பிடிமண் • உயிர்த்தெழல் • ஓவியங்கள்
எனது 'பிடிமண்' கவிதைத் தொகுப்பில் வரக்கூடிய 'உயிர்த்தெழல்' கவிதையின் வாசிப்பனுபவத்தை உணர்வுப்பூர்வமான ஓவியமாய் படைத்துள்ளார் இசைக்கலைஞர் சிவா.
சிவா அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகளும் அன்பும்!
{உயிர்த்தெழல்}
சுருண்ட ரயில்பூச்சியாக
வால் வைத்திருக்கும்
தெருவின் கறுவெள்ளைப்
பொட்டை நாயை
இப்போதெல்லாம் அடிப்பதேயில்லை.
யார் அதட்டினாலும் அவர்களோடு
சண்டைக்குப் போகிறேன்.
புணர்தலில் மாட்டியிருக்கையில்
கல்லெடுத்து அடிக்கும்
சிறுவர்களைத் துரத்திவிட்டு
முடியும்வரை
காவலுக்கு நிற்கிறேன்.
ரத்த வாயோடு
புறாக்குஞ்சுகளைக் கவ்வி வருகையில்
மறைவான இடம் காட்டுகிறேன்.
அட்டூழியங்களைப் பொறுக்காத மக்கள்
என்னை மண்டையிலடித்துக் கொல்ல
ஊராட்சியில் முறையிட்டார்கள்.
பணியாட்களின் கம்பிவளையம்
கழுத்தை நெரிக்கிறது.
கருவேலங்கட்டை தலையில்
இறங்கப் போகிறது.
அதற்குள்
ஏனென்ற கதையைச் சொல்லிவிடுகிறேன்.
'இறந்து பிறந்த
தலச்சம்பிள்ளையை
தொப்புள்கொடியோடு
மூன்றடிக் குழிக்குள் இறக்கி
கண்ணாடிச் சில்லுகள்
கற்றாழைகள்
இலந்தை முட்களால் மூடினேன்.
காலையில்
எனது மகளைக் கிளறியெடுத்து தின்றது நாய்.
அழுது துரத்தித் தோற்றேன்.
மண்ணிலிருந்து மீண்டும்
வயிறுக்குள் போனாள்
மகள்'.
•••
Comments
Post a Comment