கவிஞர் வெய்யில் படைப்புலகம் ஒருநாள் கருத்தரங்க நிகழ்வு. 'குற்றத்தின் நறுமணம்' கவிதைத்தொகுப்பு குறித்து எனது பகிர்வு
கவிஞர் வெய்யில் படைப்புலகம்
ஒருநாள் கருத்தரங்கு
ஊளை (HOWL), வாசகம் (WORD), பாடல் (SONG) என்ற பகுப்புகளில் படைக்கப்பட்ட 'குற்றத்தின் நறுமணம்' கவிதைத் தொகுப்பை பல்வேறு பொழுதில் வாசித்தேன். இறுதியாக வாசிக்கையில் எனக்குள் எழுந்த உணர்வுகளை அப்படியே எழுத்தாக்கி வைத்துக்கொண்டேன்.
காரணம், கவிஞனையும், கவிதைகளையும் பற்றி யோசிக்கும்போது, பேசும்போது ஒவ்வொரு தருணத்திலும் ஒவ்வொரு எண்ணங்கள் தோன்றும், மறையும். அவை மண் ஊற்றில் பொங்கி பறக்கும் ஈசல்களின் இயக்கங்கள் போலிருக்கும். ஜனனயீரத்துடன் காற்றுக்கேறும் அந்தவுயிரிகளை ஒழுங்குபடுத்த முடியாது. அப்படித்தான் கவிதைகளும், கவிஞனும் என்று நினைக்கிறேன். சபையொழுங்கு, கட்டமைக்கப்பட்ட நேரம் என்பதால் எழுதி வந்து வாசிக்கிறேன்.
தொகுப்பை வாசித்து முடித்தவுடன் அட்டைப் படத்தில், குற்றத்தின் 'ன்' க்கு மேல் ஓடிவரக்கூடிய விலங்கின் விரிகண்களில் இந்தத் தொகுப்பின் மையச்சத்தம் கேட்டது. அது ஊளைக்கும், வாசகத்துக்கும், பாடலுக்கும் முதுகுத்தண்டாய் இருக்கும் ஒலி.
அந்த விலங்கின் கண்கள் வெய்யில் என்னும் கவிஞனின் கண்களே. வெய்யிலுடைய விழி விளிம்புகளில் இப்போதும் லேசாய் இழுவப்பட்டிருக்கும் கருமை, தாயின் பனிக்குடத்தினுள் அவன் சுருண்டிருக்கும் போது இயற்கையாய் அமைந்தது. பனிக்குட அலைகளுக்கும் அது அழியவில்லை. கன்னிமார்களின் குலவை வேண்டலின்படி மணிவைத்த, காணிக்க வேட்டைச் செருப்போடு கருவுக்குள்ளிருந்து பூமி குதித்தான்.
பூடத்திற்குள்ளிலிந்து சித்திரையில் வெளி வந்த சாமியின் குதிபோல அவனது பிறப்பதிர்வு உண்டானது.
அவனும் நிறைசூலியாக தொந்திவயிற்றோடு காட்சியளித்தான். அவனது நிலவியலுக்கும், அதன் ஆகாச திசைகளுக்கும் ஏற்ற சுழல் கழுத்தைக் கொண்டிருந்தான். வானத்தைத் தொடக்கூடிய மயான பனைமரம் அவனது பொடணியை பிளந்து வளர்ந்திருந்தது.
போதிமரங்களை, பூக்களை ஈனும் பறவைகளையும், மீன்கொத்திகளையும், சுடலைமாடன் பூடத்து உச்சிக்கலசத்தில் மழைநீர் சேமிக்கும் குருவிகளையும், மண்புழுக்களையும் வயிற்றுக்குள் வளர்த்து வருகிறான். செத்து கொண்டிருக்கும் தாமிரபரணிக்கு இவைகளை இரை தேடச்சொல்லி மனம் நொந்து வழியனுப்புகிறான்.
