TRANSGRESS: கதைகள் கேட்கும் படைப்பாளர்கள்
சென்னை பெசன்ட் நகரிலுள்ள ஸ்பேசஸ் அரங்கில் 'TRANSGRESS' என்ற தலைப்பில் ஓவியங்கள், சிற்பங்கள் மற்றும் புகைப்படக் கண்காட்சி சமீபத்தில் நடைபெற்றது. கலைத்துறையில் உதிரிகளாக வேலை செய்வதை விட ஒரேயிடத்தில் கூடி, தங்களது கலைகளை விரித்துப் போட்டு அவற்றை ஒழுங்குப்படுத்திக் கண்காட்சியாக்கும் நோக்கம்தான் இவர்களின் TRANSGRESS. Transgressன் முதல் கண்காட்சி இது. சுஜீத்குமார்ஸ்ரீகந்தன் கண்காட்சியினைத் தொகுத்திருந்தார். விஷ்ணு சசி, க்ளமன்ட் ராஜ், ஜிபின் பாபு, மணி கே ஐயப்பன், ரிஷி சசி என்ற ஐந்து இளம் படைப்பாளிகள் தங்களது படைப்புகளை பொதுமக்களின் பார்வைக்கு வைத்திருந்தனர். அனைவரும் கேரளாவைச் சேர்ந்தவர்கள். ரிஷி சசி சென்னைக் கவின்கலைக் கல்லூரியில் சிற்பவியல் பயின்று வருகிறார். மணி கே ஐயப்பன் பெங்களூரில் புகைப்படக் கலைஞராக இருக்கிறார். மற்ற மூவரும் கேரளாவிலுள்ள ராஜா ரவிவர்மா கவின்கலைக் கல்லூரியில் அப்ளைடு ஆர்ட்ஸ், சிற்பவியல், ஓவியம் பயின்று வருகின்றனர்.
ரிஷி சசி
சுடுகளிமண், காகிதக் கூழ், மரக்கட்டைகள் என்று அன்றாடத்திலிருந்து கிடைக்கும் பொருட்களைச் சேகரமாக்கி SOLUTION ON CONDITIONS என்ற தலைப்பில் சிற்பப் படைப்பை உருவாக்கியிருந்தார். மனித மூக்கினை மட்டும் கறுப்பு, வெள்ளை நிறங்களில் விதவிதமாக செதுக்கியிருந்தார். மனிதயினத்தின் ஐம்புலன்களுக்கும் சமூகத்திற்கும் இடையிலான தொடர்புகளை முன்வைப்பதுதான் இவரது படைப்பு. புறாக்கூண்டினைப் போன்ற சட்டகங்களுக்கு நடுவே மூக்குகள் இருக்கின்றன. மூக்கினை கயிறுகள், கம்பிகள் இழுத்துப் பிடித்துக் கட்டியிருக்கின்றன. நாசித் துவாரங்கள், மூக்கின் தண்டு என்று அனைத்தும் கயிறுகளால், கம்பிகளால் வரிவரியாக மறைக்கப்பட்டிருக்கின்றன. இப்படைப்பு சார்ந்து யாராவது சொன்ன மறக்க முடியாதக் கருத்துகள் ஏதும் இருக்கிறதாவென கேட்கையில்...
'ஒரு அறையில் குண்டுபல்பு வெள்ளிச்சத்தின் கீழே இந்தப் படைப்பு பார்வைக்கு இருந்தது. ரொம்ப நேரம் அந்தப் பல்பு எரிந்ததால் வெப்பம் அதிகமாகி ஒருவித வாடையடிக்க ஆரம்பித்தது. அந்த நேரத்தில் இந்த சிற்பத்தைப் பார்த்த ஒருவர், சிற்ப மூக்கும் அந்த வாடையை நுகர்ந்தது போல இருப்பதாகச் சொன்னார்'
க்ளமன்ட் ராஜ்
முடிந்தளவு கரிக்கட்டையை மட்டும் பயன்படுத்தி QUEST FOR THE UNKNOWN தலைப்பில் ஓவியங்களை வரைந்திருந்தார். உயரமாகவும், நீளமாகவும் இருக்கும் படிக்கட்டுகள், குகைகள், சிக்கலான பாதைகள் என்று அனைத்திலும் மனிதர்கள். அவர்கள் எதை எதையோ தேடி அலைந்தபடி இருக்கிறார்கள். மனிதர்களுக்குள் மனிதர்களும் வசிக்கிறார்கள். சிலர் வானிலும் அலைகிறார்கள். அதே வானிலிருந்தும், நீலமேகத்தில் அமர்ந்தும் றெக்கைகள் முளைத்தத் தேவதைகள் மனிதர்கள் அனைவரையும் கவனித்துக் கொண்டிருக்கின்றனர். சில மேகங்களில் தேவைதைகளின் கீரிடங்கள் மட்டும் இருக்கின்றன. கீழேயிருக்கும் மனிதர்களின் பயணத்தில் அவர்கள் செய்யும் நன்மை, தீமைகளுக்கு ஏற்ப அந்தத் தேவைதைகள் வரங்கள் தருவது போலிருந்தன. குழந்தைகள் கதைகள், நாட்டார் கதைகள் போன்ற உணர்வைத் தந்தன இவரது ஓவியங்கள்.
