comments
Post a Comment