வயது நாற்பது.
நின்ற இடத்திலிருந்து 
குதித்தபடியே இருக்கிறான்.
பிறவிப் பைத்தியமில்லை.
பிழைப்பு நகரொன்றில் புழங்கி
வந்ததிலிருந்தே இந்நிலைதான்.
நகரைத் தூற்றக் கூடாது.
இவனது தலைச்சுருமாட்டால் நகர்கனத்தை சுமக்கமுடியவில்லை.
குதிக்குங் காரணம் கேட்டால் 
இதையே திரும்பச் திரும்பச் சொல்வான்,
'நாங்கள் விளையாடி வழிபட்ட மரம்
நாங்கள் ஏறமுயன்று சறுக்கிய மரம்
நாங்கள் கைகள் கோர்த்து அணைத்த மரம் 
எங்கள் இலுப்பை மரம்.
மழையிரவு பேய்புயலுக்கு 
மண்ணிலிருந்து வெளியேறி 
தரையில் சரிந்த மரம் அதன் 
உச்சியிலேற்றிக் கொண்டது எங்களை.
முப்பது வருடங்களுக்கு முன் விழுந்தும்
இன்னும் பட்டுப்போகாத
அம்மரத்திலிருந்துதான்
இப்போது குதித்தெழும்புகிறேன்'.


{ முத்துராசா குமார் - படம் - பிரசாந்த் சுவாமிநாதன் }

Comments