தோழர் தொல்.திருமாவளவன் அவர்கள் எழுதிய 'அமைப்பாய்த் திரள்வோம்'
(கருத்தியலும் நடைமுறையும்)
நூலிலிருந்து சில...
"அரசியல்படுத்துதல் என்பது அமைப்பியல், கருத்தியல் ஆகியவற்றைப்பற்றி மட்டுமின்றி, அமைப்பாக்கப்படும் மக்களின் வாழ்வியல், அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள், அவர்களின் தேவைகள், போராட்டங்கள் மற்றும் அவர்களின் பொதுஉளவியல் போன்றவற்றை மக்களிடமிருந்தே கற்று, தேவையொட்டி அவற்றை அமைப்பாக்கப்பட வேண்டிய மக்களுக்கும் அமைப்பின் பொறுப்பாளர்களுக்கும் கற்பித்தல் என்பனவற்றையும் உள்ளடக்கியதாகும். இத்தகைய 'கற்றலும் கற்பித்தலும்' சமகாலத்தில் நிகழும் ஒரு தொடர்ச்சியான பயிற்சிமுறையே அரசியல்படுத்துதலாகும்.
அரசியல்படுத்துதல் என்னும் இத்தகைய தொடர் பயிற்சி முறையானது, ஒரு நெடுங்கால செயல்திட்டமாகும். அதாவது, இது குறிப்பிட்ட காலவரம்புக்குட்பட்ட செயல்திட்டமாக இல்லாமல், தேவையின் அடிப்படையில் தலைமுறை தலைமுறையாகத் தொடர வேண்டியதாகும். குறிப்பாக, காலப்போக்கில் நிகழும் மாற்றங்களின் அடிப்படையில், மக்கள் நலன்களுக்கேற்ப கொள்கைகளைச் செழுமைப்படுத்துவதும், அக்கொள்கைக்கான அமைப்பை முறைப்படுத்தி வலுப்படுத்துவதும், அவ்வமைப்பின் முன்னணியினர் மற்றும் அதனைச் சார்ந்த மக்கள் ஆகியோரைப் பக்குவப்படுத்தி அவர்தம் ஆளுமைப் பண்புகளை மேம்படுத்துவதும், அடையவேண்டிய இலக்கை எட்டும் காலம்வரையில் இடையறாது இயங்கிவாறே அமைப்பை வெற்றிகரமாக முன்னோக்கி வழிநடத்துவதும் போன்ற யாவும், ஒரு குறிப்பிட்ட காலவரம்புக்குள் நிறைவேற்றக் கூடியவையல்ல. மாறாக, கற்றல்-கற்பித்தல் என்னும் அரசியல்படுத்துதல் அடிப்படையில், ஒரு நீண்டகால நடைமுறையாக நிகழக் கூடியதாகும்"
••
"பெரும்பான்மையின் ஆளுமையே சனநாயகம் என்று புரிந்துகொள்ளப்படும் நிலையே பரவலாக உள்ளது. ஒன்றைவிட இன்னொன்று எண்ணிக்கையில் 'ஒன்று மட்டுமே' கூடுதலாக இருந்தாலும் அதுவே பெரும்பான்மை என்றாகிவிடுகிறது. அந்தப் பெரும்பான்மையே வெற்றி பெற்றதாக ஏற்கப்படுகிறது. வெற்றியே அதிகார வலிமைமிக்கதாக வடிவம் பெறுகிறது. ஒன்றைவிட எண்ணிக்கையில் 'ஒன்று மட்டுமே' குறைவாகவுள்ள
இன்னொன்று தோல்வியடைந்ததாகப் புறந்தள்ளப்படுகிறது. தோல்வியோ அதிகார வலிமையற்றதாக ஓரங்கட்டப்படுகிறது. அதாவது, 'கூடுதலாக ஒன்று' என்கிற எண்ணிக்கை மட்டுமே வெற்றிக்கான அளவுகோலாகக் கருதப்படுவதால், அதுவே சனநாயகமாகவும் ஏற்கப்படுகிறது. சனநாயகத்தின் வரையறையானது, எண்ணிக்கையின் மதிப்பீடுகளிலிருந்து அல்லது பெரும்பான்மையின் ஆளுமைகளிலிருந்து மட்டுமே தீர்மானிக்கப்படுவதில்லை. சனங்களை அல்லது மக்களை முன்நிறுத்துவதில் அல்லது முதன்மைப்படுத்துவதில்தான் சனநாயகத்தின் முழுப்பரிமானம் அடங்கியுள்ளது"
• தொல்.திருமாவளவன்
Comments
Post a Comment