சூரியகாந்தியின் விளைச்சல் முகங்களைக் கொத்தித் தின்னும் பறவைகளை விரட்ட
ஆயுதங்களோடு நியமிக்கப்பட்ட
வயோதிக காவல்காரன் நான்.
ஒருபோதும் பறவைகளின்
பஞ்சுடல்களை ரத்தமாக்கியதில்லை.
விழுதுகளைப் பிடித்திருக்கும் சிறுபிள்ளைகள் மாதிரி
உள்நாக்கில் தொங்கி விளையாடும் வசவுச்சொற்களால் ஊளையிட்டு பறவைகளை விரட்டுவேன்.
பட்டினியுடன் திரும்பும் அவைகள்
என்னை எப்படியாகவும் நினைத்துக்கொள்ளட்டும்.
காவலில் பிரத்யேகமான வழித்தோன்றல்கள் நாங்கள்.
வாழ்நாளில் உண்ணும் தானியங்களை
எங்கள் செரிமான மண்டலம்
பாடம் பண்ணி சேமித்திருக்கும்.
இயற்கை எய்தியவுடன் எங்களுடல்கள்
பறவைகளின் வசம் ஒப்படைக்கப்படும்.
•
{ முத்துராசா குமார் - படம் - பாலாஜி கங்காதரன் }
Comments
Post a Comment