மங்கலான மஞ்சலொளிக்குள் இருக்கும் புகைப்படக் கலைஞர் வினோத் பாலுச்சாமி அவர்களின் 'யா' ஸ்டூடியோவினையும்,
அவர் எடுத்தப் நிழற்படங்களையும்,
அவரையும் அடிக்கடி ஆழ்ந்து பார்க்கையில் எப்போதும் எனக்குள் ஒரு சட்டகச் சித்திரம் வந்து போகும். அது, சுழற்காற்றின் நடுவே மாடாக்குழிக்குள் நிதானமாய் பிரகாசிக்கும் கிளியாஞ்சட்டியின் திரிசுடரே. 'நேர்த்திக்கடன்' என்ற Visual poem உருவாக்க வேலைகளில் வினோத் பாலுச்சாமி அவர்களுடனிருந்து வேலை பார்த்த தருணங்களில் அச்சுடரின் மெதுசூட்டை அனுபவித்திருக்கிறேன்.
அப்போது, 'ஹேண்ட் மேட்' காகிதங்களில் அவரது கைகளால் எழுதியும் வரைந்துமிருந்த 'யாத்ரீகனின் பாதை' பயணக்கதைகளை படித்துப் பார்க்கையில்தான் தெரிந்தது அவரது காமிரா மட்டுமில்லாது அவரது உடம்புக்குள்-மனதுக்குள் கடலும், ஆமைகளும், திமிங்கலமும், காடுகளும், பழங்குடிகளும், மனிதவுயிர்களும், வெவ்வேறு புவியியல்களும் மண்டிக் கிடப்பது.
ஒரே ஆளே பயணியாகவும், புகைப்படக் கலைஞராகவும், எழுத்தாளராகவும் வாழும் பட்சத்தில் அவரிடமிருந்து பகிரப்படும் சொற்களும், கதைகளும், படங்களும் நம்மை பலவாறான உணர்வுகளுக்கு ஆளாக்கி நம்முள் ஒரு மாயத்தை நிகழ்த்திக் காட்டும்.
அம்மாயத்தைத்தான் அரங்கேற்றுகிறது வினோத் பாலுச்சாமியின் 'யாத்ரீகனின் பாதை' ஒளிப்பட பயணக்கதைகள் நூல்.
கிட்டத்தட்ட 53 நிழற்படங்களுடன் கடற்பயணி, தூரதேசம், வழித்துணை, பிரபஞ்ச பாஷை, ஒற்றைப் பாதை, பறப்பதுவே, காலக்கண்ணாடி, ரசவாதம், எறும்புக் கூட்டம், இரவின் காலங்கள், முதல் கடல், மலை மக்கள், மனம் மேலிருக்கும் வானம், கடந்த காலம், தாகசாந்தி, நீர் வழி உறவு, அன்பு வலை, உள்முகம், நினைவலை, திசையறியா பறவைகள், நெடுந்தூரம், போர்க்காலம், தேநீர் நட்பு, காகிதக் கப்பல், தூதுவன், அன்புடையர், ஆதி மனம், வெளிச்சமான இரவுகள், கண்...காட்சி...காலம், காட்டுச் செடி என்ற அடர்த்தியான அனுபவத் தலைப்புகளில் வினோத் பாலுச்சாமி நம்மிடம் காட்டும் ஒவ்வொரு நிழற்படமும், சொல்லும் ஒவ்வொரு பயணக்கதையும் நம்மை அவரது கடந்த காலத்துக்குள்ளும், அவரது பயணத் தடங்களிலும் அழைத்துச் செல்கிறது.
நெரிசல் ரயில்கள், வித வித மொழிகளாலான நிலம், நீர், மனிதர்கள் அவர்களின் வாழ்வுச் சூழல்கள், சடங்குகள், திருவிழாக்கள், மரங்கள், உயிரினங்கள், பருவநிலைகள், உணவுகள், கொண்டாட்டங்கள், கஷ்டங்கள் என அனைத்தும் அத்தடங்களில் ஆவணமாகிக் கொண்டே வருகின்றன.
தான் பயணித்த ஒவ்வொரு நிலத்திலும் சுற்றுச்சூழலை, கடைத்தட்டு உழைக்கும் மக்களை, பூர்வக்குடிகளை அடக்கியொடுக்கும் அதிகார அரசுகள் மற்றும் அவர்களது வகையறாக்களின் அட்டூழியங்களையும் அவற்றை எதிர்த்து நிற்கும் மக்களின் போராட்டங்களையும் எல்லா இடத்திலும் தவறாது பதிவு செய்கிறார். ஒரு மனிதனாக, ஒரு கலைஞனாக இச்சமூகத்தில் அவனது நகர்வு என்னவாக இருக்க வேண்டும் அந்நகர்வின் தாக்கம் எப்படியாக இருக்க வேண்டும் போன்ற சுயம் அறிதல்களை, சக மனிதவுயிர் மீதான நம்பிக்கையினை, திசைகள் கடந்த பயணத்திலும் கலையிலும் மானுட அடையாளம் மட்டும்தான் மிஞ்சுமென்ற சாட்சிகளை தனது 'யாத்ரீகனின் பாதை' நூலின் மூலம் மிக ரசனையாகப் படைத்துள்ளார் வினோத் பாலுச்சாமி.
ஒரு கலைக்கு நம்மை முழுதாக ஒப்புக்கொடுக்கையில் அக்கலைக்கும் நமக்குமிடையே மகத்தான உரையாடல்கள் நிகழும் என்பதை உணர்த்தும் இந்நூல் முருங்கைமர பசையாக, சோற்றுப் பருக்கையாக எளிய வடிவில் அகத்தில் ஒட்டிக் கொள்கிறது. 'யாத்ரீகனின் பாதை' நிழற்படங்களையும், எழுத்துகளையும்
ஈர உயிர்ப்பாக வடிவமைத்து வெளியிட்டுள்ளது தன்னறம் நூல்வெளி.
புகைப்படக் கலைஞர் வினோத் பாலுச்சாமியின் பயணங்கள் சிறக்க மனமார்ந்த வாழ்த்துகள்!
புத்தகத்திற்கு:
தன்னறம் நூல்வெளி
விலை: ரூ 500
தொடர்புக்கு: 9843870059
thannarame@gmail.com
www.thannaram.in
• முத்துராசா குமார்
Comments
Post a Comment