தமிழ்க்கூடல் - அரசு உயர்நிலைப் பள்ளி, விழுப்புரம்


விழுப்புரம் மாவட்டம் அரசமங்கலம் கிராமத்திலுள்ள அரசு உயர்நிலைப் பள்ளியின் 'தமிழ்க்கூடல்' நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டதில் மிக்க மகிழ்ச்சி. ஆலமரத்தின் பிரம்மாண்ட விழுதுகள் பூமியைத் தகர்த்து ஊன்றியிருக்க அதன் முன்னூறு வயது நிழலுக்குள்தான் பள்ளியும் மாணவப் பிள்ளைகளும் இருக்கின்றனர். சொட்டாங்கல், தாயம், பல்லாங்குழி, பரமபதம், கிட்டிப்பிள்ளை, வார்த்தைகள் சேர்த்தல் போன்ற பாரம்பரிய விளையாட்டுகளில் கலந்து கொண்டு வெற்றியடைந்த பிள்ளைகளுக்கு பாராட்டுச் சான்றிதழும் பரிசும் வழங்கினேன். பாரம்பரிய விளையாட்டுகளின் முக்கியத்துவம் மற்றும் அந்த விளையாட்டுகள் எவ்வாறு கல்விக்கும் வாழ்வுக்கும் பயனளிக்கிறது என்பதை வில்லுப்பாட்டின் மூலம் மாணவர்கள் பாடியது மிகச் சிறப்பாய் இருந்தது.

வாசிப்பின் அவசியம் குறித்து பேசிவிட்டு எழுத்தாளர் யூமா வாசுகி எழுதிய 'தேநீர்க் குடில்' (தன்னறம் வெளியீடு) கதையை பிள்ளைகளிடம் பகிர்ந்து கொண்டேன். மிக எளிய குடும்பத்தைச் சேர்ந்த அரசுப் பள்ளி மாணவனொருவன் பிறவி நோயினால் (பரவக்கூடியதல்ல) தனிமையில் அல்லலுறுகிறான். இலக்கிய வாசிப்பும், கதைகளும் அவனது தனிமையை படிப்படியாக நீக்கி தன்னம்பிக்கை அளித்து வாழ்வையும் கல்வியையும் மேம்படுத்தும். கிளைக்கதைகளுடன் விரியும் இக்கதையில் பிள்ளைகள் உணர்வுப்பூர்வமாய் ஒன்றினர். 'தேநீர்க் குடில்' கேட்டவுடன் மாணவர்களில் சிலர் எழுந்து அவர்கள் படித்த, கேட்ட கதைகளை உயிர்ப்பாக சொல்லினர்.

மழையிலும் வெயிலிலும் கிடந்து சட்டை கிழிந்து போன சோளக்காட்டு பொம்மைக்கு சட்டை தைத்துக் கொடுத்த காக்காவின் கதையை மாணவரொருவர் அழகாய் சொன்னார். 

'இந்தக் கதைய யாருப்பா ஒனக்கு சொன்னது' என மனிதரை மனதில் வைத்துக் கேட்டேன்.

'அந்தக் காக்காண்ணா' என மாணவர் வெள்ளந்தியாக சொல்ல எனது வயதுக்கேற்ற அறிவிலிருந்து சந்தோசத்துடன் கீழே விழுந்தேன்.

மதுரை மாவட்டம் சோழவந்தான், முள்ளிப்பள்ளம் அரசுப் பள்ளியில் படித்த ஞாபகங்கள் மேலிட இந்த நிகழ்ச்சி மனதுக்கு நிறைவாக நெகிழ்ச்சியாக அமைந்தது.

தமிழாசிரியர் ஹேமலதா, தலைமையாசிரியர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகளும் அன்பும்!

♥🌻

ஜனவரி 31, 2025
வெள்ளி

Comments