கவிதை • ஈத்து


{ஈத்து}

மாட்டுவாடையடிக்கும்
எனது கறவைக்கார உயிரை
அதிமார்கழியில் மாய்த்தேன்.
என் மார்க்கூட்டை 
பாத்திரக்கூரால்
வகுந்து பார்க்கின்றனர்.
உள்ளே உருள்கிறது
நெடுங்கால சிமிலிப்புகை.
நானில்லாமல் 
ஊரை உறிகின்றன உண்ணிகள்.
காற்றெங்கும் விளக்கெண்ணெய் வாடை.
கை கட்டைவிரல்கள் காய்ப்பேற
ஏறியிறங்கி விளையாடிய மடுக்காம்புகள்
அழுக்குத்துணிப் பொட்டணமாக
பெருக்கின்றன.
கண்கள் விரிய முக்கும் 
காரியின் நீர்க்குடத்தை
கிள்ளி உடைத்தது நகமொன்று.
சாவுக்காரணம் பாட
நான்தான் மண்டை நீட்டி
மறுபிறப்பாய் வந்துள்ளேன்.


{முத்துராசா குமார் ` நன்றி ` தமிழ்வெளி இதழ்}

Comments