சிறுகதை • டமுக்கெலும்பு


டமுக்கெலும்பு

 

‘...வரப்புகள் மக்கிய பெருந்தரிசின் நடுவில், பங்குனி மதியத்தின்  அக்னியை உறிஞ்சியபடி நாதியற்று கிடக்கிறது டமுக்கு வாத்தியம். டமுக்கில் சுத்தப்பட்ட சிகப்பு கோடிப்பட்டின் மினுப்பு கானல்நீரில் வளைந்து வளைந்து தென்படுகிறது. டமுக்கின் தேய்ந்த தோல் வார்கள் பக்கத்தில் கிடக்கின்றன. மொட்டைக் கிணத்தோரம் பச்சையமற்று மூளியாக நிற்கிறது வேம்பு. உச்சிமர வாப்பில் நிற்கும் கந்தனின் நொட்டாங்கையில் படர்ந்த தேக்கயிலை காற்றுக்கு சடசடக்கிறது. உயிரைக் குடிக்கும் அரளியுருண்டைகள் இலையைப் பறக்க விடாமல் அதன் மேல் மணத்துக் கிடக்கின்றன.

 

கீழே நின்று கெஞ்சிக் கதறுகிறாள் கந்தனின் மகள்வழி பேத்தியாள். கந்தனை விழ வைக்க தனது சத்துக்கு ஏற்றபடி மரத்தை உலுப்பி கதறுகிறாள். மரம் கொஞ்சங்கூட அசையவில்லை. விரிசல்தரிசின் கரம்பைக்கட்டிகளைப் பெயர்த்து அவரின் நொட்டாங்கைக்கு குறி வைத்து எறிகிறாள். அது வேறு எங்கோ போய் விழுந்துடைந்து மண்ணாகிறது. தொண்டைக்குள் அழுதபடி தூரைச் சுற்றி சுற்றி வந்து மரப்பட்டைகளைப் பிராண்டுகிறது மூச்சிறைப்பு வியாதி கொண்ட அவர்களின் வளர்ப்பு நாய். கீழே இறங்காமல் பேத்தியைப் பார்த்து அழுகிறார். மிகவும் ஒடுங்கிய அவரது சங்குக்குழியில் கண்ணீர் தேங்குகிறது. வியர்வையில் அவரின் உள்ளங்கால்கள் பிடிமானத்திலிருந்து நழுவுவதை உணர்ந்துகொண்டு பாதங்களை மேலும் இறுக்கிக் கொள்கிறார். உதடுகளின் விளிம்புக்குள் கண்ணீர் புகுந்து கரித்தவுடன், யெறங்கு தாத்தா...’ என ஓங்கி சத்தமிடுகிறாள். கத்தியதில் அவளை அறியாமலேயே இரண்டு மூன்று மூத்திரச்சொட்டுகள் பாவாடையில் கசிகின்றன.

 

முரட்டுச் சால்வையுடன் தூர கிடங்கில் வருத்தாடுகளுக்கு தண்ணீர் காட்டிக்கொண்டிருந்த முதுகீதாரி, சத்தம் கேட்டு அவளின் திசைக்கு ஓடி வருகிறார். வந்தவர் எதுவும் பேசாமல் கந்தனின் ஈரக்கண்களையே பார்க்கிறார். கீதாரியின் அருகில் வந்து அவரை முகர்ந்துவிட்டு மறுபடியும் மரத்தூருக்கு ஓடுகிறது நாய்.  திரும்ப அதே ஓட்டத்தில் கிடைக்குப் போகிறார் கீதாரி. சீக்குப் புகுந்த ஆடுகளின் நாக்குகளை அத்து தனது சால்வையில் கட்டிவந்து அவளின் முன்னால் கொட்டுகிறார். நாக்குகள் தரையில் துள்ளுகின்றன. என்ன செய்வதென்று தெரியாமல் அங்குமிங்கும் குதிக்கும் நாய், நாக்குகளிடம் நெருங்கவில்லை. கந்தனும், பேத்தியும் நாவுகளின் துள்ளல் வேகத்தைக் கவனிக்கின்றனர்.

 

எதையும் யோசிக்காமல் ஒரு நாக்கை பட்டென பிடிக்கிறாள் பேத்தி. நாக்குகள் அவளுக்குக் கட்டுப்படுகின்றன. டமுக்கை எடுத்து தனது கழுத்தில் மாட்டுகிறாள். ஒவ்வொரு நாக்காலும் விடாமல் டமுக்கடிக்கத் தொடங்குகிறாள். தனது தாத்தனின் கட்டைக்குரலில் ஊரைத் திட்டி ஓங்காரியாய் சேதியொன்று சொல்கிறாள். அதே சேதியை சொல்கிறாள். அதையே மறுபடியும் சொல்கிறாள். ஓங்கரிப்பு உச்சமாகிறது.  உருண்டைகளைத் தூக்கி வீசிவிட்டு கந்தன் கீழே குதிக்கிறார். பட்டுத்துணியை அவிழ்த்து பேத்தியாள் மேல் சாட்டி தோள்பட்டையில்  ஏற்றிக்கொள்கிறார். கந்தனின் கூடு நெஞ்சை எக்கி நக்குகிறது நாய். திரும்பிப் பார்க்கையில் பக்கத்தில் கீதாரியுமில்லை. தூரத்தில் ஆடுகளுமில்லை...’

