செத்தும் ஆயிரம் பொன்னும், நாட்டார் பாடல் கலைஞர்களும்!

'செத்தும் ஆயிரம் பொன்' என்ற திரைப்படத்தை Netflixல் பார்த்தேன். இறந்தவர்களுக்கு செய்யப்படும்
கடைசி மரியாதையான முகச்சாய அலங்காரமிடும் மனிதர்களைப் பற்றியதான கதை. உடன் ஒப்பாரி மனிதர்களும். நான்கு தலைமுறையாக இந்தத் தொழிலை செய்துவரும் குடும்பம். அக்குடும்பவுறவில் ஒப்பாரிக்கு பேர் போன கிழவி. குடும்பச் சண்டையில் ஊரைவிட்ட வெளியேறிய கிழவியின் மகன். சென்னையில் திரைப்படத்துறையில் ஒப்பனைக் கலைஞராக இருக்கும் கிழவியின் மகன்வழி பேத்தி. சண்டைகளின் மனக்கசப்போடு நீண்ட காலத்திற்குப்பின், தனது அப்பத்தாவைப் பார்க்க கிராமத்திற்கு வரும் பேத்தி. இப்படியாக விரிகிறது கதை.

கிராமங்களில் இறப்பு விழுந்துவிட்டால் சுற்றுவட்டாரங்களுக்கு கேதம்
சொல்லிவிட ஆள் அனுப்புவார்கள். தொலைத்தொடர்பின் நவீன வளர்ச்சிகளில் இப்போது அவ்வழக்கம் இல்லை. மணியடித்து சங்கூதுவது, பாடைக் கட்டுவது, கொள்ளிச்சட்டி, கொள்ளிக்குடம் தயாரிப்பு, குழி, விறகு, எருவாட்டிகள், விறகுகள், சீமெண்ணை, சீனி, மண்சாந்து, தகனமேடையில் உறவுகளின் போதைக் கலவரங்களைச் சமாளிப்பது என்று சுடுகாட்டு அல்லது இடுகாட்டுச் சாங்கியங்கள் அனைத்தும் அம்பட்டன், தோட்டியின் பொறுப்புதான். (கட்டுரையின் வெளிப்படையான புரிதலுக்காக இந்தயிடத்தில் அம்பட்டன், தோட்டி என்ற வார்த்தைகளைப் பயன்படுத்தியுள்ளேன்)

கேதம் சொல்ல அனுப்பப்படும்
ஆளும் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவராகத்தான் இருப்பார்.
'இறந்துவிட்டால் அம்பட்டன் பிள்ளை' என்ற வாய்மொழி ஒன்றுண்டு. சமூகத்தால் ஒடுக்கப்பட்ட மக்கள் இவர்கள். இழவுவீடு முதல் கருமாரிக் காரியம் முடிக்கும்வரை சாதிய அதிகாரத் திமிரால் இவர்களை நடத்தும் விதத்தைப் பார்த்தால் சொல்லி மாளாது. மதுரைப் புறநகர் கிராமத்தில் வசிக்கும் எனக்கு, சவங்களுக்கு அலங்கார அரிதாரமட்டுமிடும் தலைமுறைத் தொழில், அந்தத் தொழிலாளர்களைப் பற்றிய விஷயங்கள் புதிதாக இருந்தன. இராம்நாடு பகுதி ஊர்களின் உள்கிராமங்களில் இந்தத் தொழில் இருக்கலாம். கதையும் அந்தப் பகுதிகளில்தான் நடக்கிறது.

திரைப்படம் எனக்குப் பிடித்திருந்தது.

சொந்தத்துக்குள் மட்டும் நடக்கும் சிக்கில்லாத கதை, அசலான கிராமம்,  அக்கிராமத்தின் பூச்சுயில்லாத மனித முக பாவனைகள், நிலப்பரப்பின் அதிக கலப்பில்லாத ஒளி - ஒலி, ரெட்டையடுக்கு ஓட்டுத் தாழ்வாரங்கள், மண் மதில்கள், மலங்கழிக்கும் ஒதுக்குப் புறங்கள், பேருந்து நிறுத்தங்கள், சுடுகாட்டுப் பகுதிகள், மொட்டைக் கொட்டகைக் கட்டிய கேத வீடுகள், தண்ணீர் குடம் சுமக்கும் தள்ளுவண்டிகள், உடைந்த இருச்சக்கர வண்டி, தலையணைத் துணி பொட்டலங்கள், கட்டைப் பைகள் என்று எல்லாமும் படத்தில் மிக இயல்பாகவும் எளிமையாகவும் இருந்தன.

