சூழலியல், உயிரியியல், திரைப்படம் என்ற வகைமைகளில் எழுத்தாளர் தியோடர் பாஸ்கரன் அவர்களின் ஆய்வெழுத்துகள் எப்போதும் வியத்தகு தகவல்பூர்வமாகவும் பெரும் ஊக்குவிப்பாகவும் இருக்கும். The Message Bearers - (The nationalist politics and the entertainment media in South India, 1880-1945) என்ற தலைப்பிலான நூலொன்றை 1981ம் ஆண்டு எழுதியிருந்தார். 'தண்டோராக்காரர்கள்' - (தென்னிந்தியாவில் தேசியவாத அரசியலும் பொழுதுபோக்கு ஊடகங்களும் 1880-1945) என்று தமிழில் அந்நூலை அ.மங்கை அவர்கள் மொழிபெயர்த்துள்ளார். அகநி பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

சமீபத்தில் வாசித்த தண்டோடாராக்காரர்கள் புத்தகம் கிளப்பிவிட்ட கற்றல் தாக்கத்தோடு,
'குக்கூ உரையாடால்' இணையவழி கலைந்துரையாடல் நிகழ்வில்
தியோடர் பாஸ்கரன் அவர்கள் பேசிய காணொலியைப் பார்த்தேன்.

'சுற்றுச்சூழல் பிரச்சனையின் வேர்கள் அரசியலில்தான் போய் நிற்கும். எவ்வகை அரசியல் கட்சியோ, அரசோ அவர்கள் எதற்கு முக்கியத்துவம் அளிக்கிறார்கள் என்று பார்த்திட வேண்டும். அரசியலைப் பற்றி பேசாமல் விவாதிக்காமல் சுற்றுச்சூழலைப் பற்றி நாம் பேசவும் முடியாது. விவாதிக்கவும் முடியாது'. 'நாம் செய்த ஒட்டுமொத்த தவறுகளின் விளைவுதான் காலநிலை மாற்றம்'. 'சுற்றுச்சூழலை வெறும் பாடத்திட்ட மதிப்பெண்ணாக மட்டும் பார்த்திட கூடாது'. 'பணம், அரசியல், ஊழல் இதற்கு நடுவில்தான் நாம் சூழலியல்
அரசியலைப் பேசியும், எழுதியும், செயல்பட்டுக்கொண்டும் இருக்கிறோம். ஆனால், அந்நேரத்தில் அந்தச் சுற்றுச்சூழல் ஒரு ஓரமாக அழிந்து கொண்டிருக்கிறது'. 'சுற்றுச்சூழல் மற்றும் உயிரியியலில் தமிழ் மொழியின் எளிய சொல்லாடல்களைத் தேடியடைய வேண்டும், உருவாக்கிட வேண்டும்'. 'நமக்கு பக்கத்திலிருக்கும் மரங்கள், உயரினங்களின் பெயர்களைத் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும்' 'ஆர்வங்களை நாம் செயல்படுத்தாததால் நிறைய அற்புதங்களை மிஸ் செய்கிறோம்'

காணொலியில் கிட்டத்தட்ட இரண்டு மணிநேரம், தியோடர் அவர்கள் பேசியிருப்பார். அவரது பேச்சில் எனக்கு மிகவும் பிடித்த பல விஷயங்களில் சிலவற்றை மட்டுமே மேலே குறிப்பிட்டுள்ளேன்.

முழுக்க சுற்றுச்சூழல் பற்றி கலந்துரையாடியிருக்கும் தியோடர் பாஸ்கரன் அவர்கள்,


சுதந்திர இந்தியாவிற்கு முன்னும் பின்னுமான சுற்றுச்சூழல் அழிப்பு வரலாற்றின் எளிய சுருக்கம்,
வேட்டைகள், சோலைக்காடுகள், தேயிலைத் தோட்டங்கள், நதிகள், சுற்றுச்சூழல் அரசியலின் எழுத்துகள், பேச்சுகளில் நமது தமிழ் மொழியிலிலுள்ள சொற்களை ஆராய்வது அல்லது அதற்குண்டான எளிய தமிழ் வார்த்தைகளை உருவாக்குதலின் அவசியங்கள், பலன்கள், சூழலியல் கல்வி நம்முடைய பாடத்திட்டங்களில் எவ்வாறாக இருத்தல் வேண்டும், காடுகள், பறவைகள், விலங்குகள், அருகிடும் பறவைகள், விலங்குகள், காட்டுயிர்கள் பற்றிய ஆய்வுகள், காட்டுயிர் பேணல்கள், பூச்சிக்கொல்லிகள், கழுகுகள், தமிழகத்தில் சுற்றுச்சூழல் அரசியலை முன்னெடுக்கும் இயக்கங்கள், இதழ்கள், பசுமை இலக்கியங்கள், கட்டுரைகள், பழங்குடிகள், காட்டுயிர் சட்டங்கள், பெரும்பான்மையாக ஆங்கிலத்திலேயே இருக்கும் சுற்றுச்சூழல், உயிரியியலின் கட்டமைப்புகள், உட்காரணிகள், விழிப்புணர்வுகளை நமது தமிழ் நிலத்திற்கு எப்படி எளிமையாக கொண்டுசேர்ப்பது மற்றும் மிகசமீபத்தில் விசாகப்பட்டினத்தில் நடந்தேறிய விஷவாயு வெளியேற்ற உயிரிழப்புகள் என்று யாவற்றையும் மிகவும் எளிமையாக விவரித்திருப்பார்.