 

ஊர் கடைசியில் வைகைக்கரை ஓரத்தில் ஆஸ்பிடால் சீட்டு வீட்டுக்குள் உறங்கிக்கொண்டிருக்கும் கந்தனுக்கு இப்படியாக சொப்பனம் வந்தது. தலை உயர்த்திக் கடிகாரத்தைப் பார்க்கையில் மணி மூணுக்குப் பக்கத்தில் இருந்தது. தளும்ப ஓடும் ஆற்றிலிருந்து கூடுதலாக மேலெழும் ஐப்பசியின் குளிர்காற்று கந்தனைப் படுக்கையிலிருந்து எழுந்திருக்க விடவில்லை. பக்கத்தில் பேத்தியாள் உறங்கிக் கொண்டிருந்தாள். அவரின் காலுக்கு கீழே நாய் ஒடுங்கியிருந்தது. ஏறவாரத்தில் தொங்கும் டமுக்கையே ரொம்ப நேரமமாகப் பார்த்தார். சிச்சிறு மயிர்கள் முளைத்திருக்கும் சூரியனாகவும், நிலவாகவும் டமுக்குத் தெரிந்தது. அவருக்கு, அது எப்போதும் அப்படித்தான் காட்சியளிக்கும். மாட்டுத்தோலில் உருவேத்தப்பட்ட சூரியனிலும், நிலாவிலும் வார்கள் மாத்தி மாத்தி அடித்த கறுந்தழும்பின் வலுவலுப்பைத் தொடாமலேயே உணர்ந்தார். சிறிதுநேரம் கழித்து எதிர்த்த வீட்டின் திண்ணையை ஏறிட்டார். முனைகளில் முடிச்சிட்ட ரேஷன் சேலையை தலைக்கும், காலுக்கும் இழுத்துப் போர்த்தியபடி கனகனப்பாகத் தூங்கினான் இளந்தாரி திருப்பதி. சொப்பனத்தை ஓட்டிப் பார்த்தார், பிசிறில்லாமல் நினைவுக்கு வந்தது. சொப்பனத்திலும் நாய்க்கு மூச்சிறைப்பு நோய் இருந்ததை நினைத்து ஆச்சரியப்பட்டார். தன்னை நினைத்து அனாதை போல பேத்தி அழுதது அவருக்கு கண்ணீரை வரவழைத்தது. சீலைக்காரித் தெய்வத்தை  நினைத்துக்கொண்டார். நீரின் சலசலப்புகளை விழித்தபடியே கேட்டவர் கொஞ்சநேரத்தில் தானாய் கண்ணசந்தார்.

 

ஊர் உருவானதிலிருந்து கந்தனின் தலைமுறை டமுக்கடித்து வருகின்றனர். வைகை வெள்ளம், கொள்ளை நோய்கள், கண்மாய் உடைந்தது, திருவிழா, வரி, ஏலம், தேர்தல், மின்சாரம், தண்ணீர் தொட்டி, ஆரம்பப் பள்ளி, பஞ்சாயத்துபோர்டு கட்டிடம், பஞ்சாயத்து ரேடியோ, டிவி என ஊருக்குள் முதன்முதலாக வந்தவையிலிருந்து கொரோனா வரை கந்தன் தான் நல்லது, கெட்டதுகளை அறிவிப்புகளாக சொல்லி வருகிறார். முச்சந்திகளில் நின்று குரல்வளை நரம்புகள் புடைக்க தனது கட்டைக்குரலில் மும்முறை செய்திகள் சொல்லியபிறகு, ‘சாமியோவ்வ்வ்...’ என கடைசியாக டமடமவென அடிக்கப்படும் டமுக்கொலிகளின் எண்ணிக்கை கணக்கில் அடங்காதவை. கந்தனின் மகனும், மருமகளும் தற்சமயம் மதுரையில் தங்கி கட்டிட வேலைகள் செய்து வருகின்றனர். மதுரையிலிருந்து ஊருக்கு வர ஒன்றரைமணி நேரமாவதால் தோது கிடைக்கையில் வீட்டுக்கு வந்து போவார்கள். பக்கத்து ஊரான சோழவந்தானில் பேத்தியாள் ஒன்பதாவது படிக்கிறாள். ஊருக்குள் சிறிய சலூன் கடை வைத்திருக்கிறான் திருப்பதி. கந்தனுக்கு சொந்தம்.

 

கந்தன் ஐந்தரை மணி போல எழுந்தார். பேத்தியாள் புரண்டு தூங்கினாள். புறங்கைகளைப் பின்னால் கட்டிக்கொண்டு ஆத்துப்பக்கம் நடந்தார். நாயும் பின்னாடியே போனது. பேத்தி வாங்கிக்கொடுத்த புதுசெருப்பைக் கழட்டிவிட்டு, பழந்தின்னி வௌவால்கள் தொங்கும் மூத்த இலுப்பைமர வேர்களில் காலை வைத்து செம்மண் கரைக்குக் கீழே மெதுவாக இறங்கினார். மீன்களுக்காக அவர் போட்டிருந்த மண்முட்டி பானைப்பொறியைக் குனிந்து பார்த்தார். நிறைய கொறவைகளும், நண்டுகளும் முட்டிக்குள் துடித்தன. கையிலிருந்த பாலித்தீன் பைக்குள் மீன்களை மட்டும் கவனமாக அள்ளிப்போட்டார். முட்டிக்குள்ளிருந்து ஏறுவதும், விழுவதுமாக இருந்த நண்டுகளை காதுகள் விடைக்கப்  பார்த்தது நாய்.

 

வேகமாக வீட்டுக்கு வந்தவர் சாம்பலுக்குள் கொறவைகளை அள்ளிப் போட்டார். பாத்திரங்களைக் கழுவி முடித்து இரும்படுப்பை எடுத்தார். குரங்கு மட்டைகளுக்கு நடுவில் பனிக்கு நனையாமல் வைத்திருந்த பாளையையெடுத்து நெருப்பை மூட்டி, சோத்துமாரை அடுப்புக்குள் நுழைத்தார். இஞ்சித் தட்டி வரத்தண்ணீர் போட்டு படித்துக்கொண்டிருக்கும் பேத்திக்குக் கொடுத்துவிட்டு, கொஞ்சம் தானும் வாயில் ஊற்றிக்கொண்டு மீதியை மூடி வைத்தார். அதே நெருப்பில் உலையிட்டு சோறாக்கினார். கவிழ்த்திய சோத்துப்பானையிலிருந்து ஒழுகும் வடிநீரை உற்றுநோக்கிய படி காபியைக் குடித்தாள். சாம்பலுக்குள் கிடந்த கொறவைகள் அதுவரை உயிருடனேயே இருந்தன. வாசலில் குத்தவைத்து கல்லின் சொரசொரப்பில் கொறவைகளை உரசி  செவுள்களையும், அடிவயிற்றையும் கிழித்து குடல்குந்தாணிகளை எடுக்க ஆரம்பித்தார்.

