'ஈத்து' சிறுகதைகளை ஓவியங்களாக மாற்றிய பள்ளி மாணவர்கள்


{ ஈத்து } சிறுகதைத் தொகுப்பு

ஓவியர் கணேஷ்பாரி அவர்கள் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள தனியார் பள்ளியொன்றில் ஓவிய ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். தீவிர வாசிப்பாளர். 

எனது 'பிடிமண்' 'நீர்ச்சுழி' கவிதைத் தொகுப்புகளைப் படித்துவிட்டு அவருடைய வாசிப்பனுபவங்களைப் பகிர்ந்து எழுதியிருந்தார். 'ஈத்து' சிறுகதைத் தொகுப்பு குறித்தும் விரிவாக எழுதியிருந்தார். கலை, இலக்கியம் குறித்து தனது மாணவர்களிடம் நடத்தும் தொடர்ச்சியான உரையாடலில் 'ஈத்து' சிறுகதைத் தொகுப்பை அறிமுகப்படுத்தியுள்ளார். தொகுப்பில் வரக்கூடிய 9 கதைகளையும் வாசித்து மாணவர்களிடம் கதைசொல்லலாக ஒரு கூடுகையை நடத்தியுள்ளார்.

ஒவ்வொரு கதைகளின் போக்கை ஆத்மார்த்தமாக உள்வாங்கிய மாணவர்கள், கதைகளில் வரக்கூடிய மனிதர்களுக்கு அக்கறை காட்டியிருக்கிறார்கள், கூடவே பயணித்திருக்கிறார்கள், கேள்விகள் கேட்டிருக்கிறார்கள், உணர்ச்சிவசப்பட்டு அழுதிருக்கிறார்கள்...

தங்களுக்குள் 'ஈத்து' உண்டாக்கிய தாக்கங்களை விதவித வண்ணங்களால் ஓவியங்களாக்கி மாணவர்கள் வெளிக்காட்டி உள்ளனர். ஒவ்வொரு ஓவியத்தையும் உணர்வுப்பூர்வமாக அலங்கரித்து தமிழ், ஆங்கிலத்தில் 'ஈத்து'க்கான 'காமிக்ஸ்'களை அழகாக உருவாக்கியிருக்கின்றனர்.
வெகுளியோடும், மழலையோடும் உயிர்த்திருக்கும் இந்தப் படங்களின் சிறிசிறு நுட்பங்கள் மனதுக்கு மிகுந்த நெகிழ்ச்சியாகவும், மகிழ்ச்சியாகவும், அடுத்தடுத்த பயணத்துக்கான பெரும் உத்வேகமாகவும் இருக்கிறது.

ஓவியர், தோழர் கணேஷ்பாரி அவர்களுக்கும், ஒவ்வொரு மாணவப்பிள்ளைக்கும் எனது நெஞ்சார்ந்ந நன்றிகளையும், அன்புகளையும் தெரிவிக்கிறேன்!

- முத்துராசா குமார்

Comments

Post a Comment