மேலும், குடும்பம், படிப்பு, பணிகள், எழுத்தார்வம், பயணங்கள், நண்பர்கள் என்று அனைத்தையும் பகிர்ந்திருப்பார்.
மொழியும் சுற்றுச்சூழலும், சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு தனிமனித செயல்பாடு எப்படியிருக்க வேண்டும், வளர்ச்சிகளுக்கும் சுற்றுச்சூழலுக்கும் இடையே நிலவும் காலந்தொட்ட முரண்பாடுகள், சுற்றுச்சூழல்கல்வி பாடத்திட்டத்தில் சொல்லப்பட்டுள்ள சூழல் கல்விக்கும் நடைமுறையிலுள்ள சுற்றுச்சூழலுக்கும் உள்ள முரண்பாட்டுத் தொடர்புகள், ஒரு திரைப்படத்தை எவ்வாறு அணுகுவது, யானை டாக்டருடனான நட்புறவு, திரைப்படம், வரலாறு, சுற்றுச்சூழல் மூன்றிலும் எவ்வாறு இயங்குகிறீர்கள், காடுகளுக்கு உள்ளான பயண அனுபவங்கள், எழுத நம்பிக்கையளிப்பது எது, மரணபய அனுபங்கள், 'உங்களுக்குப் பிடித்த விலங்கு' எது தாத்தா என்று ஒரு குழந்தைக் கேட்ட கேள்வியென பல சுவாரஸ்யமான கேள்விகளுக்கு தியோடர் அவர்கள் தனது உடல்மொழியிலும் புன்னகையிலும் அளித்த பதில்கள் மிகவும் பயனுள்ளதாகவும், ரசிக்கும்படியாகவும் இருந்தன.

'காது ரெண்டையும் விரிச்சிட்டு, குதிர மாதிரி வேகமா எங்க ஜீப்ப வெரட்டி வந்துச்சு. எப்போ நமக்கு சாவு வரும்னு அப்பப்போ நெனைப்போம்ல. நானும் அப்படி நெனைப்பேன். அதுக்கு அன்னைக்கு எனக்கு பதில் கெடச்சிச்சு. நிச்சயமா இன்னைக்கு நமக்கு சாவுதான்னு' என்று பந்திப்பூர் காட்டினுள் துரத்திய யானைகளிடமிருந்து தப்பிய சாவுபய அனுபவத்தை, குர்தாவின் கைகளை ஏற்றிவிட்டபடியும், தலைமுடியை வருடியும் விவரணை செய்தார்.

'எனக்கு யானைன்னா ரொம்ப பிடிக்கும். பார்த்திட்டே இருப்பேன். ஆனாலும் பயம்' என சிறுபிள்ளையொன்றின் கேள்விக்கு வெகுளியாகப் பதிலளித்தார்.

'எல்லையற்ற கரட்டு நிலங்களின் கொஞ்சநஞ்ச வதிகளில் தடங்கள் பதித்து பயணிக்கும், கிடையாட்டு பட்டியிலிருக்கும் மூப்பு கிடாய்தான் அப்பட்டிக்கு முன்னத்தி. வரித்தழும்புகள் ஓடிடும் அதன் முறுக்கிய கொம்புகளைப் பார்க்கையில், ஏனோ, உங்கள் மீசையும் நினைவுக்கு வந்துவிடும்'
என்ற தியோடர் பாஸ்கரன் அவர்களைப் பற்றிய இந்த உவமைச்சித்திரத்தை நீண்டகாலமாக யாரிடமும் பகிராமல் உள்ளுக்குள்ளேயே வைத்திருந்தேன். அப்பிள்ளைக்கு அவர் பதிலளிக்கையில் இதை நான் வாய்விட்டு சொல்லிக்கொண்டேன்.

குக்கூ உரையாடல் நிகழ்விற்கும், எழுத்தாளர் தியோடர் பாஸ்கரன் அவர்களுக்கும் மிக்க நன்றியும் அன்பும்!

காணொலி - https://youtu.be/RIyjplUadj8

- முத்துராசா குமார்

Comments