 

‘தாத்தோவ்... பிரசிடெண்ட்டு ஏதும் பேசினாரா...’ சத்தமாய் கேட்டாள்  பேத்தியாள்.

 

‘எத பத்தித்தா...’

 

‘அதுக்குள்ள மறந்துட்டயா. டமுக்கடிக்கக் கூடாதுன்னு தலையாரி வந்து சொன்னாருல தாத்தா. கவர்மெண்ட்டு ஆர்டர்’

 

‘ஓ... அதாக்கும்...’

 

‘என்ன இழுக்குற. அவுக சொன்னாங்க, இவுக சொன்னாங்கன்னு இனிமேலு டமுக்கத் தூக்கிட்டு ஓடாத. புரியுதா...’

 

‘ம்க்கும்... நல்ல ஆடரு போட்டாங்க போ, காலம் போன கடைசியில..’ சலிப்புடன் மீன்களின் பித்தப்பை உடையாமல் கவனமாக எடுத்து ஓரமாக குவித்தார். உருவி எறிந்த குடல் குந்தாணிகளை நாய் ருசித்து சாப்பிட்டது.

 

‘பிரசிடெண்ட்டு ஒன்னையக் கூப்பிட்டு, அதப்பத்தி எதுவுமே சொல்லலையா..’ பள்ளிக்குக் கிளம்ப ஜடை பின்னிக்கொண்டே கேட்டாள்.

 

‘ஆமா அதச்சொல்லத்தான் அவரு துடிச்சிட்டு இருப்பாரு. நீ வேற...’ சோற்றுப்பானையை நிமிர்த்திவிட்டு குழம்பு வைக்கப் போகையில், அதிக சத்தத்துடன் புகைக் கக்கும் எக்ஸல் பைக்கில் வேகமாக வந்தான் திருப்பதி. என்ன என்பது போல கந்தன் அவனைப் பார்த்தார்.

 

‘தாத்தா... பெரசண்டு அம்மா தவறிப் போச்சாம். கடையில இருந்தேன் போன் பண்ணாரு...’

 

‘எப்பயாம்டா’

 

‘இப்பத்தானாம்’

 

‘கடைய சாத்திட்டேன். கத்தி, சங்குமணிய கையோட எடுத்து வந்துட்டேன்’ தயார் நிலையில் பேசினான் திருப்பதி.

 

‘ஹும்...போயி சேந்துட்டாளா’

 

‘கெழவி ஒனக்கு எளையதோ’

 

‘என்ன விட மூப்புடா அந்தக் கெழவி’

 

‘மொதல அந்த வண்டிய ஆப் பண்ணுடா ரைசுமில்லு கணக்கா கத்துது’

 

திருப்பதி பேசிக்கொண்டே வண்டியை ஆப் செய்தான். ‘கெழவிக்கு முடிலாம் சடப்பத்தி பேன் ஒழுக ஆரம்பிச்சிருச்சு, வந்து மண்டைய வழிச்சுட்டுபோன்னு ரெண்டு மாத்தைக்கு முன்னாடி பெரசண்டு கூப்ட்டாப்ல. அப்போவே அது ரொம்ப தளந்துருச்சு. படுக்கையிலேயே கெடந்து பின்னாடிலாம் புண்ணு. எல்லாத்தையும் தொடச்சு மருந்து போட்டு வந்தேன். நல்லா வாழ்ந்த கெழவிதான்’

 

‘என்னது நல்லா வாழ்ந்தாளா... அப்போ நான் சின்னப்புள்ள. திண்ணையில ஒக்காந்துக்கிட்டு நம்மளத் தெருக்குள்ள விடவே மாட்டா, சுத்திப்போகச் சொல்லுவா. அவிங்க வீட்டு மரத்துல புள்ளைங்க ஆசைக்குக் கொய்யாக்காப் புடுங்குனாக் கூட கல்லவிட்டு எறிவா. வரப்புல கூட ஆடு மாட மேய்க்க விட மாட்டா. வங்காச்சியா பாக்குற வேலைக்கு கை வெளங்கிக் காசுத் தர மாட்டாய்ங்க. அறுத்த கையிக்கு அவிங்கட்ட சுண்ணாம்பு வாங்க முடியாதுடா. இப்புடி சொல்லிக்கிட்டே போலாம். லேய்... ஊருக்கும் கெழவிக்கும் ஒரே சாடைதான்’

 

திருப்பதி போனை நோண்டியபடி ‘ம்’ கொட்டினான்.

 

‘அண்ணே அந்தக் கவர்மெண்ட்டு ஆர்டர் பத்தி தாத்தாக்கிட்ட சொன்னையா இல்லையா நியீ’ பேத்தி திருப்பதியிடம் கேட்டாள்.

 

‘டமுக்கடிக்கக் கூடாது. அப்டி யார்னாலும் அடிக்கச் சொன்னா அவுங்க மேல புகார் தரலாம்னு கலெக்டரு தாசில்தாருக்கு சொல்லி, தாசில்தாரு நாட்டாமைக்குச் சொல்லி, நாட்டாமைத் தலையாரிக்கு சொல்லியனுப்பி, தலையாரி நம்மக்கிட்ட வந்து சொன்னாருன்னு இவருக்கிட்ட நூறு தடவ சொல்லிட்டேன். அசால்ட்டா நெனைக்கிறாரு’ என்று திருப்பதி அவரைப் பார்த்து அழுத்திச் சொன்னான்.  

 

‘இவனொருத்தன் இப்ப நடக்குறதப் பேசுடா. அப்ராணி சப்ராணி வீட்டு சாவுக்கே ஊருக்குள்ள தாட்டியம் பண்ணி நம்மள ஆட்டிப்படப்பாய்ங்க. இன்னிக்கு என்ன செய்ய காத்துருக்காய்ங்களோ. அடுத்தமாசம் அய்யப்பன், பழனிக்குன்னு மாலையப் போட்டுருவாய்ங்க. கெழவி அப்போ செத்துருந்தா கூட கூட்டமாச்சும் கொஞ்சம் கொறையும்’ விரக்தியாக சொன்னார். பேத்தியாள் அனைத்தையும் கேட்டுக்கொண்டே சடம்பு சுத்தப்பட்ட பெரிய வாட்டர் பாட்டிலுக்குள் குடிதண்ணீரை சிந்தாமல் ஊத்தினாள்.