தாமரைத் தண்டுகளை மாலைகளாக அணிந்திருக்கும் அவனை,
கால்களில்லாத குதிரையும், ரோஜாக்களை ஊட்டி வளர்த்த பன்றியும் அத்தனை விருப்பமாய் சுமந்து செல்கின்றன.
பொம்மைகளை வெரித்தபடி அம்மாவைத் தொலைத்தவன் திக்கற்று நின்றான். அப்போது அவனது நிலத்தையும், மலையையும் பல்லுயிரிகளையும் பறித்துகொண்டு அவனை புலம்பெயர வைத்தனர். கிழடுதட்டிய கவிதையென்னும் மொழித்திண்டில் ஏறினான். பனைமர பொந்துக்குள் அவன் சேமித்து வைத்திருந்த கசப்புமிகு ஒப்பாரிகளை எடுத்து எல்லோருக்கும் கேட்கும்படி அழுதான். விதவித சித்ரவதைகளுக்குப் பின்னால் அவனது ஊரையும், மொழியையும் ஞாபகப்படுத்தி உச்சபட்ச வதைகளுக்கு ஆட்படுத்தப்பட்டான்.
திருடப்பட்ட விதைநெல்லுக்குப் பதிலாக தரப்பட்ட மதுவை தளும்ப அருந்தினான். கூடவே, ரத்தத்தையும் குடித்துப் பழகினான். வெண்ணை மணக்கும் கத்திகளோடும், வயிறு நிரம்பிய துப்பாக்கிகளோடும், தனது மூதாதையரின் திடமான முதுகெலும்பில் செய்யப்பட்ட கூரிய அம்புகளோடும் நகரெங்கும் வெறியில் அலைந்தான். குற்றவுணர்ச்சியற்று வாழ்ந்திட அறத்தின் கழுத்தை அறுத்தால்தான் வழியென ஒருவாறு தன்னைத் தேற்றிக்கொண்டான்.
துன்பத்தில்,தோல்வியில், கோபத்தில், பசிக்கனலில், நீர்முள்ளாய் இறங்கும் பேய்க்காமத்தில், விரக்தியில் அகத்தின் கொப்பளிப்புகளோடு அத்தனை மல்லுக்கட்டினான். இன்னொரு பக்கம் புறத்தோடும்.
துரோகமிழைத்தவர்கள், எல்லைகள் வகுப்பவர்கள், அதிகாரத்தில் சிரிப்பவர்கள், ஏமாற்றியவர்கள், அழ வைத்தவர்களின் அடிவயிறு, நெற்றிப்பொட்டு, நெஞ்சுக்குழி, ராஜமாமிசம் என்று குற்றங்களை நிகழ்த்து கலைகளாக்கி, மொழிச்சலங்கைகள் குலுங்க அத்தனை அழகான அடவுகளிட்டு அவர்களின் ரத்தத்தை தனது வறண்ட நிலத்தில் சிந்த வைத்தான்.
பழி தீர்க்க வேண்டிய ஒவ்வொரு நபரும் நினைவுக்கு வரவர, ஏராளமான குற்றத்தின் நறுமணத்தில் கடவுளை அடைந்தான். எருமைத் தோல் வாத்தியத்திலும், பறையிலும் ஜீவன் நிரம்பியத் தகப்பன் பாடலை பாடியபடி சூரியனுக்கு அஞ்சாத பனைமரமாக நாடோடி உடலில் நடந்துகொண்டே இருக்கிறான்.
வழியில் கொல்ல வந்த ராட்சத புல்டோசர்களை ஆயுதமொன்றால் பயமுறுத்தி அடித்து விரட்டுகிறான். யுத்தகளத்தில் பத்திரப்படுத்திய ஆயுதத்துக்கு ஈடானது அது. ஈரமும், உப்பும் கலந்து பிசுபிசுத்திருக்கும் கோமாளியின் சிவப்பூதா முகமூடியே அது. அனைத்தையுமறிந்து, வெகுதூர காட்டில் தாவரங்களின் வேர்களோடு மகிழ்ந்திருந்தது அவனுடைய தகப்பனது எலும்புக்கூடு.
