எனது ஊர் இப்போது முரட்டுநகராகிவிட்டது. அதில் மனித வார்த்தைகள் பலிக்கும் காலம் என்றைக்கோ முற்றுபெற்றுவிட்டது. கட்டக்கடைசியாக பலித்த வார்த்தை, என் அம்மா சொன்ன வார்த்தைதான். நான் ஆயிரம் வருடம் வாழுவேனென்ற ஆசி கலந்த செல்லங்கொஞ்சிய வார்த்தைகளவை. எப்படி முயன்றாலும் என்னுயிரை நான் பிடுங்கியெறிய முடியாதளவுக்கு சத்தான சொற்களவை. இந்தச் சித்திரையோடு எனக்கு 200 வயதாகிறது. இந்தச் செம்முதுமையில் நரைகள் முளைக்காது. சுழற்சியில், கருப்பைச்சிசு மயிர்கால்களே திரும்பவும் தோலில் தழைக்கிறது. எடையில் பெரியதொரு மாற்றமில்லை. குறுக்குமறுக்காக உடலுறுப்புகள் முளைத்து இலுப்பை மரமளவிற்கு வளர்ந்திருக்கிறேன்.
நான் பணிபுரியும் அலுவலுகம் உலகப்புகழ் பெற்றது. அவ்வலுவலகம் ஊரின் முன்னாள் சுடுகாடு. அம்மாவினை அங்குதான் விதைத்தோம். அன்றிலிருந்து அம்மாவைத் தெய்வமாக்கிக் கொண்டேன். வருடத்திற்கொரு முறை மட்டும் இந்நகர் என்னை விகாரமாகப் பார்க்கும். எங்கும் என்னைப் பற்றிய பேச்சு சலசலக்கும்.
அந்தநாள் இன்றைக்குத்தான்.
அம்மாவின் நினைவுநாளும், மயானக்கொள்ளைத் திருவிழாவும் சேர்ந்து வந்த நாளிது.
அலுவலகத்தின் 500வது மாடியிலிருக்கும் மேலதிகாரியின் மின்னஞ்சலுக்கு ஒருநாள் விடுப்பு வேண்டிய விண்ணப்பத்தினை நேற்றே அனுப்பிவிட்டேன். அலுவலகத்தின் எதிரேயிருக்கும் ராட்சத சிக்னல், நகரின் பிரசித்தப் பெற்றது. அம்மாவின் சாரதி சேலைகளை உடுத்தி தாழம்பூ குங்குமத்தால் அரிதாரமிட்டு பம்பை வாத்தியத்தை இசைத்தபடி சிக்னலில் ஆடிக்கொண்டிருக்கிறேன்.
சிக்னல் திறக்க நேரமாகிறது.
தளுகை வழிபாட்டுச் சாமான்கள், வாசனைப்புகைப் பொருட்கள் வைத்திருக்கும் தோல்பைக் கழுத்தில் தொங்க, வாயில் நாட்டுக்கோழியைக் கவ்வியபடி சோர்வுறாது ஆடுகிறேன். துப்பிய எச்சிலளவுக்கு சிக்னலருகே ஒரு சதுப்புநிலமிருக்கிறது. அந்நிலத்தின் கூழைக்கடா பறவை அம்மா காலத்து சந்ததி. பம்பையிசையைக் கேட்டவுடன் எனது தலைக்கு மேலேவந்து பறந்தபடி நிற்கிறது. சிக்னல் திறந்தவுடன் பம்பையைத் தோல் கிழிய முழங்கவிட்டு ஆகாசத்துக்கும் நிலத்துக்கும் குதித்து, ஐநூறு மாடிகளுக்கு கீழேயிருக்கும் அம்மாவின் புதையிடம் நோக்கி ஓடுகிறேன். பறவையும் கூடவே பறக்கிறது.
கோழியின் கழுத்து நரம்புகளைக் கடித்து ரத்தங்குடித்து அலுவலக மதில்கள் முழுக்கத் தெளித்துவிட்டு, அரைவிழி மயக்கத்தில் மல்லாந்து கிடக்கிறேன். காற்றுவெளியில் நின்றபடி பறந்து கொண்டிருக்கும் கூழைக்கடாவின் திறந்த கீழ்வாய், அம்மாவின் மடி போன்றிருக்கிறது.
- முத்துராசா குமார்
- Sculpture • Benita Perciyal
Comments
Post a Comment