 

‘சரி தாத்தா நீ போ. நான் கொழம்பக் கூட்டி எறக்கி வச்சுட்டுப் போறேன்’ பரபரத்தாள்.

 

‘திருப்பதி செத்த ஒக்காருடா’ என்று சொல்லிவிட்டு சுடுசோறைத் தட்டில் போட்டு ஆறவைத்தார். நன்றாக தீயெரித்து மீன்களை உடையவிடாமல் கொதிக்கவிட்டார். ‘ஒழுங்கா சாப்ட்டு போனும் சரியா. சோத்துப்பானயச் சுத்தி எறும்புச் சாபீஸ் கிழிச்சுரு.  கொழம்புத்தட்டு மேல கல்லவச்சு பஞ்சாரத்தப் போட்டு மூடிடுத்தா. பூனப்பதவைகத் தின்னுட்டுப் போயிடும்’ சொல்லிக்கொண்டே அரிவாள், கடப்பாரை, மம்பட்டி, கருங்காலி கம்பு, சட்டி, பிளாஸ்டிக் குடங்களை அவசரமாக எடுத்தார். அனைத்தையும் சைக்கிளில் அவைகளுக்குண்டான இடங்களில் கச்சிதமாகப் பொருத்தினார்.

 

‘நீயும் ஒருவா சாப்பிட்டு போ தாத்தா’ ஆசையாக கேட்டாள்.

 

‘ஆமா கவுச்சியத் தின்னுட்டு கேதத்துக்குப் போவாங்களாக்கும். செம்புல நீராகாரம் மட்டுங் கொடு’

 

குடிக்கும்போதே பிரசிடண்ட்டு நம்பரிலிருந்து போன் வந்தது. அவரிடம்  பேசியபடி கந்தனிடம் சைகை காட்டிவிட்டு பைக்கில் கிளம்பினான் திருப்பதி.

 

சிறிதுநேரம் டமுக்கன் அப்படியே நின்று கொண்டிருந்தார்.

 

‘என்ன தாத்தா என்ன யோசனையில நிக்கிற’

 

‘ஒன்னுமில்ல’

 

‘சும்மா சொல்லு தாத்தா’

 

‘ஒன்னுமில்லைன்னு சொல்லுறேன்ல’

 

ஏறவாரத்தில் தொங்கும் டமுக்கையே இருவரும் பார்த்தனர்.

 

‘ஊருக்குள்ள பெரிய கேதம் டமுக்கில்லாம எப்படி போறது’ தயங்கிக்  கேட்டார். டமுக்கை எடுப்பதா வேண்டாமா என்பதில் அவருக்குப் பெரிய மனக்குழப்பம் உண்டானது.

 

‘யாரும் ஒன்ன இப்ப டமுக்கடிக்க சொன்னாங்களா’ காட்டமாய் கேட்டாள்.

 

‘எவ்வீட்ல கேதம், எல்லா முக்குலயும் போயி டமுக்கடின்னு பெரசண்டே வந்து சொல்லுவாரா. பொடிப்புள்ள ஒனக்கு ஒன்னுந் தெரியாது போ’ என்று ஒரு முடிவெடுத்தவாறு டமுக்கிடம் போனார்.

 

‘தாத்தா காலையிலேயே எங்கிட்ட வை வாங்காத. பேசாம போ. அப்பறம் நான் சோறு திங்காமயே போயிடுவேன்’ என்று கடுப்பானாள்.

 

‘இருந்தாலு இம்புட்டு மொன ஆகாது ஒனக்கு’ அதட்டிவிட்டு டமுக்கிடமிருந்து பின்வாங்கினார்.

 

‘சட்டம் போட்டவுடனே எல்லாம் நடந்துரும் பாரு. பயவுள்ள புரியாம பேசிட்டு கெடக்கும்’  வாய்க்குள் முணகியபடி குடித்தும், குடிக்காமலும் செம்பை கீழே வைத்துவிட்டு சைக்கிளை எடுத்தார். பேத்தியாள் கொடுத்த சடம்பு வாட்டர் பாட்டிலை வாங்கி ஹேண்டில்பாரில் தொங்கவிட்டார். வாலை ஆட்டியபடி நாக்கைத் துழாவி கேரியரில் ஏறி ஜம்மென்று அமர்ந்தது நாய். தனது இத்தனை வருட வாழ்நாளில் முதன்முதலாக டமுக்கை சுமக்காமல் போகிறார் கந்தன். அந்த உணர்வு ஒருவித சுதந்திரத்தையும், கலக்கத்தையும் கந்தனுக்குக் கொடுத்தது. ரெண்டு கிலோமீட்டர் தூரத்தில், இருபுறமும் நரகல்கள் குவிந்திருக்கும் செம்மண் பாதை நோக்கி வேகமாக பெடலை அழுத்தினார். அந்தப் பாதையின் கடைசியில்தான் ஊர் சுடுகாடு இருக்கிறது. கருங்கல் குத்துக்கால்களுக்கு மேலிருக்கும் புகை படிந்த தகரக்கூரை லேசான காற்றுக்கே  விழுந்துவிடுவது மாதிரி இருந்தது. சாமான்களை கூரைக்குக் கீழே வைத்துவிட்டு ஊரை நோக்கி சைக்கிளை ஓட்டினார்.

