பிடிமண் கவிதைகள் • ஒரு வருடம்


பிடிமண் கவிதைகள் • ஒரு வருடம் 

🌻🌾🌺

சால்ட் - தன்னறத்தின் வெளியீடான 'பிடிமண்' கவிதை நூல் வெளியீட்டு விழா நிகழ்வு, கடந்த வருடம் 2019 செப்டம்பர் 7ம் தேதி மெட்ராஸ் லிட்ரரி சொசைட்டியில் நண்பர்கள், தோழமைகளின் மகிழ்ச்சிகர கூடுகையாலும் அவர்களின் ஊக்கத்தாலும் உதவியாலும் மிக இனிமையாக நடந்தேறியது.

ஓவியர் மனோகர் தேவதாஸ், கவிஞர் வெய்யில், பத்திரிகையாளர் கவிதா முரளிதரன், எழுத்தாளர் அனுராதா ஆனந்த், உதவிப் பேராசிரியர் தங்க. ஜெய்சக்திவேல், எழுத்தாளர் விஷ்ணுபுரம் சரவணன், தமிழ்வெளி கலாபன் ஆகிய தோழர்கள் பிடிமண்ணை வெளியிட்டு கவிதைகள் சார்ந்த தங்களது கருத்துகளை உளமாற பகிர்ந்து கொண்டனர். பேராசிரியர் கோபாலன் இரவீந்திரன் அவர்கள் அனுப்பியிருந்த வாழ்த்துக் கடிதம் நிகழ்வில் வாசிக்கப்பட்டது.

ஓவியர் மணிவண்ணன் அவர்களின் ஓவியக் கண்காட்சி, புகைப்படக் கலைஞர் ஸ்ரீதர் பாலசுப்பிரமணியம் அவர்களின் நிழற்படக் கண்காட்சி, இசைக்கலைஞர் பெஃன்னி அவர்களின் வயலின் இசையென பிடிமண் வெளியீட்டுத் தருணங்கள் அனைவரது நெஞ்சத்திற்கும் மிக நெருக்கமாக அமைந்தது.

தோழர் ஜென்னி பாரதி நிகழ்வினைத் தொகுத்து வழங்க, தோழர்கள் சபரித்தா, பியா, காமாட்சி, சுகு, நந்தா, சாரதி மற்றும் இன்னும் பிற தோழர்களும் நிகழ்வினைப் புகைப்படங்களாக, காணொலிகளாக ஆவணப்படுத்தினர். பழனியப்பன் அண்ணனின் உதவியால் கிடைத்த மரப்பாச்சி பொம்மைகள், தியாகு அண்ணன் வடிவமைத்த டிஜிட்டல் ஆர்ட் தபால் அட்டைகள் அன்பின் பரிசுகளாகத் சரடு முடிச்சிட்டுத் தரப்பட்டன.

பிடிமண்ணை மிகச் செழுமையாக உயிர்ப்பாக்கி வெளிக்கொண்டுவந்த அண்ணன்கள் நரன் - சிவராஜ், ஓவியர் மணிவண்ணன், வடிவமைப்பாளர் மகேஷ், புகைப்படக் கலைஞர் ஸ்ரீதர் பாலசுப்பிரமணியம், விற்பனை உரிமையான தமிழ்வெளி கலாபன் ஆகிய தோழர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகளையும் அன்பினையும் தெரிவித்துக் கொள்கிறேன். 

நிகழ்வில் பிடிமண்ணை வெளியிட்ட தோழர்களுக்கும், நிகழ்வில் கலந்துகொண்ட ஒவ்வொரு தோழமைக்கும், நண்பர்களுக்கும் சால்ட் - தன்னறத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளையும் அன்பினையும் சொல்லிக் கொள்கிறேன். தவிர இந்தப் புத்தகம் வெளிவரவும், நிகழ்வு சிறப்பாய் நடந்து முடியவும் சின்னச்சின்ன அளவில் பங்களித்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகளும் அன்பும்.

இந்த ஒரு வருடத்தில் பிடிமண் 
குறித்தான தங்களது கருத்துகளை, பார்வைகளை, விமர்சனங்களை எழுத்துகள், கலந்துரையாடல்கள், ஓவியங்கள், காணொலிகள், புகைப்படங்கள் என்று பல தளங்களின் வாயிலாக பகிர்ந்து கொண்ட எல்லா தோழர்களுக்கும் மற்றும் ஊடகங்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகளும் அன்பும்.

பிடிமண்ணுக்கு எழுத்தாளர் தஞ்சை பிரகாஷ் நினைவு வளரும் படைப்பாளர் விருது - 2019 வழங்கி அங்கீகரித்த தமிழ்நாடு முற்போக்கு கலை இலக்கிய மேடைக்கும் மற்றும் தோழர் சுப்புராயுலு நினைவு விருது - 2019 வழங்கி அங்கீகரித்த மானுட விடுதலை பண்பாட்டுக் கழகத்திற்கும் நெஞ்சார்ந்த நன்றிகளும் அன்பும்!

• முத்துராசா குமார்

{பிடிமண் கவிதைகள்
வெளியீடு ` சால்ட் - தன்னறம்
புத்தகத்திற்கு ` தமிழ்வெளி 
+91 90 9400 5600}

Comments

Post a Comment