சாக்பீஸ்கள் 
பெரியவர்களின் காலெலும்புகள்
சிலேட் குச்சிகள் 
பிஞ்சுகளின் காலெலும்புகள்.
எட்டுவைத்து எட்டுவைத்துச் செல்வதால்
நாட்டின் வரைபடமெங்கும்
வெள்ளைக்கோடுகள்.
பிறழ்வில் கிறுக்கப்படும்
சாபசினத்தின் வரிவடிவங்களவை.
குட்டிகளை வாயில் கவ்வியேந்தும்
விலங்குகள் வராததால்
பறவைகளின் நகக்கால்களை வேண்டி
கரையும் கால்கள் 
சூரியனையும் நிலவையும் 
லட்சியமாக்கிக் கொண்டன.
யாத்திரையில் உடைந்துவிழும்
சிலேட் குச்சிகள்
வரைபடத்தினுள் நடப்பட்டு
தூரில் நீருற்றப்படுகின்றன.
தாவரங்களைப் போல மனிதர்களுக்கும் றெக்கையிலைகள் அரும்பட்டுமென
நீருறிஞ்சும் பிஞ்செலும்புகள்
வாக்குவிட்டு வழியனுப்புகின்றன.


{முத்துராசா குமார் - ஓவியம் - Tom Vattakuzhy}

நன்றி - விகடன் 

Comments