 

அகிலாண்டேஸ்வரி கோயில் முச்சந்தி தாண்டி பிரசிடெண்ட்டின் தெருவுக்குள் நுழைந்தார். ஆட்கள் சிலர் ஆங்காங்கே நின்றிருந்தனர். மூன்று வருடங்களுக்கு முன்பு கஞ்சா பித்தில் பள்ளிச் சீருடையோடு  தூக்கு மாட்டி இறந்த, மாணிக்கம் மகனின் கேதத்துக்கு வந்தது. இந்த மூன்று வருட இடைவெளியில் தெருவே மிகவும் குறுகளாக மாறியிருந்தது. கழிப்பறைகள், பூ பந்தல்கள், பைக்குக்கான தாழ்வாரங்கள் எல்லாம் தெருவை ஆக்ரமித்திருந்தன. சற்று பெரிய வண்டிகள் கூட தெருக்குள் வர முடியாது. பிரசிடெண்ட்டின் பூர்வீக வீட்டு வாசலில் கொட்டகை போடும் வேலைகள் துரிதமாக நடந்தன. பழையதும் சிறியதுமாக இருக்கும் அந்த வீட்டில் கிழவி இருப்பதை அறிந்துகொண்டார். வைத்தியநாதபுரம் ட்ரம்செட்டு குழுவினர் ஆரஞ்சு நிற ஜெர்சி பனியன்களை ஒரேமாதிரி அணிந்துகொண்டு பறைகளைத் தீநுனியில் சுழற்றி வாட்டினர். மதுரை நையாண்டி மேளகாரர்கள் வாத்தியங்களை ஓரமாக வைத்துவிட்டு வேகவேகமாக பார்சல் சாப்பாடுகளைப் பிரித்தனர். சேர்கள் வரிசையாகப் போடப்பட்டன. தங்கநகைகளுடன் கிழவியின் படம் போட்ட கண்ணீர் அஞ்சலி போஸ்டர்கள், பேனர்களை விரித்து சரிபார்த்தனர். கந்தன் வருவதைப் பார்த்த திருப்பதி வெண்சங்கு ஊதி மணியடிக்க ஆரம்பித்தான். ஒரே ஊதில் நீளும் சங்கொலியைப் பாதியில் நிப்பாட்டச் சொல்லிவிட்டு போனில் யாரிடமோ பவ்யமாகப் பேசிக்கொண்டிருந்தார் பிரசிடெண்ட்.

 

‘நல்ல நேரத்துலதான் செத்துருக்கு, அய்யருட்டையும் நேரத்தச் சொல்லி கேட்டுட்டேன். ஒன்னும் பிரச்சனையில்ல...’ பேச்சு ஒருபுறம் இருந்தாலும்  கந்தனின் வெறும் கழுத்தைக் கவனிக்க அவர் தவறவில்லை. பிரசிடெண்ட்டுடன் பிறந்த மூன்று தம்பிகளும் வெள்ளை வேட்டி, பனியன் அணிந்து தோளில் துண்டோடு வாசலில் நின்றிருந்தனர். அவர்களும் தனித்தனியே போனில் தகவல்கள் சொல்லியபடியும் ஆட்களிடம் பேசியபடியும் நின்றனர். பிரசிடெண்ட்டின் தங்கச்சியும் மற்ற பெண்களும் சம்பிரதாய ஒப்பாரிகள் வைத்தனர். டமுக்கன் சைக்கிளை விட்டு இறங்கினார். தவ்விய நாய் திருப்பதியிடம் போனது. தண்ணீர் பாட்டிலையும், அரிவாளையும் எடுத்து ஓரமாக வைத்தார்.

 

‘என்னடா... டமுக்கா வெறுங்கழுத்தோட வந்திருக்க’ பிரசிடெண்ட் வினையமாகக் கேட்டார். கந்தன் பிரசிடெண்ட்டை விட இருபத்தைந்து வயது மூத்தவர்.

 

‘இல்லைங்க சாமி... டமுக்கடிக்கக் கூடாதுன்னு வீட்டுக்கு வந்து தலையாரி சொன்னாரு...’ வார்த்தைகளை உடைத்துப் பேசினார் கந்தன்.

 

‘அந்த மசுரலாம் யெங்களுக்குந் தெரியும்’

 

‘பேத்தியா வெலாவரியா சொல்லுச்சு. அதாங்க...’ சங்கடமானார் கந்தன்.

 

‘ஓ சட்டப்படி நடக்குறீகளாக்கும். நடங்க... நடங்க... இப்போ போயி சோலிய  பாரு...’ வெறுப்புடன் கந்தனிடம் பேசினார்.

 

சங்கு ஊதி, மணியடித்துக் கொண்டே நடப்பதைப் பார்த்தான் திருப்பதி.

 

இப்படித்தான் நடக்குமென்று கந்தன் முன்கூட்டியே யோசித்திருந்தார். வேட்டியை மடித்துக்கட்டி அதற்கு மேலே துண்டை முடிந்தார். திருப்பதியைக் கூப்பிட்டு பித்தளைக் கொண்டிகள் பதிக்கப்பட்ட வாசற்கதவை அப்படியே கழட்டி சுவரில் சாய்த்து வைத்தனர். இப்போது ஆட்கள் உள்ளே போகவும், வெளியே வரவும் எளிதாக இருந்தது. நிலைக்கட்டைகள் கொண்ட உத்திரத்தைப் பார்த்தபடி உயிரை விட்டிருந்தாள் கிழவி. உடல் மறைப்புக்கு பேருக்கு சேலை கிடந்தது. புண்ணுக்கு ஈக்கள் சுற்றின. பார்க்கும் போதே எடையற்று இருந்தாள். கிழவியை எரிக்க எவ்வளவு எருக்கள், வைக்கோல், விறகுகள் தேவைப்படும் என்பதைக் கணக்கிட்டார்.  

 

உள்ளூர் ஆட்கள், அக்கம் பக்கம் ஊரார்கள், முக்கியஸ்தர்கள் எல்லாம் மாலையுடன் வர ஆரம்பித்தார்கள். வருகின்ற மாலைகளை எடுத்துத் தொங்கவிட கொட்டகைக்காரரிடம் சொல்லி திண்ணையின் பக்கத்தில் ஊடுகம்பு போடச் சொன்னார் கந்தன். பிணத்தை சாத்தும் வரை வந்தவர்கள் சேரில் அமர்ந்தனர். வீட்டுக்குப் பின்புறம் இடம் இல்லாததால்  மூத்தவர்களின் அறிவுரைப்படி வாசலில் நீளமான மரபெஞ்சைப் போட்டனர். பெஞ்சைச் சுற்றி நாலாபுறமும் சேலைகளை மறைப்பாக்கிப் பிடித்தனர். கிழவியை மகன்கள் தூக்கி வந்து பெஞ்சில் கிடத்தினர். சேலைக்குள் போன பெண்கள் கிழவியை குளிப்பாட்டினர். அவளின் பின்புறம் குதறியிருந்த புண்ணைத் துடைக்க கந்தனைக் கூப்பிட்டனர். கந்தன் சலத்தைத் துடைத்து நன்கு பவுடர் போட்டு துணிகளை கிழித்தி வாய்க்கட்டு, கால்கட்டு போட்டார். கிழவியின் முகத்தில் மஞ்சள் பூசி, பட்டுச்சேலை உடுத்தி நெத்திப்பொட்டு, வகிடுப்பொட்டு, வளையல்கள், பூ இல்லாமல் அலங்கரித்தனர்.

