மதுரையின் பெருமை - அழிக்கப்படும் தமுக்கம்

மதுரையின் தொன்ம வரலாற்றுப் பொக்கிஷங்களில் தமுக்கம் மைதானமும் ஒன்று. 1600ம் ஆண்டு காலவாக்கில் மதுரையை ஆண்ட ராணி மங்கம்மாள் உருவாக்கிய மைதானம்தான் தமுக்கம். யானைகள், குதிரைகள், கிடாய்கள் என்று விலங்குகளுக்கு இடையேயான பொழுதுபோக்குச் சண்டைகள் மற்றும் பல வீர விளையாட்டுகள் நடக்கும் களமாக தமுக்கம் இருந்துள்ளது. இந்தக் காட்சிகளை தனது அரண்மனையிலிருந்து ராணி மங்கம்மாள் ரசித்துப் பார்ப்பாராம். அந்த அரண்மனைதான் 1959ம் ஆண்டில் காந்தி அருங்காட்சியமாகப் மாற்றப்பட்டது. 'டமுக்கு' அடித்து மக்களைக் கூட்டுமிடமாகவும் தமுக்கம் மைதானம் இருந்துள்ளது. இப்படியாக ராணி மங்கம்மாள் பற்றியும், தமுக்கம் மைதானம் பற்றியுமான வாய்மொழிக் கதைகள் நிறைய இருக்கின்றன. மதுரை மாநகர் மட்டுமின்றி புறநகர் கிராமங்களின் பல பகுதிகளில் ராணி மங்கமாளின் பெயரில் பல கண்மாய்களும், சத்திரங்களும் இன்றும் ஆதாரமாய் இருக்கின்றன. 

தமிழ் நாடகத் தந்தை என அழைக்கப்படும் T.T.சங்கரதாஸ் சுவாமிகள் பெயரில் நினைவு கலையரங்கம் ஒன்றை, மீனாட்சியம்மன் கோவிலின் முகப்புத் தோற்றத்தோடு தமுக்கம் மைதானத்தில்  மதுரை நகராட்சி 1962ம் ஆண்டு நிறுவியது. அப்போதைய தமிழக கவர்னர் விஷ்ணுராம்மேதி அவர்கள் அரங்கத்தை திறந்து வைத்தார். 1968ம் ஆண்டு அண்ணாதுரை அவர்கள் முதல்வராக இருக்கையில் T.T.சங்கரதாஸ் சுவாமிகள் சிலை மைதான முகப்பில் நிறுவப்பட்டது. அண்ணாதுரை அவர்களுக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அவரால் சிலைத் திறப்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முடியவில்லை. பிறகு, அப்போதைய மதுரை மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.நரசிம்மன் அவர்கள் சிலையைத் திறந்து வைத்தார். 1981ம் ஆண்டு எம்.ஜி.ஆர் அவர்கள் முதல்வராக இருக்கையில், ஐந்தாம் உலகத்தமிழ் மாநாட்டையொட்டி தமுக்கத்தின் 'மூவேந்தர் நுழைவுவாயில்' திறக்கப்பட்டது. அதே ஆண்டுதான் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி அவர்களின் முன்னிலையில் நுழைவுவாயிலில் தமிழன்னை சிலை திறக்கப்பட்டது. 

மதுரை மாநகராட்சியின் பொறுப்பிலிருக்கும் தமுக்கம் மைதானம் பத்து ஏக்கர் பரப்பளவிற்கு உள்ளது. தமிழன்னை மற்றும் சங்கரதாஸ் சுவாமிகள் சிலை நுழைவுவாயிலுக்கு வெளியே உள்ளன. உள்ளேயிருக்கும் கலையரங்கம் கிட்டத்தட்ட நான்கு ஏக்கர் பரப்பளவிற்கு  உள்ளது. மீதி பகுதி முழுக்க மைதானம்தான். அரசியல் கட்சிகளின் மாநாடுகள், அரசு மற்றும் தனியாரின் பெரிய விழாக்கள், விளையாட்டுப் போட்டிகள், சித்திரைப் பொருட்காட்சிகள், புத்தகக் காட்சிகள் என்று பல விழாக்கள் இங்கு நடைபெறும். வாடகைத் தொகை நிர்ணயித்து வசூலிப்பது மாநகராட்சிதான். தமிழக அரசியல், தொன்மம், வரலாறு, சித்திரைத் திருவிழா காலத்தில் மக்கள் கூடும் பண்பாட்டுத் தொடர்பியல் வெளி, மதுரை மக்களின் நினைவலைகள், ஜல்லிக்கட்டு போராட்டம் என்று காலத்தின் சாட்சியங்களையும், வரலாற்றுப் பெருமைகளையும் கொண்டுள்ளது தமுக்கம் மைதானம். 

தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான மாநில கபாடி போட்டி 15-03-2020 ஞாயிறன்று நடந்து முடிந்தது. பழமையான தமுக்கம் மைதானத்தில் கடைசியாக நடந்த முடிந்த நிகழ்வு இதுதான். 16-03-2020 திங்கள் முதல் தமுக்கம் மைதானம் மூடப்பட்டு கலையரங்கம் இடிக்கப்பட்டு வருகிறது. எதிர்வரும் சித்திரைத் திருவிழாவுக்கு மைதானத்தைப் பயன்படுத்த முடியாது என்று மாநகராட்சி அறிவித்துள்ளது. மாநகராட்சியில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறவேயில்லை. மாமன்ற உறுப்பினர்கள், மேயர் யாருமே இல்லாமல் அனாதையாமாக இருக்கிறது மதுரை. இந்த நிலையில் மதுரை மக்களின் கருத்துகளைக் கேட்காமல், முழுக்க முழுக்க அதிகாரிகளின் அவசர முடிவுகளோடும் முறையற்ற, தெளிவற்ற அறிவிப்புகளோடும் நடக்கும் இந்த செயல் மதுரை மக்களிடையே பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது. 

மதுரை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 45கோடி ரூபாய் செலவில் சங்கரதாஸ் சுவாமிகள் நினைவு கலையரங்கத்தை இடித்து இன்னும் பிரம்மாண்டமாகக் கட்டவும், கூடுதலாக அரங்க கட்டிடங்கள், உணவு விடுதிகள், பார்க்கிங்குகள் கட்டவும் அந்த திட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் இரண்டு வருடங்களுக்கு கட்டுமான வேலைகள் நடக்குமென்றும் அனைத்து ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் தகவல்கள் வெளிவந்தன. இதை எதிர்த்தும், ஆதரித்தும் செய்திகள் வெளிவந்தன.

மாநகராட்சியின் வாடகை வருமானத்தைப் பெருக்கவும், வணிக வளாகங்கள், கூடுதல் அரங்குகள் கட்டவும் மாட்டுத்தாவணிக்கு அருகே மாநகராட்சிக்கு சொந்தமான இடங்கள் இருக்கின்றன. அங்கே கட்டிக்கொள்ளலாம். 

இதுபற்றி கேட்க மதுரை மாநகராட்சியின் ஆணையர் விசாகன் அவர்களைத் தொடர்புகொண்டால் அவரது உதவியாளர், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் நகரப் பொறியாளர் C.அரசு அவர்களிடம் பேசச் சொன்னார். C.அரசு அவர்களைத் தொடர்புகொண்டு பேசுகையில் 'கலையரங்கத்தை மட்டும்தான் இடிக்கப் போகிறோம். மற்றபடி எதுவுமில்லையென்று' சொல்லிவிட்டார். இந்தத் திட்டத்திற்கான முறையான அறிவிப்பு ஆணைகளைப் பொதுவெளியில் தெளிவாக வெளியிடவில்லை. மதுரை மாநகராட்சி இணையதளத்தில் உள்ள ஸ்மார்ட் சிட்டி திட்டம் செயலியிலும் இதுவரை வெளியிடவில்லை என்ற குற்றச்சாட்டு மக்களிடையே எழுந்துள்ளது.

கிராமங்களின் ஒன்றியம்தான் மதுரை மாநகர். அவ்வளவு முரண்களோடு ஸ்மார்ட் சிட்டி திட்டம் என்ற பெயரில்  மதுரையை வெத்து பிரம்மாண்டமாக காட்ட முயல்கிறது அரசு. மதுரையின் புறநகர் கிராமங்களில் வெளிப்படையாகவே நீதிமன்றத் தடைகளை மீறி மணல் திருட்டு நடக்கிறது. நகருக்குள் இருக்கும் வைகையின் ஊற்றுக் கண்கள் செத்து பல காலமாகிறது. முழுக்க ஆக்கிரமிப்புகள், கழிவு நீர் கலப்பு, குடிநீர் பஞ்சம். இந்தப் பிரச்சனைகளுக்குத் தீர்வு காணாமல் ஆற்றிற்கு குறுக்கே கூடுதல் அணைக்கட்டுகளைக் கட்டியுள்ளனர். இருகரைகளிலும் பெரிய மதில்களைக் கட்டிவருகின்றனர்.

ஆற்றிற்கு நடுவே இருக்கும் நூற்றாண்டுகள் கடந்த 'மைய மண்டபத்தை' மராமத்து செய்கிறோம் என்ற பெயரில் நவீன முறைக் கட்டிட பாணியைப் புகுத்தி, பழமையான கட்டிட பாணியைச் சிதைத்து இவர்களே கண்டுபிடித்த புதுவித பாணியில் அந்த மைய மண்டபத்தைக் கட்டி வருகின்றனர்.