குறிப்பாக 'உள்ளூர் கண்மாய் ஊர்காரய்ங்களுக்கு குட்டை தான, வய்றது, கெடாவுறது, கொங்காபய' போன்ற பல உரையாடல் வசனங்கள், சடங்குகள் தெற்கு-கிழக்குத்திசை ஊர்களின் சமகால வாழ்வியலிலிருந்து அற்புதமாக எடுத்தாளப்பட்டுள்ளன.
இறப்பு, நகைச்சுவை, காமம், கிண்டல்களுக்கென்று படம் நெடுகிலும் வரக்கூடிய ஒப்பாரிகள், தெம்மாங்குகள், சொலவடைகளின் வார்த்தைகள் அதன் அர்த்தங்கள் எல்லாம் ரசிக்கும்படியாக இருக்கின்றன. 'செத்தும் ஆயிரம் பொன்' படத்தின் இயக்குநர் ஆனந்த் ரவிச்சந்திரன் மற்றும் இப்படத்திற்காக சிறியளவிலிருந்து பெரியளவு வரை உழைத்த குழுவினர் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகளும் அன்பும்!

ஒப்பாரி சார்ந்த படமென்று இந்தப் படத்தைப் பற்றி கேள்விபட்டவுடன் நிறைய ஒப்பாரிக் கலைஞர்கள் நினைவுக்கு வந்தனர். குறிப்பாக மதுரை களிமங்கலத்தைச் சேர்ந்த அசாத்திய ஒப்பாரிக் கலைஞர்களான குருவாம்மா, முனியம்மா. எங்களது துறையில் (இதழியல் & தொடர்பியல் துறை - சென்னைப் பல்கலைக்கழகம்) 'முற்றம்' என்ற பெயரில் நாட்டார் கலைகள் அரங்கக் குழு ஒன்றிருக்கிறது. நமது நாட்டார் கலைகளையும், கலைஞர்களையும் ஆவணப்படுத்துதல் மற்றும் அவர்களிடமிருந்து அக்கலையைக் கற்றுக் கொள்ளுதல், கலைகள் வழியிலான தொடர்பியல் திறன்களை வளர்த்தெடுத்தல் போன்றவை முற்றத்தின் செயல்பாடுகள். வெகுசன ஊடகங்களுக்குத் தெரியாத தமிழகத்தின் ஏராளமான நாட்டார் கலைஞர்கள் முற்றம் மூலமாக கண்டறியப்பட்டும், அங்கீகரிப்பட்டும் வருகின்றனர்.

அப்படியாக முற்றத்தில் 'பாவலர் ஓம் முத்துமாரி நினைவு விருது' வழங்கி அங்கீகரிக்கப்பட்ட கலைஞர்களில் குருவம்மாவும், முனியம்மாவும் அடங்குவர். 2017ம் ஆண்டு இருவரையும் சந்தித்து அவர்களது வாழ்க்கைப் பயணம் அவர்களுடைய ஒப்பாரிகள், நடுகைப் பாடல்கள், தெம்மாங்குகளை ஒலிவடிவிலும், எழுத்துவடிவிலும் ஆவணம் செய்தேன். 'தெக்கத்தியின் தெம்மாங்கு மூக்குத்திகள்' என்ற தலைப்பில் மின்னம்பலம் இணையதளத்தில் அக்கட்டுரை வெளிவந்தது.

இந்தப்படத்தில் பாக்கியம் என்ற
உப கதாபாத்திரத்தில் முனியம்மா நடித்திருக்கிறார். படத்தில் வரும் இரண்டு ஒப்பாரிகளை முனியம்மா பாடியுள்ளார்.

இந்த நேரத்தில் அக்கட்டுரையை மீண்டும் பகிர்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.