 

ஆட்களிடம் பேசிக்கொண்டிருந்த பிரசிடெண்ட்டிடம் கந்தன் போனார்,

 

‘சாமி...பாடையா இல்ல வண்டியாங்க’ வேலையின் மும்முரத் தொனியில் பேசினார்.

 

‘வண்டிதான்’

 

‘வண்டி வீதிக்குள்ள வராதுங்களே’ சந்தேகத்துடன் கேட்டார் கந்தன்.

 

‘அப்போ நாங்களே தோளுலத் தூக்கிட்டுப் போயிக்கிறோம்’ பிரசிடெண்ட் வெடுக்வெடுக்கென ஒருவரியில் பதில் சொன்னார்.

 

‘அய்யோ அப்டி கேக்கலைங்க. முச்சந்தி வரைக்கும் டெச்சருல கொண்டு போறமான்னு கேக்க வந்தேங்க சாமி...’ கந்தன் பதட்டமானார்.

 

‘டேய்... டெச்சருல போக எங்காத்தா என்ன வக்கத்தவளா. பாடைக்கு மரமும், மட்டையும் வெட்டியாடா இளிச்சா.....’ குரலை உயர்த்தி அடிக்கும் பாவனையில் கந்தனிடம் நடந்துகொண்டார். சபையில் திருப்பதியைத் தவிர யாருக்கும் இது பெரிதாகத் தெரியவில்லை. எதிர்பாராமல் பிரசிடெண்ட் கத்தியதில் கந்தன் சற்று நிலைதடுமாறினார். வழமையாக இருக்கும் துச்சமும், எளக்காரமும் இன்று கூடுதலாய் இருப்பது எதற்கென புரிந்து கொண்டு, விரைவாகத் தன்னை ஆசுவாசப்படுத்த முயன்றார். பல இடங்களை முகர்ந்த நாய் கடைசியாக கண்ணீர் அஞ்சலி போஸ்டரிலிருக்கும் கிழவியின் முகத்தில் மூத்திரம் அடித்தது.

 

‘ஏம்ப்பா ஆளுப் பேரு வந்துட்டு இருக்காங்க. அந்த நாயப் பத்தி விடுங்கப்பா...’ நாயை விரட்டினார்கள்.

 

‘சாமி அது ஒன்னுஞ் செய்யாதுங்க. ஓடம்புக்கு முடியாதது’ கந்தனின் கால்களை வந்து நாய் உரசியது. அதன் தலையைத் தடவினார்.

 

‘அஞ்சு மரக்கா நெல்லு, தேங்கா, வாலப்பலம், ஊதுவத்தி, கடுகு, எண்ணெ, சீயக்கா, பச்சரிசி எல்லாம் வாங்கணும் சாமி. நீங்க யாரயாவது அனுப்பி விட்டீங்கனா நான் இங்க மத்த வேலைகள சீக்கிரம் பாப்பேன்...’ பிரசிடெண்ட்டிடம் தணிந்து சொன்னார் கந்தன்.

 

‘நீயே போயி எல்லாத்தையும் வாங்கிரு. மத்தியானம் மூணு மணிக்கெல்லாம் தூக்கணும். சுடுகாட்டு வேலைக, இங்க இருக்குற வேலைக எல்லாத்தையும் சீக்கிரம் முடிச்சுரு. கடக்காரய்ங்கட்ட எவ்வளவுன்னு எழுதி வாங்கிரு...’ படபடவென சொல்லிவிட்டு ஆட்களைக் கவனிக்கத் தொடங்கினார் பிரசிடெண்ட். திருப்பதி அவனது நண்பனுக்கு போன் செய்து வரச் சொன்னான். மணியையும், சங்கையும் அவனிடம் கொடுத்து வேலை பார்க்கச் சொல்லிவிட்டு கந்தனை தனது வண்டியில் ஏற்றிக்கொண்டு பொருட்கள் வாங்க சோழவந்தானுக்குப் போனான்.

 

‘ஏந்தாத்தா அந்தாளு உம்மேல வல்லு வல்லுனு விழுகுறான்’ எரிச்சலுடன் கேட்டான் திருப்பதி.

 

‘அது இன்னைக்கு நேத்தா நடக்குது... தலையாரி வந்து சொன்ன தகவலு அந்தாளுக்கு வேகாளமா இருக்கு. என்னத்த செய்ய அழுதுட்டு இருந்தாலும் உழுதுட்டு இருக்கனும்ல’ வண்டியை வேகமாக ஓட்டச் சொன்னார் கந்தன். 

 

பதினோரு மணிக்கு மேலானது. இருவரும் இன்னும் சாப்பிடவில்லை. சாப்பிட்டுப் போகலாம் என்று திருப்பதிதான் வற்புறுத்தினான். பொருட்கள் வாங்கிவிட்டு கந்தனும் திருப்பதியும் ஹோட்டலுக்குப் போனார்கள். சங்கு ஊதிய நண்பன் இடையில் எங்கே போனானெனத் தெரியவில்லை. கேத வீட்டிலிருந்து திருப்பதிக்கு போன் மேல் போன் வந்தது. இரண்டு தடவை திருப்பதி போனை எடுக்கவில்லை. மூன்றாவது முறை எடுக்கையில் கந்தனுக்கும், திருப்பதிக்கும் சரமாரியாக வசவு  விழுந்தது. போனுக்கு வெளியே சத்தம் தெளிவாக கேட்டது. இருவரும் சாப்பிடாமாலேயே இலையை மூடினர். பொருட்களோடு வேகமாக கேத வீட்டுக்கு வருகையில் தெரு கொள்ளாத கூட்டமிருந்தது.  வெடிப் பேப்பர்கள் சிதறியிருந்தன. ட்ரம் செட்டும், பறைகளும் மாறி மாறி அடித்தாடினர். பக்கத்தில் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்வது கூட சரியாக கேட்கவில்லை, அவ்வளவு சத்தம். சாப்பாடுகள், டீ கேன்கள், சரக்குப் பாட்டில்கள், வெடிகள் எல்லாம் சாக்குகளில் இறக்கப்பட்டு சப்பளை செய்யப்பட்டன.

