சென்னை புத்தகக் காட்சி 2024 - கவிதை வாசிப்பு


சென்னை புத்தகக் காட்சி 2024 -
நவீனக் கவிதைகள் வாசிப்புக் கூடுகையில் எனது 'கழுமரம்' கவிதைத் தொகுப்பிலிருந்து நான் வாசித்த கவிதை.

{கழுமரத்தி}

ஏழு கழுமரத்துக்கும்
ஏழு ஆண் தலச்சம்பிள்ளைகளைக் 
கேட்டுவாங்கித் தின்ற கழுவடியானை
வாரிசிழந்தவள்
தனது தோள்பட்டையிலிருந்து 
விரட்டினாள்.
சிசுவுக்கு மாற்றாக 
செஞ்சேவல்களை வேண்டிய கழுவடியானுக்கு
வேலமரங்களைக் 
கழுமரங்களாக்கி ஊன்றுகிறாள்.
கழுக்கூர்களைக் கண்ணீர் உகுத்துச் செய்கிறார் 
இரும்புத்தச்சர்.
பின்னிரவுக் கழுவில் குத்தப்பட்ட சேவல்களின் 
பதினான்கு கண்களும்
சூரியனுக்காக 
கொண்டைகள் நடுங்க
மயங்காது காத்திருக்கின்றன.
விடியலைப் பார்த்தவுடன்
கழுமரங்கள் அசைய
றெக்கைகளை விரித்தடிக்கின்றன.
கூவக் கூவ
சந்தனங்குங்குமம் மணக்கும்
கழுமடியைக் கட்டிப்பிடித்து அழுகிறாள்.
தூக்கணாங்குருவிகளின் 
கைவிடப்பட்ட நார்க்கூடுகளால்
பனிக்கழுமரத்தை எரிக்கிறாள்.
வேப்பங்கனியின் 
இனிப்புச்சதையை அப்பி
வெயில் கழுமரத்தை
குளிர்விக்கிறாள்.

*
{கழுமரம் • முத்துராசா குமார்}

விகடன் தீபாவளி மலரில் வெளிவந்த 'கழுமரத்தி' கவிதைக்கு ஓவியர் ஹாசிப்கான் அவர்கள் வரைந்த ஓவியம்.

Comments

Popular Posts