கனலி இணையதளத்தில் வெளிவந்திருக்கும் எனது 'கட்டக்கால் வேட்டை' கவிதை குறித்து கவிஞர் மௌனன் யாத்ரீகா அவர்களின் பதிவு!

கனலிக்கும், கவிஞர் மௌனன் யாத்ரீகா அவர்களுக்கும் அன்பின் நன்றிகள்!

🔪

கட்டக்கால் வேட்டை
__________________

பிடிபடுவதற்கு முன்பு பன்றிகளின் பாய்ச்சல் எப்படி இருக்குமென்று எனக்குத் தெரியும். அதுவும் உடல் கொழுத்த பெரிய பன்றிகளின் பாய்ச்சல் எதிர்படும் ஆளைச் சும்மா தெறிக்கவிடும் ஆற்றலுடையது. நான் சொல்லும் இப்பன்றிகள் தடவிக் கொடுத்து வளர்க்கப்படுபவை. இவைகளின் பாய்ச்சலே இப்படி என்றால், காட்டில் அதுபாட்டுக்கு முறுக்கேறி வளரும் காட்டுப்பன்றிகளை நினைத்துப் பாருங்கள். அது மூர்க்கமேறி ஓடும்போது அதைவிட கனத்த யானையே வந்தாலும் முட்டித் தூக்கி எட்டுக் குட்டிக்கரணம் போட வைத்துவிடும்.

நாகேஷ் என்றொரு நண்பன் எனக்குண்டு. எங்கள் குடியிருப்புகளுக்கும் அவனுடைய குடியிருப்புகளுக்கும் இடையே ஒரு நீண்ட பள்ளமான ஒடப்பும், ஒரு சுடுகாடும் மட்டுமே உண்டு. அவனுடைய கொட்டடியிலிருந்து பன்றிகளை அவிழ்த்து விட்டானென்றால் எங்கள் குடியிருப்புகளுக்கு அவற்றின் காய்ந்த மலத்திலிருந்து வெளியேறும் பட்டைச்சரக்கின் கரகரப்பான வாசனையடிக்கும். அவனிடம் இருபதுக்கும் மேற்பட்ட பன்றிகள் இருந்தன. குட்டிகள், பெரிய கொழுத்தப் பன்றிகள், தோல் தளர்ந்து தொங்கும் முதிர்ந்த பன்றிகள் எல்லாமே இருந்தன.

அவற்றை மேய்ச்சலுக்கு விட்டுவிட்டு பலமணி நேரம் கழித்துத்தான் - எப்படியும் பிற்பகல் ஆகியிருக்கும்- நாகேஷ் ஒரு மலம் எடுக்கும் (பன்றியின் காய்ந்த மலம்) தொரட்டியோடு வருவான். அவனுடைய பன்றிகள் எங்கள் குடியிருப்புகளை ஒட்டியுள்ள கரிவேலிப் புதரில் நிழலுக்கு முண்டிக் கிடக்கும்.

அவன் அவைகளைப் பத்திக்கொண்டு போவதைப் பார்ப்பேன். பன்றிகள் ரொம்ப சாதுவான மிருகமாகத் தோன்றும்.

ஒருநாள்....
நாகேஷும் அவனுடைய அண்ணனும் மற்றொருவனும் எங்கள் குடியிருப்புகளின் வழியே மூச்சிரைக்க ஓடினார்கள். நல்ல மட்டை வெய்யில் அப்போது. அவர்களுடைய மூச்சைக் காட்டிலும் அதிக சத்தத்துடன் கேட்டது ஒரு பன்றியின் மூச்சு. அவர்கள் மூன்று திக்கில் பிரிந்தார்கள். ஒவ்வொருவரிடமும் பன்றியின் கழுத்தை இறுக்கும் கம்பி கட்டிய நீண்ட மூங்கில் இருந்தது.

ஊரில் பெரிதாக ஆட்கள் இல்லை. நாகேஷ் என் வீட்டின் பக்கச் சுவற்றில் மறைந்து கொண்டான். மற்றவர்கள் அப்படியாக நின்று கொள்ள எங்கிருந்தோ ஒரு விசில் சத்தம். அந்தச் சத்தத்தைக் கேட்டதும் நாகேஷின் காது கூர்மையானது. சற்று தூரத்தில் பன்றியின் உறுமல். நாகேஷ் தன் கையில் இருந்த மூங்கிலை தயாராக வைத்துக்கொண்டான். இப்போது பெரிய உறுமல். மற்றொரு இடத்தில் பதுங்கியிருந்தவன் திடுமெனப் பாய்கிறான். அவனுக்கு முன் பன்றி ஓடிவந்து விட்டது. பன்றியின் பின்னால் துரத்தி வந்தவன் புதிதாய் இருந்தான். அடுத்து நாகேஷ்தான் இலக்கு. பன்றி அந்த வழியேதான் ஓடிவரும் என்ற கணக்குத் தப்பவில்லை.

பன்றி ஓடி வந்த வேகத்துக்கும் அதன் கழுத்தை இறுக்கும் கம்பி வளையத்தை அதன் கழுத்தில் நாகேஷ் மாட்டுவதற்கும் கணகச்சிதமாக நேரம் அமைந்தது. போட்ட வேகத்தில் நாகேஷ் அதன் முன் பாய்ந்தான். பயங்கர உறுமல்.

நான், பன்றி மாட்டிக்கொண்டது என்று நினைத்தேன். கண்ணிமைக்கும் நேரத்தில் அவனைத் தூக்கிப் பந்தாடிவிட்டு அது ஓடிப்போயிற்றென்று அவன் புரண்டு எழுந்த பிறகுதான் தெரிந்தது.

நான் நாகேஷிடம் கேட்டேன்.
" நாகேஷ் நீங்க வேட்டையாடுறீங்களா?"
அவன்,
" இல்லை" என்றான்.
பிறகு சொன்னான்:
 இதுவும் வேட்டை மாதிரிதான்.

******
இந்தக் காட்சியை ஏன் இப்போது இப்படி விவரித்தேன் என்று உங்களுக்கு குழப்பமாக இருக்கும். காரணம் இருக்கிறது. இன்று கனலி இதழில் வெளிவந்த ஒரு கவிதையை வாசித்தேன். பன்றி வேட்டையைப் பற்றியது. முத்துராசா குமார் எழுதியது.
வேட்டையில்போது பாயும் பன்றியை முடி முளைத்த இருள் என்று வர்ணித்திருக்கும் இடத்தில் தம்பி அசத்திவிட்டார். வேட்டையாட வந்திருப்பது காட்டுக்கு. அந்தக் காட்டின் ஒட்டுமொத்த கனமும் பன்றியினுடையது போலவே இருக்குமென்று அவதானித்தால் புரியும். குட்டி ஈன்ற விலங்குகள் மூர்க்கம் அதிகமானவை. அவற்றை வேட்டையாட வேண்டுமெனில் பின்னங்கால் எலும்பில் வைரம் பாய்ந்திருக்க வேண்டும். அப்படியொரு வேட்டை அனுபவத்தை ஒரு சிறிய கவிதையில் கொடுத்திருப்பது பெரிய விசயம்.

வாழ்த்துகள் முத்துராசா குமார்.

¥

கவிதையை வாசிக்க

https://muthurasa.blogspot.com/?m=1


Comments