கவிதைகள் • கழுவில் கூடு முடையும் தேனீக்கள்
{கழுவில் கூடு முடையும் தேனீக்கள்}
1)
சிலுவை மாதிரி
விரித்தத் தோள்பட்டைகளுடன்
வெளிக்கிக்காட்டில் நிற்கிறது
எட்டடிக் கழுமரம்.
அடியில் மலமுக்கும்
வாடிக்கை புகைக்கிழவன்
தனது மூதாதை
உச்சிக்குள் இறங்கிய சித்திரத்தை யோசித்து யோசித்து
பாதிச்சுருட்டின் கெட்டிக்கங்கை
மரவுடல் வலிக்க
அணைக்கிறான்.
••
2)
பண்ணருவாளின்
பித்தவெடிப்பு ரம்பத்தடங்களை
கல்லாலான கழுமரத்தில்
தேய்த்து விளையாடுகிறேன்.
வெளிச்சமிறங்காத
மொட்டைக்கிணற்று பாலாமை
கல்லறுபடும் கூச்ச சத்தத்துக்கு
நீந்தும் நகங்களை
உள்ளிழுத்துக் கொள்கிறது.
••
3)
நுனியுடைந்து
கம்மா எல்லையில்
கோணலாக வாழும் கழுமரம்
திருவிழாயிரவுகளில்
இன்னும் தனிமையாகிறது.
தூரின் மண்துவாரங்களில்
குள்ளநரிகள் வேட்டையாடும்
நானே அதற்குத் துணை.
கோவப்பழ கொடியெடுத்து
மரத்தில் வரிவரியாகச் சுற்றினேன்
சிவப்பும் பச்சையுமாக
சீரியல்செட் சரமாய் ஒளிர்ந்தது.
வண்ணக் காத்தாடியை
கழுநுனியாக்கினேன்
காத்தற்ற வெளியிலும்
சிரித்தமுகமாய் சுழன்றது.
••
4)
மொய்க்கும் தேனீக்கள்
கொலைச்சவமான கழுமரத்துக்கு கருந்தண்டட்டிகளாக
தொங்குகின்றன.
•••
{முத்துராசா குமார் • நன்றிகள் • அகநாழிகை இதழ்}
Comments
Post a Comment