°

தெக்கத்தியின் தெம்மாங்கு மூக்குத்திகள்!

மனித குலத்தில் ஒவ்வொரு இனக்குழு மக்களுக்கும் சொந்தமான இலக்கியத்தில் வாய் மொழி இலக்கியங்கள் என்று சொல்லப்படக்கூடிய நாட்டார் கலை இலக்கியங்கள் நிரம்ப இருக்கின்றன. நாட்டார் கலை இலக்கியங்கள், நாட்டார் கலைஞர்களை வைத்துதான் ஒரு சமூகத்தின் தொன்மை காலம் நாடிபிடித்துப் பார்க்கப்பட்டு அடையாளப்படுத்தப்படுகிறது. வாய்மொழி இலக்கியங்கள் தோன்றிய காலத்தை சரியாக கணிக்க முடியாது. மேலும் இவைகள் எந்தவொரு இலக்கண விதிமுறைகளுக்குள்ளும், சூத்திரங்களுக்குள்ளும் அடங்குவதில்லை.

புவியியல் பிரதேசங்களின் அடிப்படையில் வெவ்வேறு வடிவங்களில் அந்தந்த மக்களின் வாழ்வியல்களில் இருந்து தானாய் ஊற்றெடுக்கும் இந்த நாட்டார் கலைகளில் அம்மக்கள் கூட்டத்தின் பிறப்பு, இறப்பு, மொழி, காதல், வாழ்வியல் முறைகள், அரசியல், கல்வி, பொருளாதாரம், பண்பாடு, கலாச்சார காரணிகள், மானுடவியல், இனவரைவியல், கொண்டாட்டங்கள், சோகம், மகிழ்ச்சி, வன்மம், வக்கிரம், துரோகம், வீரம் என பலதரப்பட்ட விஷயங்கள் வெளிப்படையாகவும், குறியீடுகளாகவும் வெடித்தெழுகின்றன.
நமது தமிழ் சமூகத்திலும் புழுதி வெக்கைப் படிந்த செம்மையான நாட்டார் கலை இலக்கியங்களும், நாட்டார் கலைஞர்களும் வெளியே தெரியாத அளவிற்கு விரவிக்கிடக்கின்றனர்.

"...பள்ளிக்கூடம் போகாமலே
பாடமும் படிக்காமலே
பாட்டு படிச்சு வந்தேன்
பக்கத்துல கேளு கேளு
களிமங்கலமா ஊரு நான்
குருவம்மானு பேரு
எழுதி படிக்கவில்லை
இங்கிலீசும் பேசவில்லை
என்னுடைய பாட்டுகள
இருந்தவுங்க கேளுங்களே
களிமங்கலமா ஊரு நான் முனியம்மான்னு பேரு.."

அப்படி வெளியே தெரியாத நாட்டார் கலைஞர்கர்கள்தான் மதுரை மாவட்டம் களிமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த குருவம்மா- முனியம்மா. அறுபது வயதை அடைந்திருக்கும் குருவம்மாவும் முனியம்மாவும் என்னதான் ரத்த சொந்தங்களாக இருந்தாலும் சிறுவயதிலிருந்து இன்று வரை இணைப் பிரியாத தோழிகளாகவும் இருகின்றனர். பள்ளிக்கூடம் பக்கமே போகாத இருவருக்கும் பன்னிரெண்டு வயதிலேயே திருமணம் முடிந்து விட்டது.

ஒப்பாரி, தாலாட்டு, கும்மி, தெம்மாங்கு, குலவைப் பாட்டுகளில் கடந்த இருபத்தைந்து வருடங்களுக்கு மேலாக மதுரை, சிவகங்கை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி என்று தென் தமிழகத்தின் எல்லா மாவட்டங்களிலும் பெயர் பெற்று விளங்கும் குருவம்மாவும் முனியம்மாவும் தங்களது பதிமூன்று வயதில் இருந்தே நாட்டார் பாடல்களின் மீது ஆர்வம் கொண்டிருந்திருக்கின்றனர். யாரிடமும் போய் கற்றுக்கொடுங்கள் என்று கேட்காமல் நடுகைப் பாட்டுகள் கேட்பதற்காகவே மதுரை சுற்றுவட்டாரம் முழுக்க தேடித்தேடி நாத்து நட போவார்களாம்.