 

‘ஏன்டா சோடியாத்தான் போவீங்களா. இன்னும் ஒரு வேல கூட ஒழுங்கா முடியல. இங்க மணியடிக்கக் கூட ஆளக்காணாம்...’ ஆளாளுக்கு இருவரையும் கடாவித் தள்ளினர். இருவரும் எதையும் காதில் வாங்காமல் வேலையைத் தொடங்கினர்.  திருப்பதி ஐந்து நிமிடங்களுக்கு ஒருமுறை மணியடித்து சங்கு ஊதினான். சடம்பு வாட்டர் பாட்டிலின் தண்ணீர் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்தது. கிழவியின் நான்கு மகன்கள், ஒரு மகள், மகன் வழி பேரன் பேத்திகள், மகள் வழி பேரன் பேத்திகள், கிழவிக்கு கூடப் பிறந்தவர்கள், சம்பந்தகாரர்கள், அங்காளி பங்காளிகள், மாமன் மச்சான்கள் என்று எல்லோரையும் கவனமாகக் கேட்டுக் கணக்கெடுத்தார் கந்தன். யார் யார் தண்ணீர் எடுப்பது, யார் யார் நீர்மாலை எடுப்பது, சுடுகாட்டுக்கொள்ளி, மந்தைக்கொள்ளி, பாடைக்கும், சொர்க்க ரதத்துக்கும் எவ்வளவு கதம்பச்சரங்கள், மாலைகள் வாங்க வேண்டும், மண்முட்டிகளின் எண்ணிக்கை என்று புத்தியை ஒருமுகப்படுத்தி மனக்கணக்குப் போட்டார்.  

 

திருப்பதியை இருக்கச் சொல்லிவிட்டு பொருட்கள் வாங்க தனியாகத்தான் சைக்கிளில் போனார். துணைக்கு நாய் மட்டுமே. அனைத்தையும் பாதுகாப்பாக சைக்கிளில் கட்டிவந்து இறக்கினார். வாரிசுகள், உரிமைப்பட்டவர்களை அழைத்து பிணத்துக்கு வாய்க்கரிசி போட்டு எண்ணெய் வைத்து குளிப்பாட்டும் சாங்கியங்களை ஆள் தவறாமல் முடித்தார். எந்தக் கையில் அரிசி வாங்க வேண்டுமென்பதில் அவர்களுக்குள் குழப்பம் உண்டானது. அதற்கு கந்தன்தான் வை  வாங்கினார். கொடிக்காலுக்குப் போய் அகத்தி மரங்கள், பச்சைத் தென்னை மட்டைகள் வெட்டி சுமந்து வந்தார். வந்தவுடன் தட்டி பின்னி  பாடை கட்டத் தொடங்கினார். கிழவியின் சேலைகளை வாங்கி பாடையின் ஊடே வரிவரியாக பலமாகக் கட்டி, தலைப் பொட்டணம் செய்து கதம்பங்களால் அலங்கரித்தார். சொர்க்க ரதத்தையும் ஜோடித்தார். உடனிருந்து திருப்பதி உதவினான்.

 

பாடையையும், வண்டியையும் பார்த்துவிட்டு அலங்காரம் சரியில்லையென பிரசிடெண்ட் தம்பிகள் கந்தனையும், திருப்பதியையும் கட்டியேறினர். கிழவியின் சொந்தங்கள் பெருவாரியாக செய்முறை ‘பச்சை’ சுமந்து வந்தனர். நையாண்டி மேளகாரர்களும், ட்ரம் செட் குழுவினரும் ஒவ்வொரு உறவு வகையறாவின் பேரைச் சொல்லி அவர்களுக்கு வரவேற்புக் கொடுக்கத் தொடங்கினர். இதற்கிடையில் பஞ்சையும், பொன்னத்தியையும் சுடுகாட்டுக்கு வரச்சொல்லுமாறு திருப்பதியிடம் கந்தன் சொன்னார்.

 

மதியம் ஒரு மணிக்கு மேல் ஆனது. வாட்டர் பாட்டிலில் தண்ணீர் முழுமையாக குறைந்திருந்தது. திருப்பதி டீக்கள் குடித்து முடித்திருந்தான். பச்சை எடுத்து முடிக்கும் முன்பே சுடுகாட்டுப் பாதையை கந்தன் சுத்தம் பண்ணி முடித்தார். எருக்கள், வைக்கக்கட்டு, விறகு, மண்ணெண்ணெய் டின்னோடு பஞ்சும், பொன்னாத்தியும் குறுக்கு வழியில் வந்து எரிமேடையில் கிடந்த சரக்குப் பாட்டில்களின் சில்லுகளைப் பொறுக்கி சுத்தம் செய்துவிட்டு, சாந்து மண்ணுக்கு குழி தோண்டத் தொடங்கினர். அடுத்தபடியாக நீர்மாலை சடங்குக்கு ஓடினார் கந்தன். ஆண்களுக்கும், பெண்களுக்கும் ஒற்றைப்படையில் குடங்களைப் பிரித்துக் கொடுத்தார். தண்ணீர் எடுத்து பிணத்துக்கு ஊத்துகையில் குடும்பச் சண்டையில் பெண்கள் கந்தனைப் பொரிந்துத் தள்ளினார்கள். அதைப் பொருட்படுத்தாமல் கொள்ளிக்குடம் கட்டி கங்கு பற்ற வைத்தார். நாலு மணி போல பிணத்தைத் தூக்கி பாடையில் வைத்தனர். பிணத்தை சாய்மானமாகப் படுக்க வைத்து பாடையிலிருந்து அது நழுவாமலிருக்க சில நுணுக்க வேலைகள் செய்தார். தெருவின் இடிபாடுகளைக் கடந்து பிணம் அமரர் ஊர்திக்குப் போனது.