மணி கே ஐயப்பன்
MAN WITH NO REACTION என்ற தலைப்பில் புகைப்படங்களை எடுத்திருந்தார். தற்கால சமூக சூழலில் சக மனிதன் மீதான சகிப்பும், கரிசனமும் வற்றி வருவதைப் பிரதிபலிக்கும் விதமாக இவரது புகைப்படங்கள் இருந்தன. பெங்களூர் போக்குவரத்து நெரிசலில் நடக்கும் விபத்துகளில், காயமுறும் மனிதர்களைக் கண்டும் காணாமல் செல்லும் மனிதர்கள்தான் இந்தப் படங்களை எடுக்கத் தூண்டியுள்ளனர்.
வெள்ளைத் துணியால் முற்றிலும் முகம் மூடப்பட்ட மனிதர்கள் இருக்கிறார்கள். ஓவ்வொருவரும் ஒவ்வொரு செயலை செய்கின்றனர். தனது கழுத்தை தானே நெரிக்கிறான், துணியைக் கிழிக்க முயல்கிறான், துணியை இறுக்கிக் கட்டுகிறான், காற்றில் எதையோ தேடுகிறான், கையில் சிலுவையை வைத்துக்கொண்டு யாருக்கோ அன்பை வழங்குகிறான், கறுப்புத்துணியால் முகம் மூடிய ஒருவன் அருகில் இருக்கிறான். எதையோ சொல்ல வருகிறான், தூக்குக் கயிற்றால் இறுக்கப்படுகிறான். எதிலுமே முகங்கள் தெரியவில்லை. நமது சுயத்தை நாமே அறிந்துகொள்ளத் தூண்டிடும் புகைப்படங்களாக இருந்தன.
ஜிபின் பாபு
ALONE என்றத் தலைப்பிலான இவரது படைப்புகள், கனவுகள் அனைத்தும் எறும்புகளால் ஆனது. சமூகம் மற்றும் தனிப்பட்ட வாழ்வு சார்ந்த தனிமையில் ஜிபின் பாபுவை எறும்புகள் துரத்துகின்றன. அந்தத் தனிமைகளை எறும்புகளாலேயே கையாண்டு வெளியேற முயல்கிறார். அதுவும் அந்த எறும்புகள் இரும்புக் கம்பிகளால் செய்யப்பட்ட கட்டெறும்புகள். கனமான அவ்வெறும்புகள் பன்னிரெண்டு பாகங்களாக பிரிக்கப்பட்ட ஓவியச் சட்டகத்தில் எல்லா இடங்களிலும் மொய்த்தபடி இருக்கின்றன. நடுவில் வண்ணமற்ற ஒரு சட்டகத்தில் மட்டும் தனித்த எறும்பொன்று இருக்கிறது. அதேநேரத்தில் மற்றொரு ஓவியத்தில் ஒரு இடத்தில் மட்டும் எறும்புகள் கூட்டமாக மொய்க்கின்றன. இன்னுமொரு ஓவியத்தில் எறும்பு விழுந்த கண்களைத் திறந்து பார்ப்பது போன்றிருக்கும். கருமணியும் வெண்திரையும் அற்ற அந்தக்கண் கட்டாந்தரையாகத் தோற்றமளித்தது.
விஷ்ணு சசி
மனிதர்கள், பிராணிகள், நிர்வாணம், உணவு, பொழுதுபோக்கு, போதை, கல்வி என்று அனைத்தும் ஒன்றுக்கொன்றுத் தொடர்பில் இருப்பது போலான விஷ்ணு சசியின் படைப்புகள் INTROSPECTIVE தலைப்பிலானவை. இங்கே எல்லாமே ஒரு விஷயத்தின் தொடர்சியாகத்தான் இருக்கிறது என்பதை இவரது படைப்புகள் வெளிக்காட்டின. காகிதங்கள், வாட்டர் கலர், அக்ரலிக் என்று பலவண்ணங்களில் நுட்பமாக கதைகள் சொல்லும் இவரது ஓவியங்கள் நாம் தினமும் பயன்படுத்தும் பொருள்களினால் உருவாக்கப்பட்டவை.
தாங்கள் நினைத்தக் கருவினை அவர்களது படைப்பினுள் அரூபத்தனமாகவோ, வெளிப்படையாகவோ இந்தப் படைப்பாளிகள் வைத்திருந்தனர். சிலவற்றில் அந்தக் கருவை உடனடியாகவோ, சற்று தாமதமாகவோ கண்டுகொண்டேன். அத்தருணத்தில் நானும், அந்தப் படைப்பும், படைப்பாளியும் இறுகப் பிணைந்து கொண்டோம். அத்தருணம் அரிதான ஒன்று.
எந்த அறிவுத்தனமும், விதிகளும் இல்லாமல் எனக்கு என்னத் தோன்றியதோ, அதை சில படைப்புகளில் முன்வைத்தேன். அதை ரசனையாகவும் பாடமாகவும் அவர்கள் எடுத்துக்கொண்டு, புதியதொரு வாசலும், கோணமும் பிறக்க அவற்றைப் பயன்படுத்திக் கொண்டனர். இப்படியாக தங்களது படைப்புகளைப் பார்வையாளர்களிடம் ஒப்புக்கொடுத்துவிட்டு கதைகள் கேட்டுக்கொள்ளும் படைப்பாளர்கள்தான் இவர்கள்.
கட்டுரை மற்றும் படங்கள் - முத்துராசா குமார்
மின்னம்பலம்
Comments
Post a Comment