'...ஆத்தூரு அரளிப் பூவே
அய்யங்கோட்டை தாழம்பூவே
சேத்தூரு செவ்வந்திப்பூவே
சேர மனம் கூடுதிங்கே
நட்ட நடுவறுக்க
நாலுபக்கம் தொளி கெடக்க
நட்டாளாம் குட்டப்புள்ள
நடுவறுக்க போறவளே..."

இந்த அறுபதாண்டு கால வளர்ச்சி இந்த நடுகைப் பாடலிலிருந்துதான் தளிர ஆரம்பித்துள்ளது. எண்ணவே முடியாத பிறப்பு வீடுகள், இழவு வீடுகள், திருவிழாக்கள்,அரசியல் விழாக்கள், நல்லது கெட்டது என்று கையில் பாடல் வரிகள் இல்லாமல் அந்த சூழ்நிலைகளுக்கேற்ப இவர்களே வார்த்தைகள் கோர்த்து பாடிய பாடல்கள் எத்தனை என்று இவர்களுக்கே தெரியவில்லை. யாரும் அவைகளை எழுதி வைத்து பாதுகாக்கவுமில்லை. ஒலிப்பதிவும் செய்யவில்லை. இவர்களுக்கான எந்த புகைப்படங்களும் இல்லை. ஆனால் தங்களது முதல் பாடலின் வரிகளிலிருந்து கடைசி நிகழ்வின் பாடல் வரை அனைத்தையும் அடிமாறாமல் மனதில் வைத்திருக்கின்றனர்.

1984ல் இந்திரா காந்தி இறந்தபோது களிமங்கலத்தில் பாடிய ஒப்பாரி பாட்டுதான் குருவம்மாவின் முதல் ஒப்பாரி.

"...ஆனை நெருஞ்சி முள்ளு
இந்திராகாந்தி அம்மாவுக்கு
ஒரு ஆகாதவன் காவக்காரன்
அவன இந்திராகாந்தியம்மா
ஆதரிச்சு வைக்கையில
அந்த அரண்மனையில இருந்த சண்டாளன்
என்ன பெத்த ஆத்தா இந்திராகாந்தியம்மாவ
இந்த புதன் கெழம 9.40க்கு அம்மாவ குண்டு போட்டு
சுட்டானே..." என்று

தனது ஒப்பாரி பயணத்தின் முதல் பாடலை மாரடித்து பாடி 'இதுதான் என் வாழ்கையில மறக்க முடியாத ஒப்பாரி' என்று பேசத் தொடங்குகிறார் குருவம்மா,

"எழவு வீட்டுக்கு போகையில எறந்த ஆளு ஆணோ பொண்ணோ அவன் எப்படி பொறந்தான் எப்படி வாழ்ந்தான், படிப்பு, தொழிலு, அவனுக்கு எத்தன புள்ளகுட்டிக, பேரன் பேத்திக அவன் எப்படியெல்லாம் வாழ ஆசைப்பட்டான்னு அந்த குடும்பத்து ஆளுகக்கிட்டயும் ஊருக்காரககிட்டயும் கேட்டுத் தெரிஞ்சுகிருவோம். அதுபடி நாங்க மாரடிச்சு பாடுகையில அழுகாத சனங்கூட அழுது தீத்துருங்க. எங்க சொந்த வாழ்கையில நாங்கப்பட்ட கஷ்டத்தையும் சேர்த்துப் போட்டு பாடும் போது எங்கள அறியாம கண்ணீரு ஊத்தும். எங்க கஷ்டத்துக்கு அது ஒரு வடிகாலு

"...அம்மா யார நெனச்சு நானழுக
யார நெனச்சு நானழுக
என்ன பெத்த பீமனே புண்ணியரே
நான் யார நெனச்சழுக
என்ன படைச்ச ஆண்டவன நெனச்சழுக
நான் எங்க நெனச்சழுக
என்ன பெத்த செல்லமகனே, சீமானே, தர்மரே, புண்ணியரே
நீ பெத்த தங்க மக
படைச்ச ஈஸ்வரன தழுவியழுக
அப்போ கடம்பவனந்தா சோலையிலே
நீ பெத்த செல்ல மக இருக்கையிலே
ரெண்டு காலன் எரும வந்து நிக்கையிலே
எங்கள விட்டு கரும்பயணம் போனீகளே..." என்று