 

கொள்ளிக்குடத்தை பிரசிடெண்ட் கையில் கொடுத்தார். வானவேடிக்கை, போதையாட்டமென ரதம் மந்தைக்கொள்ளி உடைக்கும் இடத்துக்குப் போகவே ஒருமணி நேரமானது. ஐந்து நிமிடங்களில் நடந்து சேரும் இடமது. கந்தன் அசதியிலும், பசியிலும் வழியெங்கும் கடுகுகள் தூவியபடி நடந்தார். கொள்ளிக்குடத்தில் புகை சரியாக வராததால் போதையில் ஆடும் சிறுவர்கள், இளவட்டங்கள் கந்தனைத் திட்டினார்கள். நாயை வெடி போட்டு பயமுறுத்தினார்கள். அது கந்தனிடம் ஒன்டியே வந்தது. மந்தையில் மும்முறை சுத்துகையில் மகளின் கொள்ளிக்குடத்தில் மூன்றாவது கண்ணை கந்தன் அரிவாளால் கொத்தினார். மண்முட்டியில் அரிவாள் சரியாகத் துளையிடாததால் மகளிடம் ஏச்சுப்பேச்சு வாங்கினார்.

    

ஒருவழியாக இருட்டும் நேரத்தில் சுடுகாட்டுக்கு வந்து சேர்ந்தனர். கந்தனும், திருப்பதியும் பிணத்தின் நான்கு மகன்களை இரண்டாகப் பிரித்து மொட்டை போட்டனர். பிரசிடெண்ட்டின் பூச்சியரித்த பொடுகுத் தலையிலிருந்து கத்தி பட்டு ரத்தம் வந்தது. அரைமண்டையோடு கந்தனை எத்தப்போனார். பொறுமையாக மொட்டைகளை முடித்தனர். விறகுகளும், எருக்களும் அடுக்கிய மேடையில் பிணத்தை வாகாக வைத்தார் கந்தன். எல்லோருக்கும் பிணத்தின் முகத்தைக் காண்பித்துவிட்டு அதன் முகத்தை பெரிய எருவால் மூடினார். அதன்மேல் திருப்பதி வைக்கோல் பரப்பினான். சுடுகாட்டு அடிபம்பு வேலை செய்யாததால் பஞ்சும், பொன்னாத்தியும் ஆத்திலிருந்து தண்ணீர் எடுத்து வந்தனர். கந்தன் சாந்துமண் குழைத்து பிணத்தின் மேலே பூசுகையில் மண்ணில் கூடுதல் நீர் சேர்ந்து ஒழுகியது. ஏகத்துக்கும் எல்லோரும் கந்தனை வாயில் வைத்து வண்டாகக் குடைந்தனர். பிறகு ஒரு கூடை மண் சேர்த்து பூசினார்.

 

கொள்ளி வைத்தப் பிறகு, எல்லோரும் கிளம்பினார்கள். மூவரும் பிணத்திடம் இருந்தனர். கந்தன் துண்டை தரையில் விரித்தார். கிராம முக்கியஸ்தர்கள், நெருங்கிய உறவுகள் அதில் போதுமான ஊர் காசு போடவில்லை.

 

‘நாலு பேரு இருக்கோங்க. காலையில இருந்து இன்னும் கஞ்சி குடிக்கல. இந்தக் காசு எப்படிங்க சாமி பத்தும்...’ உரிமையுடன் கேட்டார் கந்தன்.

 

‘எலேய் டமுக்கா வழமை அவ்ளோதான். நாளைக்குப் பாலத் தொளிச்சிட்டு காச வாங்கிக்க. எல்லா அங்கத்தயும் நல்லா சுட்ருடா’ பேச்சை முடித்தனர் .

 

‘அது கூலிங்க. இது ஊர் காசுங்க...’  அவர் சொல்லிமுடிக்கும் முன்பே அவர்கள் திரும்பாமல் நடந்தனர். கந்தன் நொந்து கொண்டார்.

 

இரவாக இரவாக தகன மேடையில் செழும்ப தீ வளர்த்தார்கள். பஞ்சு, பொன்னாத்தியை வீட்டுக்கு அனுப்பினார் கந்தன். திருப்பதியை சோறும், ஜமுக்காளமும் எடுத்துவரச் சொன்னார். அவன் வீட்டுக்கு வருகையில் பேத்தி வெளியில் உட்கார்ந்திருந்தாள். எறும்புகள் மொய்க்கும் மீன்களின் பித்தப்பைகளை ஒவ்வொன்றாக எடுத்து  நசுக்கினாள். பைகளிலிருந்து வழிந்தோடும் கசப்பு நீரின் வழித்தடத்தை ஊர் திசை நோக்கி திருப்பினாள். அவளின் செய்கைகளை தனது மவுன முகத்தால் காற்றுக்கு அசைந்தபடி கவனித்தது ஏறவார டமுக்கு.   ‘அதப்போட்டு ஏன் நோண்டிட்டு இருக்க’ வந்து காலாற அமர்ந்தான் திருப்பதி. கைகளைக் கழுவிவிட்டு தூக்குவாளியில் தாத்தாவுக்கும், அவனுக்கும் சேர்த்து சோறு போட்டாள். தண்ணீர் பாட்டில்களையும், ஜமுக்காளங்களையும் அவனிடம் கொடுத்துவிட்டு சொன்னாள். ‘அவிங்க வீட்டுப் பொணத்த அவிங்கதான் பார்க்கணும்னு சட்டத்தப் போடணும். அதுக்கு ஆர்டர் வர இன்னும் எத்தன காலம் ஆகப்போதோ...’

 

***

முத்துராசா குமார்

Art • Belkis Ayón

***

நன்றிகள் • நீலம் இதழ் (ஜனவரி 2023)

https://theneelam.com/muthurasa-kumar-short-story/

Comments

Popular Posts