கவிதைகள் • கழுமரங்கள்


{கழுமரங்கள்}


1)

நெடுவருடம் கழித்து
யாரோ சாட்டிய 
எண்ணெய்க்காப்புக்கு
குளிர்ந்து நிற்கையில்
சொறிந்துகொண்டு போகும்
பயண செம்மறிகளின் 
வெண்மயிர்களை அப்பிக்கொண்டு
மேலும் மூப்பாகிறது
சிதிலக் கழுமரம்.


2)

செவிகளை விறைக்கிறேன்.
கழுமரத்தினுள் பாயும்
இரத்தவோட்டத்தின் நுரைச்சத்தம்
துல்லியமாக கேட்டவுடன்
ஊமத்தம் பூவை 
நொடியில் 
குழாய் ஸ்பீக்கராக்கி
கழுக்கூரில் மாட்டுகிறேன்.


3)

வானிலிருந்து விழுந்து
தன்னைத்தானே 
கழுவேற்றிக்கொண்ட 
பறவையின் ரத்தம்
பீடத்தின் அடிக்கு 
மெதுவாக இறங்குகிறது.
ரத்தக்கயிற்றைப் பிடித்து
நுனிக்கேறுகின்றன எறும்புகள்.
வரிசைக் கடைசியில் தொத்திய
பத்துமுலை நாயை
மிதித்துத் தள்ளுகிறது 
எறும்புக்குட்டி.
மரத்தைச் சுற்றியழும்
பரதேச நாயிக்காக
முனை மட்டுந்தெரிய 
தன்னைத் தரைக்குள் இறக்கிக்கொண்டது
கழுமரம்.


4)

நான் சிறுவன்
நான் சிறுமி
நான் சிறுவமியென்று புலம்பியபடி
இடிமழையிரவுக்கு
மறுநாள் விடியலில்
காளான்களின் மிருதுவைப் பிடுங்க 
ஊர் குழந்தைகளைத் திரட்டி ஓடினேன்.
எனைக் கிறுக்குமுத்தலெனச் சொல்லி
மந்தைக் கழுமரத்தில்
சங்கிலியால் கட்டினர்.
சூரியனைப் பிடுங்கி
பந்தம்போல் காட்டி 
வேடிக்கைப் பார்ப்பவர்களை
விரட்டுகிறேன்.
கழுமரத்தில் 
தினமும் துளையிட வரும்
மரங்கொத்தியின்
அலகுச்சத்தங்களை எண்ணி
நட்சத்திரங்களிடம்
கணக்கை ஒப்படைக்கிறேன்.


5)

கழுவின் தலையான 
எலுமிச்சையைக் குறிவைத்து
தகர்த்தாடுகின்றனர்
கவட்டைக் குழந்தைகள்.


•••

{முத்துராசா குமார் - நன்றிகள் - நீலம் இதழ்}

கழுமரங்கள்





Comments