திடீரென இழுத்துழுத்து பாடி மாரடித்த குருவம்மாவின் சோகத்தை திசை திருப்ப காதல் தெம்மாங்கு பாடலைப் பாடத் தொடங்குகிறார் முனியம்மா

"...கருப்பு கர சேலைக்கட்டி
கரையோரம் போற குட்டி
கரும்ப எறும்பு கண்டா விட்டுடுமா
உன்ன நான் கண்ணால
பார்த்த ஆசை சொக்கிடுமா
அடிமேல அடி அடிச்சா அம்மியும் நகருமடி
அடியாத பிள்ளையெல்லாம் மடியாமயில்லடி
தாலாட்டு பாட்டுப்பாடு ரத்தினமே உனக்கு
தாழம்பூ வாங்கி வாரேன் அப்புறமே
தங்கம் போல மனசிருக்கு
தாராள குணமிருக்கு
ஆனாலும் நெஞ்சுள்ள என்னோமோ போலிருக்கு
கட்டான கட்டழகு கண்ணு மச்சான்
எனக்கு அத்தனையும் சொல்லித்தரனும்
பொண்ணு மச்சான்
மஞ்ச கர வேட்டி கட்டி
மலையோரம் போற மச்சான்
கரும்ப எறும்ப கண்டா விட்டுடுமா
கிட்ட வழி தோப்பிக்கில்லை
கிண்டலாக பேசிவிட்டு
எட்டுக்கட்டி பாடி வாறோம் ரத்தினமே
உனக்கு என்னென்னமோ சொல்லித்தரனும்
அப்புறமே..." என்று

பாடிவிட்டு பேசத் தொடங்கிய முனியம்மா 'இந்த தெம்மாங்கு பாட்டுல நான் பொம்பள, குருவம்மா ஆம்பள. திருவிழாவுல நாங்க இந்த பாட்ட பாடுனாலே கூட்டம் கலை கட்டும். தாலாட்டு, ஒப்பாரி, கும்மி, குலவைப் பாட்டு, தெம்மாங்குனு துக்கம், சந்தோசம் கலந்து மனசையும், குரலையும் மாத்தி மாத்தி பாடுவோம். . இத்தனை வருஷத்துல எவ்வளவோ ஊர் போய் வந்திருக்கோம் ஒரு தடவக்கூட நாங்க தனித்தனியா போய் பாடுனதே கெடையாது. ரெண்டாயிரம் மூவாயிரம்னு கொடுக்கிற காசை வாத்தியகாரர்களுக்கும் சேர்த்து பிரிச்சு கொடுத்துருவோம். அப்புறம் நம்ம பாட்டுகளுக்கு பிரியப்பட்டு மக்கள் கொடுக்குற அன்பளிப்பு போக ஊர்க்காரங்க சேலை, துண்டு, அரிசி, பழம்னு மரியாதை செய்வாங்க. வெவசாயக் கூலில வர்ற வருமானத்துலதா புள்ள குட்டிகள கரை சேர்த்தோம்.

வயசான காலத்துல நமக்கு நாமதான ஒத்தாசி. புள்ளைங்க திட்டினாலும் ஒரு கட்டத்துல முழு நேரமா ஊர் ஊரா போய் பாட ஆரம்பிச்சுட்டோம். எங்க பாட்டுகளுக்கு எறங்காத சாமியும் எறங்கும். எங்க முளைப்பாரி பாட்டுகளுக்கு கொட்டடாத மழையும் கொட்டும்.கொறஞ்ச வருமானம் கெடச்சாலும் மனசுக்கு நெறைவா இருக்கு. என்னதான் திருவிழாவுல பாட்டு கச்சேரி, சினிமா டான்ஸ் வச்சாலும், எழவு வீடுகள்ல மைக் செட்டு கேசட்டு போட்டாலும் முனியம்மா குருவம்மாவ நம்பி வர்றவுங்களுக்கு நாங்க சிறப்பா பண்ணி கொடுப்போம்.

