கவிதைகள்


கவிதைகள் } 


கிழியாத பாம்புச்சட்டை சுருள்கள்

உடையாத ஈசல் றெக்கைகள்

இனிக்கும் கரையான்புற்று 

துண்டுகள்

இறந்த அம்மாக்களின்

கல்மூக்குத்திகள்

சூரியனை மொய்க்கும் 

தேனீக் கொடுக்குகள்

நிலாவை நக்கும் 

நாயின் நாவுகள் என

பெட்டிக்கடையின் 

கண்ணாடிக் குடுவைகள் 

நிரம்ப உள்ளன.

அனைத்தையும் 

ஒருசுற்று நோட்டமிட்டு

எனது கையிலிருந்த செப்பேடை

பாதி உடைத்துக் கொடுத்து

கொடுக்குகளையும் 

நாவுகளையும் வாங்கினேன்.

இரண்டு கல்மூக்குத்திகளை

எனது சட்டைப்பையில் 

இலவசமாய் நுழைத்த கடைக்காரர்

‘நீயும் உன் தங்கச்சியும்

ஆளுக்கொன்னு எடுத்துக்கங்க’ 

என்றார்.

 

*****

 

பழுப்பிலை நரம்புகளால்

தாய்விலங்கின் மரித்த முலைகளை 

நெய்து

வானை நோக்கி வைக்கிறேன்.

முலைத் துவாரங்களில்

நிரம்பி வழியும் மழையினை

முண்டியடித்து குடிக்கும் குட்டிகளில்

சவலைப் பிள்ளையொன்று

முலையொன்ற முட்டி

விலங்கை உசுப்புகிறது.

 

*****

 

கற்களால் தன்னைத்தானே

தலையில் அடித்துக்கொள்ளும் 

நண்பனின் கைகள்

சங்கிலியால் இறுக்கப்பட்டுள்ளது.

யாருமற்ற நேரத்தில் கைவிலங்கை 

அவிழ்த்தேன்.

பறவைக்கான சுருக்குக் கண்ணியை

பழுதற்று உருவாக்கிய நண்பன்

கண்ணியில் கள்ளிப்பூவைச் சூடி

பறவை உயிரை சிங்காரித்தான்.

கல்லில் சுருண்டிருக்கும்

காய்ந்த கதம்ப மணத்தை

அவனுக்கு பரிசளிக்கிறேன்.

 

*****

 

எச்சில் தொட்டு அழிக்க முடியாத 

தழும்புக்குள்

விதையை நட்டுள்ளேன்.

தளிர் தயக்கம்

செடி பதட்டம்

மரம் பயம்

முறிகிளை புண்

விதையிருளே நிம்மதி.

குற்றவுணர்வு கண்ணீர்

தழும்பின் வழுவழுப்பில் 

விழுகையில்

மரமாகிறது விதை.

 

****

முத்துராசா குமார்

புகைப்படம் - வினோத் பாலுச்சாமி


 


Comments

Popular Posts