கட்டக்கால் வேட்டை
விளையாட்டு வீரனின் சாயலில் வேல் கம்பையெடுத்து,
முடி முளைத்த ராத்திரியென ஓடும் தடிபன்றியின் முன்னெஞ்சுக்கு குறிவைத்து எறிகிறேன்.
கூரினை நெளித்துப்போட்டு வேகமெடுக்கிறது.
தலைக்கு வீசிய ஐந்தாறு
வெங்காய வெடிகளுக்கும்
பாய்ச்சல் குறையவில்லை.
பின்னால் கேட்கும்
குட்டிகளின் அலறலுக்கு
வெறிவீறிட திரும்பிய பன்றி
எனை மல்லாத்திவிட்டு
ஈரிரண்டு கால்கள் விரிய
எனக்கு மேலே தாவுகிறது.
விழுகையில் உறைந்த
மழைத்துளிகளைப் போன்ற அதன் மார்க்காம்புகள் கண்களருகே தெரிகின்றன.
துளிகளைத் தாங்கிடும்
பன்றியின் அடிவயிற்று வானை
விறைத்த எனது சூரிக்கத்தி நேர்கோட்டில்
வகுந்திட நூலளவே இடைவெளி.
பன்றிக்குட்டிகளின்
அனாதைக் குறுவால்கள் கனவுகளையாட்டி தூங்கவிடாதென்பதால்
சூரியை உயர்த்தவில்லை.
* கட்டக்கால் - கறுப்பு பன்றி
- முத்துராசா குமார்
நன்றி - கனலி இணையதளம்
http://kanali.in/kattakaal-vettai/
Comments
Post a Comment