காசு பணத்த விட எங்களுக்கு மனுஷ மக்கதா முக்கியம். சினிமால போயி பாடுறத விட ஊர் ஊரா போயி சனத்தோட சனமா நின்னு பாடுறதுலதான் எங்களுக்கு பெருமையும் சந்தோசமும் இருக்கு. எந்த போதையும் போடமதா பாட போவோம். அந்த மாரியாத்தா எங்க நாவுல வந்து எழுதுவா போல, எங்களுக்கு வெவரம் தெரிஞ்ச வரைக்கும் நாங்க யாரையும் எழுதச் சொல்லியோ எந்த புத்தகமும் கையில வச்சு பாடுனதோ கெடையாது. அப்படி பாடவும் போறதில்ல" என வெகுளியோடும், கலையினை விட்டுத் தராத வைராக்கியத்தோடும் பேசுகிறார் முனியம்மா.

தமிழ்நாடு நாட்டுப்புறக் கலைஞர்கள் நல வாரியத்தில் உறுப்பினர்களாக இருக்கும் முனியம்மாவுக்கும், குருவம்மாவுக்கும் ஐந்து வருடங்களுக்கு முன்பு ,மதுரை மாவட்ட ஆட்சியர் பதக்கங்கள் வழங்கி சிறப்பித்துள்ளார். மேலும் சென்னை சங்கமத்திலும் இவர்கள் மேடையேறி உள்ளனர்.இந்த பதக்கங்கள், பாராட்டுகள், பரிசுகள் மட்டும் இந்த நாட்டார் கலைகளையும், நாட்டார் கலைஞர்களையும் காப்பாற்றாது. குருவம்மா முனியம்மா போன்ற தமிழ் நாட்டார் கலைஞர்களின் வாழ்க்கைப் பதிவுகள் ஆவணப்படுத்தப்பட வேண்டும். அவர்களிடம் அந்த கலைகளைக் கற்றுக் கொண்டு அடுத்தடுத்த சந்ததிகளுக்கு கடத்த முயல வேண்டும்.

கல்லூரிகளும் பல்கலைக்கழகங்களும் அவர்களது பாடல்வரிகளை வரி வடிவங்களாக்கி ஆய்வுகளுக்கு உட்படுத்தி மொழிபெயர்ப்புகள் செய்தால்தான் நமது மண் சார்ந்த கலைகளும், கலைஞர்களும் தற்கால சமூகத்தாலும், வருங்காலத் தலைமுறைகளாலும் மதிக்கப்படுவார்கள்.
நலிவடைந்து வரும் கலைகளும், கலைஞர்களும் மீட்டெடுக்கப்படுவார்கள். மொழி கடந்தும் நமது கலைகள் நிலைத்து நிற்கும். அதோடு மட்டுமில்லாமல் நமது அடையாளங்கள், பண்பாட்டு கலாச்சார கூறுகளை அழித்திட நினைப்பவர்களுக்கு எதிராக இந்த மண் சார்ந்த கலைகளும், கலைஞர்களும் வலுத்த ஆயுதங்களாக இருப்பார்கள் .

என்னதான் கிராமங்களில் நவீனத்துவங்கள் பரவிக் கொண்டிருந்தாலும் இன்றும் நீங்கள் தெக்கத்திப் பக்கம் போனால் ஒப்பாரிக்கோ, திருவிழாவுக்கோ குருவம்மாக்களும் முனியம்மாக்களும் ஷேர் ஆட்டோவின் பின்னாலமர்ந்து போய்க்கொண்டு இருப்பார்கள். பின்னிரவில் ரெட்டை மூக்குத்திகள் மிடுக்காய் மினுமினுக்க குருவம்மா முனியம்மா பாடும் ஒப்பாரி, தாலாட்டு, கும்மி, குலவை, தெம்மாங்குகள் வானவெடிகளோடு காற்றில் பிய்ந்து பிய்ந்து கேட்டபடியே இருக்கும்.

நன்றி மின்னம்பலம் -

கட்டுரை • புகைப்படங்கள் :
முத்துராசா குமார்



Comments