சென்னைப் பல்கலைக்கழகத்தின் நெருங்கிய நண்பர்களில் ஈழத்தைச் சேர்ந்த நண்பனொருவனும் இருக்கிறான். நிகழ்த்துக்கலை கலைஞன். தென்மாவட்டத்திலுள்ள ஒரு முகாமில் குடும்பத்துடன் வசித்தான். பல்கலைக்கழக விடுமுறைகளில் முகாமுக்கு போய் வருகையில் எப்போதும் கண்காணிப்பு வளையத்திலிருந்த உணர்வுகளை சுமந்தபடிதான் வருவான். வெளியிலும் அப்படித்தான். கேட்ரிங் வேலை, பெயிண்ட் அடித்தல் வேலைகளுக்குப் பகுதிநேரமாக போய்வருகையில் அவனையும் அவனது நண்பர்களையும் தமிழக காவலர்களும், ஊரார்களும் எப்படி அணுகினர் என்பதையும் வெளிப்படையாக பகிர்ந்து கொள்வான்.

அப்போதிருந்தே ஒன்றை உணர்வேன்.  கட்டுரைகள், புனைவு எழுத்துகளின் வழி
நாம் இங்கிருந்தபடியே ஈழத்தைப் படித்துணரும் விதம் வேறு. 
நண்பன் அங்கிருந்து வந்து இங்கு முகாமிலிருந்தபடி ஈழ பிரச்சனைகளை, அது சார்ந்து இங்கு முன்வைக்கப்படும் அரசியல்களை அவனே உயிராதாரமாக இருந்து அறிந்துணரும் விதம் வேறு என்று. 'நீ சொல்லும் அனைத்தையும் ஏதாவதொரு வடிவில் எப்படியாவது ஆவணமாக்கிடு' என்று அவனிடம் அடிக்கடி சொல்வேன். பெருயிழப்பின் வெளிப்பாடாய் ஒரு சிரிப்பையே அவன் பதிலாகத் தருவான்.

சமீபத்தில் அ.சி.விஜிதரன் அவர்கள் எழுதி சிந்தன் புக்ஸ் வெளியிட்ட 'ஏதிலி' நாவலைப் படித்தேன். ஈழத்தமிழர் தமிழக முகாம்களை மட்டும் பிரதானமாக வைத்து மொத்தம் 14 அத்தியாயங்களில் கதைகளைச் சொல்லுகிறது நாவல். முகாம்களின் அசல் வாழ்வியலை மட்டும் சொல்லாமல் முகாம்களின் வாயிலாக ஒட்டுமொத்த ஈழப் பிரச்சனைகளையும் அதன் உள்ளூர், சர்வதேச அரசியல்கள் அனைத்தையும் விரித்துப் போடுகிறது.

இங்குயிருக்கும் முகாம்களின் கையகல வீடுகள், சுகாதார வசதியின்மை, கல்வி இடைநிற்றல், கூலி வேலைகள், க்யூ ப்ராஞ்ச் மற்றும் காவலர்களின் முறையற்ற பேச்சுகள், நடவடிக்கைகள் என பல கூறுகளை முன்வைக்கையில் முகாம்களுக்குள் நிலவும் குழு அரசியல்கள், சாதிய சமய முரண்களையும் வெளி சொல்கிறது. 

தமிழக முகாமிலிருந்து கிளிநொச்சிக்கு நடக்கும் கடித உரையாடல்கள், முகாமிலிருந்து வெளிநாட்டிற்கு புலம்பெயர்ந்து போய் அங்கு நடக்கும் உயிரிழப்பு, வேலைகள் முடித்து இரவுகளில் வீடு திரும்புதலிலுள்ள சிக்கல்கள், முகாம்களை வட்டமிடும் தொண்டு நிறுவனங்கள், ஈழத்தை முன்வைத்து இங்கு செயல்படும் அரசியல் இயக்கங்கள், கட்சிகள், அமைப்புகள் முகாம்களையும் அதன் அடிப்படை வாழ்வாதாரங்களையும் ஆதியிலிருந்து எப்படி கையாள்கின்றன,
தமிழகத்தில் ஆண்டாண்டு காலமாய் நடக்கும் சாதிய ஒடுக்குமுறையின் சாட்சியங்களில் ஒன்றான தலித் குடியிருப்புகளை முகாம்களோடு 
ஒப்பிட்டு பார்த்தல், ஆழ்மனதில் இறுகப்படிந்த நிலமிழந்த வேதனைகள், இருத்தல், அடையாள சிக்கல்கள்
போன்ற பற்பல போக்குகளை சுவாரஸ்யமான கதைசொல்லலில் நம்மிடையே விளக்குகிறார் விஜிதரன்.

உண்மைகளுடனும் வலிகளுடனும் நாவலில் நிறைய நிறைய கேள்விகள் வருகின்றன. அவைகளனைத்தும் மானுடத் தன்மையின் முன்வைக்கப்படும் நியாயமான கேள்விகளாக உள்ளன. தமிழகத்தில் உள்ள ஈழத்தமிழர் முகாம்களின் வாழ்வு ஆவணத்தின் புனைவுப் பிரதியாக இருக்கும் 'ஏதிலி'யை தற்போதைய குடியுரிமைத் திருத்தச் சட்ட கொடுமைகளோடு ஒப்பிட்டு பார்த்தலும் அவசியமாகிறது.

எழுத்தாளர் அ.சி.விஜிதரன் அவர்களின் பயணம் சிறக்க மனமார்ந்த வாழ்த்துகள்!

புத்தகத்திற்கு:
சிந்தன் புக்ஸ்
விலை: ரூ 250
தொடர்புக்கு: 9445123164
Kmcomrade@gmail.com


• முத்துராசா குமார்

Comments