தேனீக்களின் சித்தத்தில் நஞ்சேறி படுத்தபடுக்கையாகின. 
உற்சாக காலத்தில் 
அவற்றின் வேட்டை நடனங்களை 
எனக்கு ஆடிக்காட்டியுள்ளன. 
ஆகாசத்தில் மிதந்தபடி நானும்
அந்நடனக் குறிப்புகளை 
என் கருந்தோலில் கருவமுட்களால் பச்சைக்குத்தியிருந்தேன். 
நுண்புள்ளி கனத்தை விட
தேனீக்களின் உடல் சிறுத்து 
கொடுக்குகள் உதிர்ந்து 
உயிர் கரைகின்றன.
முழுதும் கரைவதற்குள் 
அவற்றின் மங்கல் கண்களுக்கு சொளகளவுள்ள 
தேன்ராடினைக் கடைசியாக 
காட்டிட வேண்டும். 
நடனக் குறிப்புகளை காற்றில் நிகழ்த்தி
பூக்களிருக்கும்
நிலந்தேடி பறந்து திரும்புகிறேன். 
தச்சர் வடிவமைத்த 
இலவம்பஞ்சு மரத்தின் உச்சிவாப்பில்
தனியாளாக தேன் ராடினைக் கட்டுகிறேன். 
தேனும் ராடும் கைகூடுவதற்குள்
ஒருநொடி பறக்கயெழுந்து 
மரித்தன தேனீக்கள்.
தித்திப்புகளை மடியேந்திட
உயரத்திலிருந்து விழுகையில்
தச்சரின் 'ஸ்கூரு'க்கள்
தேனீக்களாக உருமாறி
கலப்படமற்ற தேன் பாகினால்
எனையேந்தின.

^
முத்துராசா குமார் 

{ • தளுகை - சோழராசனுக்கு 

 • நிழற்படம் - Yannick Cormier }

Comments