கவிஞர் மௌனன் யாத்ரீகா அவர்கள் எனக்கு முன்வைத்த கேள்விகளுக்கான பதில்கள்.

1.
கவிதைகளை ஆவணங்களாகக் கொண்டது தமிழ்ச் சமூகம். அந்தப் புரிதலோடு உங்கள் கவிதைகளுக்கு அந்தப் பொறுப்புணர்வை ஏற்றுகிறீர்களா?

ஒரு பொருளையோ (உயிருள்ள/உயிரற்ற) சொல்லையோ அல்லது இவையிரண்டும் ஒட்டியிருக்கும் வாழ்வியல் கூறுகளையோ, அதற்குண்டான சாட்சியங்களையோ 
இறந்துகாலத்திற்குள் போகவிடாமல் பத்திரப்படுத்தி வைத்திருக்கையில் 
அவை ஆவணங்களாகின்றன. 
இறந்தகாலத்திடம் எப்படியோ தப்பித்த மிச்சமானவைகளும் நிகழ்காலத்தில், எதிர்காலத்தில் ஆவணங்களாகின்றன. ஆவணத்தன்மை பொறுப்பென்ற முன்முடிவோடு நான் என் கவிதைகளை எழுதுவதில்லை. 

கவிதைகளை எழுதி முடித்தவுடன் அல்லது சிறிய கால இடைவெளிக்குப் பிறகு அக்கவிதைகளைப் பகுப்பாய்கையில் ஏதாவது ஒரு ஆவணம் (நான் சார்ந்த நிலம் - நிலம் சார்ந்த அனைத்து காரணிகளும்) புனைவாக வெளிப்பட்டு நிற்கிறது. இந்த நிகழ்வுகள் எனது ஆழ்மனதில் சுழலும் இயல்பாகவே பார்க்கிறேன். இவ்வியல்பு எப்படி நிகழுகிறது என்பதை வாசித்து வாசித்து  - எழுதியெழுதிப் பார்த்து அது சார்ந்து பயணித்து கண்டுபிடிக்க முயற்சிக்கிறேன். இப்படியான ஆவண சம்பவங்கள் நிகழுகையில் அக்கவிதையும் முனியேறிய உடம்பாக கவிதை ஆவணங்களாகி, நீங்கள் சொன்னப் பொறுப்புணர்வு தானாக உருவாகிக் கொள்கிறது.

2.
நடப்பு சமூகத்தின் பண்பாட்டுக் கூறுகளை கவிதையில் உட்பொதியும்போது ஒரு கவிஞனாக அடையும் உணர்வெழுச்சிகள் எவ்வாறானவை?

ஒவ்வொரு நிலத்திற்கும் ஒவ்வொரு பண்பாட்டுக் கூறுகள் உண்டு. 
நமது பண்பாட்டுக் கூறுகளைப் பற்றி பேசுகையில் காலங்களில் அது எவ்வாறு பயணித்து வந்தன. அந்தப் பண்பாட்டுக் கூறுகள் என்னுடைய இருப்பில் எப்படியான தாக்கம் செலுத்துகின்றன.
நான் அவற்றை என்னவாகப் பார்க்கிறேன். பண்பாட்டுக் கூறுகள் களவாடப்படுகிறதா திரிக்கப்படுகிறதா, அடிப்படையான மானுடத்திற்கு என்னவிதமான பண்பாடுகள் தேவை, தேவையில்லை, அப்பண்பாட்டு கூறுகள் ஆக்கப்பூர்வமான பெருமிதமா? இல்லை வெட்டிப் பெருமிதமா? அதிகாரங்களுக்கு ஏற்றபடி உருவாக்கப்பட்டிருக்கும் பண்பாடுகளின் சாதக பாதகங்கள்... என்று 

நான் ஒரு பண்பாட்டுக் கூறினை கவிதையினுள் கொண்டுவருகையில் இம்மாதிரியான உணர்வெழுச்சிகளை எனக்குள் எழுப்பி உரையாடி தெளிவு கொள்ள முயல்கிறேன்.

3.
கவிதைக்கென்று கோட்பாடுகளை வைத்துக்கொண்டு எழுதும்போது கவிதைக்கு நியாயம் செய்ய முடியுமா?

மொழி, அரசியல், வடிவம், சொல்லல் முறை,  அழகியல் என்று பல துறை வகைமைகளில் ஒவ்வொரு காலகட்டத்திலும் கவிதைகளுக்கான கோட்பாடுகள் உருவாக்கப்பட்டுக் கொண்டேதான் இருக்கின்றன. வாசிப்பவர்களின் மனநிலைகள் பொறுத்து இவைகள் மாறுபடும் குணம் கொண்டவைகள்.
அந்தக் கோட்பாடுகளை வைத்துக்கொண்டு கவிதை எழுதுவதில் நியாயம் செய்ய முடியுமா? என்று பார்த்தால், என்னைப் பொறுத்தவரையில் அக்கோட்பாடுகளைப் பக்கத்தில் வைத்து எழுதுகையில் ஒருவிதத் தடைகள் என்னை சூழ்வது போல உணர்வேன்.

அதிமூப்பு ஏறிய கவிவடிவை
மிகச் சுதந்திரமான கலைவடிவமாக 
நான் பார்க்கிறேன். கோட்பாட்டுப் பார்வைகள், சூத்திரங்கள் எல்லாவற்றையும் தாண்டி இறுதியாக அக்கவிதை வரிகள் எக்காலத்திலும் மனிதவுயிர் அகத்தோடு நெருக்கமாகிறதா, உணர்வுப்பூர்வத்தை கிளறிவிடுகிறதா என்பதே என்னளவிலான எளிய கருத்து. கோட்பாடுகள் கவிதைகளை மதிப்பிடும், தரம்பிரிக்கும், கவிதையில்லை என்று சொல்லும் அதனால் கோட்பாடுகளைப் புறந்தள்ளும் செயலல்ல இது. வளர்ப்புக் கிடாயின் விளையாட்டு முட்டுகள்.


அன்பும் நன்றியும்

{ முத்துராசா குமார் - ஓவியம் - Tom Vattakuzhy }

Comments