குடி நோயாளிகளின் 
மறுவாழ்வு இல்லத்தில் 
பிரசித்திப் பெற்றவன் நான்.
குழந்தைகளின் பிரம்மாண்டமற்ற
உண்டியல் மாதிரியான எனது வாய்க்குள் அச்சகத்தின் எழுத்துரு கட்டைகளை
சேமித்திருக்கிறேன்.
கீறிப் பார்த்திட அவசியமில்லை
ரம்மைவிட அடர்வான மை தான் உடம்புக்குள் சுழற்சியாகிறது.
ஆல்கஹாலில் ஊறியும் 
அரித்திடவில்லை கட்டைகள்.
நான் சொல்பேச்சு கேட்டால்
தின்பதற்கு நேரந்தவறாது
காகித கட்டுகள் தருவார்கள்.
அப்போதெல்லாம்
இல்ல ஊழியர்களைப் பார்த்து
நன்னாளின் வர்ணமாக சிரிப்பேன்.
வெறியாகையில் கழிவறைக்குள் கட்டுப்போட்டு அடிப்பார்கள்.
கண்ணீரஞ்சலி சுவரொட்டியாக
கதறுவேன்.


•••


கைப்பேசி எண்ணை எம்மனிதர்களிடமும் பகிர்ந்து பெறாதளவிற்கு
பதட்டநிலையானவன் நான்.
ஒட்டடைக் குச்சியின் நார்தலையை
பிய்த்துவிட்டு அதில் சுடர் மாட்டியும்
எனது பதட்ட நூலாம்படைகளை
பொசுக்க முடியவில்லை. 
வளர்ப்புப் புறாக்களில் மட்டும்
எண்களை சூட்டுக் கோலால் எழுதியிருக்கிறேன்.
கூடு திரும்ப வழிமறந்து 
யாரிடமாவது அகப்படுகையில்
எனக்கு அழைப்பு வருமென்ற நம்பிக்கை. 
வேறுநிலத்தின் எண்ணிலிருந்து 
அழைப்பும் வந்தது.
அகாலத்தில் விடாமல் ஓங்கித் தட்டப்படும் கதவுகளானது இருதயம்.
அழைப்பின் பக்கத்தில் நெருங்கவேயில்லை.
அனாதையான புறாமுட்டையை
அடைகாத்தபடி என் பதட்டத்தை நானே
துப்பிக் கொண்டேன்.


••

முத்துராசா குமார்


நன்றி | நடுகல் இதழ் 8

(கொரோனா கால இதழ்)

Comments