ஊளையிட்டும், விரல்கள் கரைய வாசகம் எழுதியும் சோர்ந்து மயங்கியவனின் கனவுலகில், நீண்ட காலம் கழித்து அம்மா வந்தாள். சுரக்காத கிணற்றின் வாளிகளை மடியில் கிடத்தி தாலாட்டிக் கொண்டிருந்தாள். அரை மயக்கத்தில் விழித்தான். தகிக்கும் கரம்பைகள் சுருண்ட குளத்தில், கடைசி மீனெழுதிய மடலை தேம்பியழுது நாக்குழற வாசித்து, மீளா மயக்கத்துக்குள் போனான்.
மஞ்சள் முலை கொண்ட இசக்கி தனது மாரில் சீம்பால் பீய்ச்சி, அவனுக்குப் புகட்டி தோளில் தூக்கிச் சென்றாள். எருக்கம்பூக்களின் ஐந்தறைக்குள் இருக்கும் ஒடைமர மாயனோடு காயங்களாற்றித் தங்க வைத்தாள்.
மிருகத்திடம் தப்பித்த மான் அவனது மண்டைக்குள் நிற்காமல் ஓடியது. சிறகு, தலை, வால் என பிய்க்கப்பட்டு சிறுமியின் கைகளில், துடிதுடித்துச் சாகும் தட்டானாய் சாக நினைத்தான்.
சட்டென, ஹங்கேரிய இசைக்கலைஞர் 'ரெசோ செரஸின்' பியோனோக் கட்டைகள் போன்ற பூச்சியரித்த பற்களில் குழந்தைமையாக சிரித்து யோசித்தான். சாவதற்கு பதிலாக பின்னாலிருக்கும் ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்குள் நுழைந்துவிட முடிவெடுத்தான். காந்தள் , நாக மலர்கள் சூடி குறிஞ்சியாழில் சாதாரிப்பண் இசைத்து, தொண்டகப்பறைக் கூத்தாடி, மலைக்குறவனாய் உருமாறி சங்கத்துக்குள் போய்விட்டான்.
நிலவு, காற்று நம்முடையதல்ல என்றும் தோல்வியுற்ற நமக்காக, சூரியன் உதிப்பதில்லை என்றும் அவன் சொல்லிச் சென்றுவிட்டான். எங்கோ ஒரு நிலத்தில் பனைவிதை சுயம்புவாக தளிர்க்கையில், கிழக்கு முகமாக நுரைத்து வழியும் தளுகைப் பொங்கலாக, தோல்வியுற்றவர்கள் ஜெயிக்கிறார்கள். அப்போதெல்லாம் சூரியனும், நிலவும், காற்றும் நமது தலைக்கு மேலே வந்து நிற்பதை உணரலாம்.
விரித்துப் பிடிக்கப்பட்ட றெக்கைகளுக்கு நடுவே, மூச்சு ஏறியிறங்கும் நெய்குருவியின் வரிச்செலும்புக்குள் துடிப்புகள் கேட்கின்றன. குற்றத்தின் நறுமணத்திலும்.
• முத்துராசா குமார்
ஜூன் 19, 2022
மிகச்சிறப்பாக நடந்து முடிந்த கருத்தரங்கில், கலந்து கொண்டதிலும் கருத்துகளைப் பகிர்ந்ததிலும்
மிக்க மகிழ்ச்சி. ஆகுதி, எழுத்தாளர் அகரமுதல்வன், கவிஞர் வெய்யில் ஆகியோருக்கு மனமார்ந்த நன்றிகள்!
நிழற்படங்கள் • நன்றிகள் ஸ்ருதி டிவி
காணொளியைக் காண
Comments
Post a Comment