பேருந்துகளின் தரத்தை உயர்த்தாமல், சுற்று வட்டார கிராமங்களுக்கு கூடுதல் பேருந்துகளை இயக்காமல் பெரியார் பேருந்து நிலையத்தை மட்டும் ஸ்மார்ட்டாக கட்டிக் கொண்டிருக்கின்றனர். ஆயிரக்கணக்கான சாமானிய மனிதர்களின் சில்லரை வியாபாரங்களுக்கும் அன்றாட பிழைப்புகளுக்கும் வழிகொடுத்தது பழைய பெரியார் பேருந்து நிலையம்.  கட்டப்படும் ஸ்மார்ட் பேருந்து நிலையம் கை வண்டிகளோடும், காய்கறிகள், பழங்கள், பூ கூடைகளோடும் இனி அவர்களை அனுமதிக்குமா என்றுத் தெரியவில்லை. 

நகருக்குள் இருந்த சிற்றோடைகள், கண்மாய்கள், வாய்க்கால்கள் எல்லாம் கட்டிடங்களுக்குக் கீழே புதையுண்டுச் செல்கின்றன. எஞ்சியவைகளை மீட்க வழியில்லை. அன்றாடங்களுக்குப் பயன்படும் தார்சாலைகள் கொதரப்பட்டுக் கிடக்கின்றன. பெரிய தொழிற்சாலைகளை மட்டும் நம்பியிருக்கும் நகரங்களில் போடப்படும் ராட்சத மேம்பாலங்கள், பல மூப்பு மரங்களை அழித்து மதுரைக்குள் போடப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

பழமைவாதத்தோடு கைகோர்த்து நவீனமாக வளரும் சாதிய முரண்கள், களவாடப்படும் இயற்கை வளங்கள்,
முறையாக ஆவணப்படுத்தப்படாத தொல் எச்சங்கள், அதிகரிக்கும் கொலைக் குற்றங்கள் குறிப்பாக சிறார் குற்றங்கள், சரளமாகப் புழங்கும் கஞ்சா வஸ்துகள், அரசு மருத்துவமனையின் நிலை, மதுரைக்குள் இயங்கும் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகத்தின் நிலை, 
அந்தக் கல்விக்கான உள்ளூர்  வேலைவாய்ப்புகள், விவசாயத்திற்கான நீர் பாசனங்கள், உதிரி வேலைகளின் ஒருங்கமைவு என்று மதுரைக்கு எது தேவை எது தேவையில்லை என்று மிக மிக அடிப்படையானவற்றை ஒழுங்கு செய்யாமல், வெறும் கட்டிடங்களையும் மேம்பாலங்களையும் மட்டும் எழுப்பி, அதுவும் நகரின் புராதன அடையாளங்களை தரைமட்டமாக்கித்தான் 'மதுரை ஸ்மார்ட் சிட்டி' என்று வெட்டி பகுமானம் கொழிக்கிறது அரசும், மாநகராட்சியும்.

உதாரணமாக, மதுரையின் வரலாற்றுப் பெருமைகளைச் சொல்லும் ஓவியங்களை 
நகர் முழுக்க மாநகராட்சியினர் வரைந்து கொண்டே மறுபுறம் அதற்குண்டான தடயங்களை அழித்து வருவது. 

காலவோட்ட சகிப்பும், நவீனமும், வளர்ச்சியும் மனித இனத்திற்கு மிக அவசியமான ஒன்று. அது மதுரைக்கும் மிகத் தேவையான ஒன்றுதான். ஆனால், அவையனைத்தும் யாருக்கான கீரிடமாகவும், லாபமாகவும் இருக்கிறதென்று பார்த்தால் அது இறுதியாக மதுரையின் அரசியல் அதிகார முதலாளிகளுக்கும்,செல்வந்தர்களுக்கும்தான் இருக்கிறது. இறந்துபோன கன்றுக்குட்டிக்குள் வைக்கோலை திணித்து உயிருடன் இருப்பதுபோன்ற தோற்றமாக்கி, தாய் பசுவின் மடுக்காம்புகளில் பால் கறக்கும் செயல்தான், கரும்புழுதி படிந்த மதுரை ஸ்மார்ட் சிட்டி திட்டமும் அதற்கு இரையாகிக் கொண்டிருக்கும் தமுக்கம் மைதானமும்.

இன்னும் சில வருடங்களில் தமுக்கத்தைத் திறக்கத்தான் போகிறார்கள். அப்போது அது, மைதானமாகவும் இருக்காது. மதுரைக்கானதாகவும் இருக்காது.


கட்டுரை மற்றும் படங்கள் 
- முத்துராசா குமார் 

மின்னம்பலம்

https://minnambalam.com/public/2020/03/21/22/-story-about-madurai-thamukam-ground

Comments